பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது ஏன்?
தமிழ்நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய பா.ஜ.க அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்த்ய அரசின் பங்கான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயில் ஒரு ரூபாய் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை.இதேபோல் 2023-ம் ஆண்டு அடுத்தடுத்து 2 இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்த நிலையில், பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரத்து 986 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால் 276 கோடி ரூபாயை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியது. இதேபோல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியையும் மோடி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி சென்றார். அப்போது விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
அங்கிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தினார்.இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
"பிரதமருடனான சந்திப்பின்போது 3 முக்கிய கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்தினேன். இதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியது போலவே இரண்டாம் கட்டப் பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு.
அதைத் தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து கடந்த 2020ம் ஆண்டு இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை ரூ.18,564 கோடி செலவிடப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படாததால் மத்திய அரசின் நிதி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை. இதனால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி இந்த நிதியை வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறேன்.இரண்டாவது, மத்திய அரசு 60 விழுக்காடு நிதியும், மாநில அரசு 40 விழுக்காடு நிதியும் அளித்து செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டியது ரூ.2152 கோடி. இந்தத் தொகையில் முதல் தவணை இதுவரை வழங்கப்படவில்லை. இத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததே இதற்கு காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. எந்தவொரு மாநிலத்தின் மீதும் மொழி திணிப்பு இருக்காது என தேசிய கல்விக் கொள்கை உறுதியளித்திருந்தாலும், அதற்கான ஷரத்து ஒருங்கிணைந்த கல்வித் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இல்லை. எனவே இந்த ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும் என மத்திய அரசிடம் சொல்லிக்கொண்டு வருகிறோம்.இச்சூழலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என காரணம் காட்டி நிதியை விடுவிக்காததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளேன்.
மூன்றாவதாக தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னை குறித்து விரிவாக சொல்லியிருக்கிறேன். நம்முடைய பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்கப் போகும் தமிழக மீனவர்கள், அவர்களின் மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து துன்புறுத்துகின்றனர்.இதுபற்றி பிரதமரிடமும், வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் நான் பலமுறை வலியுறுத்தியும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. 191 மீன்பிடி படகுகளும், 145 மீனவர்களும் தற்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.மீனவர்களையும் படகுகளையும் விடுவிப்பதோடு, அடுத்த மாதம் கொழும்பில் நடைபெற இருக்கும் இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே நடைபெற உள்ள கூட்டுக் குழு கூட்டத்தில் இதுகுறித்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சந்திப்பு தொடர்பான கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கையில், "மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன்" என்றார்.