For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

'நேசிப்பாயா' படத்தில் என்ன ஸ்பெஷல் - விஷ்ணுவர்தன்

07:14 AM Nov 10, 2024 IST | admin
 நேசிப்பாயா  படத்தில் என்ன ஸ்பெஷல்   விஷ்ணுவர்தன்
Advertisement

றைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், விஜயின் ‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மருமகனுமான ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Advertisement

இப்படம் குறித்து ஆகாஷ் முரளியின் மனைவியும்,இப்படத்தின் இணைதயாரிப்பாளருமான இயக்குநர் சினேகா பிரிட்டோ கூறுகையில்…''நடிப்பு என்பது ஆகாஷின் நீண்ட நாள் கனவு.அது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும்.அதற்காக அவர் நடிப்புப் பயிற்சி சண்டைப்பயிற்சி நடனப் பயிற்சி ஆகியனவற்றை செய்து தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார். வேறு ஒரு நிறுவனத்திற்காக அவர் படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், அவரை பிடித்துப் போனதால் என் அப்பா நம்ம நிறுவனத்திலேயே பண்ணலாம் என்று சொல்லி ஆரம்பித்தோம். நான் ஆகாஷை வைத்து படம் இயக்குவது எதிர்காலத்தில் நடக்கலாம்'' என்றார்.

Advertisement

நாயகன் ஆகாஷ் முரளி படம் பற்றிக் கூறியது….

''நான் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். கொரோனா சிக்கல் வந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு திருமணம் நடந்தது.இதனால் தான் நடிப்பதற்கு சற்று காலதாமதம் ஆனாது. விஷ்ணு சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ஆசை தான். ‘அறிந்தும் அறியாமலும்’ படம் போன்ற ஒரு படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால், என்னை வைத்து விஷ்ணு சார் படம் பண்ணுவாரா? என்பது கேள்விக்குறியாக இருந்தது, எனக்கும் அது தெரியும். இருந்தாலும் அவரை ஒரு முறை சந்தித்து சாதாரணமாகப் பேச வேண்டும் என்று முயற்சித்தேன். அப்படித்தான் அவரைச் சந்தித்தேன், அப்போது என் ஆசையை அவரிடம் சொன்னேன்.அப்படித் தொடங்கிய நட்பு ஆரம்பித்து நேசிப்பாயா படமாக மாறியுள்ளது'' என்றார்.

இதை அடுத்து டைரக்டர் விஷ்ணுவர்தனிடம் படம் குறித்து கேட்டதும், கிடைத்தும்:

நேசிப்பாயா எப்படித் தொடங்கியது?

‘ஷெர்ஷா’ படத்தின் டப்பிங் பணிகளில் நான் பிஸியாக இருந்த போது, என்னை ஆகாஷ் மும்பையில் சந்தித்தார். அப்போது அவரை வைத்து படம் இயக்கும் ஐடியா என்னிடம் இல்லை, நட்பு ரீதியாக என்னை அவர் சந்தித்தார், மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் பேசினோம். அந்த சந்திப்பை தொடர்ந்து அடிக்கடி அவரை சந்திக்க முடிந்தது, அப்போது அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. ஒருவரை வைத்து படம் இயக்கப் போகிறோம் என்பதை தாண்டி, அவருடன் பழகும் போது அவரை நமக்கு பிடித்துவிடும் அல்லவா அதுபோல் தான் எனக்கு ஆகாஷுடன் பழக பழக அவரை பிடித்துவிட்டது. ஒரு கட்டத்தில் இவருக்காக ஒரு படம் பண்ணலாமே என்று எனக்கே தோன்றியது. அப்படி தான் ‘நேசிப்பாயா’ உருவானது.

படம் குறித்து..?

