ஆப்கானிஸ்தான் வெற்றியை இந்தியர்கள் கொண்டாட காரணம் என்ன?
ஆஸ்திரேலியாவை வெளியேற்றியது மட்டுமல்ல.. அவர்கள் ஏறக்குறைய இந்தியாவின் வளர்ப்பு பிள்ளை மாதிரி. அவர்களது நாட்டில் நிலவும் சூழல் காரணமாக பயிற்சி எடுக்க கூட போதுமான கட்டமைப்புகள் இல்லை . ஆப்கானிஸ்தானுக்கு தேவையான மைதான வசதி, கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியாவில் உள்ள நொய்டா மைதானத்தை தான் அவர்களது உள்ளூர் மைதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். நொய்டா மைதானம் மட்டுமல்ல டேராடுன் மைதானதையும் அவர்களது மைதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மைதானங்களை பயன்படுத்தி அயர்லாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடரையே நடத்தினார்கள். அதே போல இதுவரை அந்த அணியுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா அணிகள் ஐசிசி போட்டித் தொடர்களில் மட்டுமே ஆடி வருகின்றனர்.
இந்தியா தான் அவர்களை முதன் முதலில் அழைத்து டெஸ்ட் போட்டியை பெங்களூரில் ஆட வைத்தது. அப்போட்டியை இரண்டு நாட்களில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே, ஆப்கான் வீரர்களை அழைத்து வெற்றிக் கோப்பையுடன் நிற்க வைத்து போட்டோஷூட் எடுத்து ஊக்கபடுத்தினார்.ஆப்கானிஸ்தானை அழைத்து இந்தியா இருதரப்பு தொடரையும் நடத்தியுள்ளது. அதேபோல ஆப்கான் கிரிக்கெட் வளர்ச்சியில் இந்தியாவின் லால் சந்த் ராஜ்புத் (2007 இந்தியா உலகக்கோப்பை வாங்கிய அணியில் பங்களித்தவர்), மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா என பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளார்கள்.
அதேபோல ஐபிஎல் தொடரில் ஆப்கான் வீரர்கள் தங்களது திறமையை உலகுக்கு காட்டும் தளமாக பார்க்கிறார்கள்..
இவ்வாறு பல விஷயங்களில் நட்புறவுடன் இருப்பதால் தான் ஆப்கனிஸ்தான் வெற்றியை இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். விரைவில் இந்தியாவை வீழ்த்தும் அணியாகவும் உருவெடுப்பார்கள். வளர்த்த கிடா மார்பில் பாய்வது வழக்கம் தானே!