மோடி அபசகுனம் என்று சொல்வது யார்? ராகுலா? பாஜகவா?
ராகுல் காந்தி அந்த மேடையில் பனௌட்டி, அதாவது அபசகுனம் வந்தது, பாய்ஸ் தோற்றனர் என்கிறார். யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அவர் கூறியது இதுதான்… உலகக் கோப்பையில் நமது அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். கோப்பையை நெருங்கியும் விட்டோம். ஆனால் ஓர் கெட்ட சகுனம் அவர்களை தோற்கடித்து விட்டது.
இதில் எந்த இடத்திலும் மோடியை குறிப்பிடவில்லை. ஆனால் மோடியை அபசகுனம் என்று பாஜக முடிவு செய்தது. ஓட்டு வாங்குவதற்காக அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதை வைத்து அரசியல் செய்ய பரபரப்பாக்குகின்றனர். இதன் மூலம் அனுதாபம் பெற பாஜக திட்டமிட்டு செயல்படுத்துகின்றது. ஆனால் மோடியால் நேரு குடும்பத்துக்கு ஏற்பட்ட வெறுப்பும், அவப்பெயரும் ஏராளம்.
கடந்த 2021 தேர்தலின் போது கூட்டணி உருவான விதத்தை விளக்குவதற்காக ஆ.ராசா கூறிய ஓர் உதாரணத்தை கையில் எடுத்துக் கொண்டார் எடப்பாடி. என் தாயை பழித்து பேசிட்டாங்க. ஓட்டு போடுங்க… என்று பிரசாரம் செய்தார்.
இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை.
சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியதை இந்துக்களை ஒழிப்போம் என்று சொன்னதாக சர்ச்சையை கிளப்பியதும் அது எப்படி திருடர்களின் பெயர்களில் எல்லாம் மோடி என்பது இருக்கிறது என்று கூறியதை மோடி சமூகத்தினரையே இழிவுப்படுத்தியதாக கூறியதும் இப்படித் தான்.
நாடு முழுக்க எதிர்ப்பு அலை இருப்பதால் எப்படியாவது அனுதாப ஓட்டுகளை பெற்று விட வேண்டும் என்று பாஜக களம் இறங்குகிறது. ஆனால் மக்கள் மனம் இரங்கும் நிலையில் இல்லை.