எங்கே நிம்மதி.. எங்கே நிம்மதி - தேடிப் பார்த்தேன்!
இப்போது கிளினிக்கில் அதிகப் பெரும்பான்மையாக கண்டு வரும் பிரச்சனையாக இருப்பது மன அமைதியின்மை. மனம் அமைதி கொள்ள மறுப்பது என்பது மன நோயின் தொடக்கமாக இருக்கிறது. 2030இல் இந்தியாவில் மனத்தாழ்வு நிலை எனும் டிப்ரசன் வந்து பாதிக்கப்பட்டோர் மக்கள் தொகை மிக அதிகமாக கூடப்போகிறது என்கின்றன தொலைநோக்கு ஆய்வுகள்.உண்மையில் இந்த மன அமைதி எங்கு தான் இருக்கிறது? அதை அடைய பலர் புனித யாத்திரை செல்கிறோம். பலர் கோவில் ஆலயங்கள் செல்கிறோம்.பலர் மது / புகை அருந்தி மன அமைதியை தவறான வழியில் தேடுகின்றனர். நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொறுத்து நமது மன அமைதி அமைகிறது..!தாயின் கருவறைக்குள் நிம்மதியாய் உறக்கம் கண்டிருந்த நாம் வெளியே வந்த பொழுதில் இருந்து உலகத்தின் தேவைகள் நம்மை ஆட்கொள்கின்றன .இருப்பினும் குழந்தையாய் பேதையாய் இருக்கும் போது நாம் உறங்கிய உறக்கம் இப்போது நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப்போகிறது.குழந்தையைப் போல் ஒரு உறக்கத்தை இங்கு பெரும்பான்மையினரால் கற்பனை கூட செய்ய முடிவதில்லை.
உறக்கம் என்பது இயற்கையானது . அந்த உறக்கம் வரமறுப்பது என்பது மனநோயின் ஆரம்ப அறிகுறி.குழந்தை பருவத்தில் எளிதாக வந்த உறக்கம் ஏன் வயதாக வயதாக வரமறுக்கிறது? இதற்கு உடல் சார்ந்த மூளையில் உள்ள ரசாயன மாற்றங்கள் காரணமாக இருக்கின்றன.இருப்பினும் நம் மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவையிரண்டையும் தனித்தனியாக பார்க்கவே முடியாது. உடலும் மனமும் ஒன்றோடு இணைந்ததே நம் உயிர் வாழ்க்கை.மனதின் நோய் உடலையும் உடலின் நோய் மனதையும் பாதிக்கிறது .மன அமைதியின்மை என்பது பெரும்பாலும் நம்மிடம் இருப்பதில்லை. ஆனால் அது நம்மீது நமது சமூகத்தால் திணிக்கப்படுகிறது .ஒருவரை நம்மோடு நாம் ஒப்பீடு செய்யும் போது நமது மன அமைதி கெடுகிறது.
இந்த உலக வாழ்க்கையை "போட்டி மனப்பான்மையுடன் " தொடர்ந்து அணுகுவதால் நமது மன அமைதி கெடுகிறது .நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரையும் போட்டியாளராக அணுகுவது மன அமைதிக்கு ஊறு செய்கிறது. நமது வாழ்க்கை நமக்கு கிடைத்து செல்வங்கள் , நமக்கு இறைவன் அருளியவற்றின் மீது தொடர்ந்து திருப்தியின்மை நிலவுவது நம்மை காலப்போக்கில் மனநோய்க்கு தள்ளுகிறது. இவற்றுக்கெல்லாம் நமது உடல்..மூளை.. ரசாயனங்கள் மட்டுமே காரணம் என்று கூறி நமது பங்கை தட்டிக்கழித்து விட முடியாது. உடலுக்கு இருக்கும் அதே பங்கு நமது மனதுக்கும் அதை நாம் எத்தனை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்கிறோம் என்பதற்கும் இருக்கிறது. நாம் அனைவரும் வாழ்க்கையை ஒரு ரேஸ் போன்ற கண்ணோட்டத்தில் அணுகுகிறோம். இது "தவறு". ரேஸ்/ ஓட்டப்பந்தயம் போன்ற கண்ணோட்டத்தில் அணுகும் போது நாம் நம்மை மட்டும் பார்த்து ஓடாமல் அருகில் இருப்பவனையும் பார்த்து அவன் முந்தியா நான் முந்தியா என்று ஓட வேண்டியிருக்கிறது.மேலும் அடுத்தவன் ட்ராக்கில் ஓடும் பழக்கம். அடுத்தவன் காலை வாரிவிடும் பழக்கமும் வருகிறது.
அப்படி வாழ்க்கையை ரேஸ் போன்று அணுகும் போது எப்படியாவது அடுத்தவனை முந்தி நாம் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி வருகிறது.அந்த வெறி கண்முன் இருக்கும் அத்தனையையும் மறைக்கிறது. அந்த வெறி "வெற்றியை" மட்டுமே கண்முன் காட்டுகிறது. தோல்வியை ஏற்க மறுக்கிறது. இதன் தொடர்ச்சியாக மன அமைதி சிதைகிறது.ஆனால் உண்மை நிலை என்ன?. "வாழ்க்கை"யை என்றும் மாரத்தான் ஓட்டமாக தான் ஓட வேண்டும். மாரத்தானில் யாருக்கும் வெற்றி தோல்வி கிடையாது. அருகில் ஓடுபவர் போட்டியாளர் அல்ல. அவரும் சக பயணி. இப்படி நினைக்கும் போது.. நம்முடன் ஓடும் சக பயணிக்கு தாகம் ஏற்பட்டால் நீர் தரலாம்.புண் ஏற்பட்டால் மருந்திடலாம். இருவரும் சேர்ந்து ஓடி பயண தூரத்தை கடக்கலாம். சக பயணிக்கு நம்மைப்போன்று ஓட காலணிகள் இல்லையென்றால் அவருக்கும் நம்மிடம் இருக்கும் எக்ஸ்ட்ரா காலணிகளை தரலாம்.அவர் அவரிடம் இருக்கும் தேவைக்கு மீறிய தண்ணீரை நமக்கு பருகக்கொடுப்பார். இறைவன் உண்மையில் நமது வாழ்க்கையை இத்தகைய மாரத்தானாகத்தான் வடிவமைத்துள்ளான். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு ஒத்தாசியாக ஓடுவதை இறைவன் விரும்புகிறான்.
மாரத்தான் ஓடுபவர்கள் யாரும் மிக வேகமாக அவசரமாக ஓடமாட்டார்கள். நிதானமாகவே ஓடுவார்கள். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நிதானமாக பார்த்து ரசித்து ஓடுவார்கள்.காதுகளில் தனக்கு பிடித்தவற்றை ஹெட்போனில் மாட்டிக்கொண்டு ரசித்து ஓடுவார்கள்.நடப்பார்கள்.அடுத்தவன் நம்மை விட வேகமாக ஓடுகிறான் என்றால் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். இப்படியான ஒரு வாழ்க்கையை கற்பனை செய்து பாருங்கள்.மன அமைதி பறிபோகாமல் நமக்கு உறக்கம் எளிதாக வரும். வாழ்க்கை நிச்சயம் ஒரு மாரத்தான் ஓட்டம் . ஸ்ப்ரிண்ட் ரேஸ் அன்று.!பொறுமையாக நிதானமாக ரசித்து ஓடி அக்கம்பக்கம் ஓடுபவர்களுக்கு உதவி செய்தபடி கடைசியில் எல்லைக் கோட்டை தொடுவபர்களே வெற்றியாளர்கள் !
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா