அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் யார் தெரியுமோ?
சட்ட விரோதமான குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து திரும்பவும் நாடு கடத்தப்படுவதும் அவர்கள் ராணுவ விமானத்தில் குவிக்கப்பட்டு இந்தியாவில் இறக்கப் படுவதும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இவர்களை 'என்ஆர்ஐக்கள்' என்று வகைப்படுத்தி அவர்களை மோடி ஆதரவாளர்களாகவும், 'சங்கி'களாகவும் சித்தரித்து பதிவுகள் பார்க்கிறேன். 'நல்லா வேணும்' எனும் தொனி பரவி விரவிக் கிடக்கிறது.இவர்கள் எல்லாருமே சட்டவிரோத குடியேறிகள். முறைப்படி விசா வாங்கிக் கொண்டோ, வேலை அல்லது மாணவர் கேட்டகிரியிலோ போனவர்கள் இல்லை. அநேகமாக ஏதோ ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து சிலே, பொலிவியா என்று தென் அமெரிக்காவின் சிறு சிறு நாடுகளில் போய் இறங்கியவர்கள்.
அங்கிருந்து சாலை, ரயில், கண்டெய்னர் லாரிகள் பயணித்து மெக்சிகோ எல்லைக்குப் போனவர்கள். குப்பை வண்டிகள் மூலம் கூடப் பயணங்கள் நடந்திருக்கின்றன. மெக்சிகோ எல்லையில் உள்ள காடுகள் வழியே பல நாட்கள் சிறு குழுக்களாக, சோறு தண்ணி இல்லாமல் நடந்து போய், அமெரிக்க எல்லைப் படையின் கண்ணில் மண்ணைத் தூவிக் கடந்து அமெரிக்கா வந்தடைந்தவர்கள். காடுகளில் சிக்கி அல்லது எல்லைப் படையிடம் சிக்கி உயிரிழந்தவர்களைத் தாண்டிப் பிழைத்து தப்பித்தவர்கள்தான் இவர்கள்.
இவர்களிடம் எந்த அதிகாரபூர்வ ஆவணமும் இருக்காது. அங்கே எந்த நிறுவனத்திலும் அவர்கள் வேலைக்குச் சேர முடியாது. வங்கிக் கணக்குக் கூட திறந்திருக்க முடியாது. சிறு குறு நிறுவனங்களில் எடுபிடி வேலை அல்லது இந்தியர்கள் மற்றும் இதரர்கள் நடத்தும் உணவகங்களில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அமெரிக்க அரசு விதித்திருக்கும் குறைந்தபட்ச ஊதிய வரம்பில் பாதிதான் இவர்களுக்கு சம்பளமாக அதுவும் ரொக்கமாக கையில் கிடைக்கும். அதை வைத்து 10-15 பேர் ஒரே வீட்டில் வாடைகையைப் பகிர்ந்து ஒரே சமையலை உண்டு வாழ்ந்து கொண்டு, ஹவாலா மூலம் சம்பளத்தின் ஒரு பகுதியை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டு இருப்பார்கள்.இதுதான் இவர்கள் வாழ்க்கை. ஏறக்குறைய சென்னை அபார்ட்மெண்டுகளில் செக்யூரிட்டி வேலை செய்யும் வட இந்தியர்களின் நிலைதான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் இவர்களின் நிலை. இவர்கள் NRIதான். ஆனால் Non-Resident Indians கிடையாது. Not-Returnable Indians.
மோடிக்கோ ராகுலுக்கோ ஆதரவோ எதிர்ப்போ தரும் நிலையில் இவர்கள் வாழ்க்கை இருப்பதில்லை. அதெல்லாம் வேறு குரூப். மோடியின் வருகைகளின் போது அரங்கை நிரப்பி 'மோடி.. மோடி' என்று கூக்குரலிட்டவர்கள் வேறு. இவர்கள் வேறு. மோடியைப் பார்ப்பதையெல்லாம் விடுங்கள். ஞாயிறு அன்று வசிப்பிடத்தின் பக்கத்தில் உள்ள மால் போய் ஒரு ஐஸ்கிரீம் கூட இவர்களால் வாங்கி சாப்பிட முடியாது. இவர்களின் வாழ்க்கை குறித்து ஷாருக் நடித்த 'டங்கி' எனும் ஒரு படம் இருக்கிறது. நேரமிருந்தால் அதைப் பாருங்கள்.நான் இங்கிலாந்தில் வசித்த போது நேரடியாகவே இப்படி சிலரை பார்த்திருக்கிறேன்.
இந்தியர்கள், பாகிஸ்தானிகள், இலங்கைத் தமிழர்கள் என்று பல நாடுகளில் இருந்து வந்தவர்கள். பெரும் சோகம் கவ்விய வாழ்க்கை இவர்கள் வாழ்க்கை. இப்போது இந்தியா திருப்பி அனுப்பப்பட்டிருப்பவர்கள் அந்த மாதிரியான 'டங்கி' குழுக்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பார்கள். தென் அமெரிக்கா வழியே பயணிக்க உதவிய இந்திய ஏஜெண்ட்டுக்கு லட்சங்களில் பணம் கொடுத்திருப்பார்கள். அந்தப் பணம் கடன் வாங்கி கொடுக்கப்பட்டதாகவே இருக்கும். இப்போது அமெரிக்க சம்பள வரத்து நின்று போனதால் இவர்களுக்கு அந்தக் கடனை எப்படித் திருப்புவது எனும் மாபெரும் கவலையும் தொற்றி இருக்கும். அடுத்து இந்தியாவில் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது எனும் நிலையின்மையும் கவ்வி இருக்கும். இவர்களைப் பார்த்து பெரும் அனுதாபம் வர வேண்டாம். இப்படி நாடுகளைத் தாண்டி பெரும் ஆபத்தையும் மீறி போக வேண்டி இருக்கும் அவல நிலையை எண்ணி அறச்சீற்றம் கூட வர வேண்டாம்.குறைந்த பட்சம் இவர்களைக் கலாய்க்காமல் இருந்தால் போதும். நன்றி.