இது முழுக்க முழுக்க காதல் கதை.அதோடு, இரசிகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஒரு திரைக்கதையோடு நல்ல ட்ராமாவாக இருக்கும்.இப்போதைய காலக்கட்டத்தில் இரசிகர்களை திருப்தி செய்யவில்லை என்றால் எழுந்து போய்க்கொண்டே இருப்பார்கள். அதனால், காதல் என்பதை ஒரு களமாக வைத்துக்கொண்டு, இளைஞர்களுக்கான ஒரு படமாக மட்டும் இன்றி திரைப்பட இரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் விறுவிறுப்பான படத்தை எடுத்திருக்கிறேன்.

இந்தக் கதைக்குள் ஆகாஷ் எப்படி கமிட் ஆனார்..?

இந்த கதை ஆகாஷ் முரளிக்காக எழுதப்பட்டது அல்ல, இப்படி ஒரு கரு என்னிடம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் இதை படமாக பண்ணலாம் என்று நினைத்தேன், ஆகாஷுக்காக படம் பண்ண முடிவான போது, ஏன் இந்த கதையை பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதனால் தான் இந்த கதையை தேர்வு செய்தேன். இதற்கு ஆகாஷ் முரளி மிக சரியாக இருந்ததோடு, அவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம், அதனால் அவருடன் பணியாற்றுவது எனக்கு ஆர்வமாக இருந்தது. ஆறடி உயரம், கணீர் குரல் என்று அவரை பார்க்கும் போது ரொம்ப பர்சனாலிட்டியாக இருப்பார், அதுவே ஒரு நடிகருக்கான முதல் தகுதியாகும். ஆனால், அவருடன் பழக பழக தான் தெரிந்தது அவர் குழந்தை போன்றவர் என்று, அது இந்த கதைக்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தது. ஆனால், எதிர்காலத்தில் அவரை முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதற்கான கதை அமைந்தால் நிச்சயம் மீண்டும் ஆகாஷுடன் இணைவேன்.

படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகையர் யார், யார்..?

கதாநாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர். சினிமாத்தனம் இல்லாத ஒரு பெண். அதனால் தான் அவரை நாயகியாகத் தேர்வு செய்தேன்.ஒப்பனை இல்லாமலும் மிகவும் அழகாக இருப்பார், அவருடைய உடல்மொழி, நடிப்பு என அனைத்தும் ஒரு நடிகையாக அல்லாமல் எளிமையான பெண் போல் இருக்கும்.அது படத்திற்கு நன்றாக இருக்கும் என்பதால் அவரை நாயகியாக நடிக்கவைத்தோம்.படத்தில்,கல்கி கொச்சலின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை எழுதும் போதே அவரை மனதில் வைத்து தான் எழுதினேன். சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களே?

நேசிப்பாயா கதை தமிழ்நாட்டில் தொடங்கினாலும், 90 விழுக்காடு கதை போர்ச்சுக்கல் நாட்டில் தான் நடக்கிறது. கதைப்படி மொழி தெரியாத ஒரு நாடு தேவை. போர்ச்சுக்கல் நாட்டை இதுவரை யாரும் திரைப்படங்களில் பெரிய அளவில் காட்டவில்லை. அதே சமயம் எங்கள் கதைக்கும் அந்த நாடு சரியாக இருந்ததால் அந்த நாட்டைத் தேர்வு செய்தோம்.அங்கு படப்பிடிப்பு என்பதால் ஒளிப்பதிவாளர், சண்டைப்பயிற்சி இயக்குநர் ஆகியோரது தேதிகள் எனக்கு மொத்தமாக தேவைப்பட்டது. ஆரம்பத்தில் ஓம்பிரகாஷ் தான் ஒளிப்பதிவு செய்தார். ஆனால் அவரது தேதிகள் மொத்தமாக கிடைக்காத சூழல் அமைந்ததால், பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளரான கேமரோன் பிரைசன், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ கியூவா ஆகியோரரை ஒப்பந்தம் செய்தோம்.அவர்கள் பக்கத்தில் இருந்ததாலும், நான் எதிர்பார்த்தது போல் அவர்களுடைய தேதி மொத்தமாக கிடைத்ததாலும் தான் அவர்களை ஒப்பந்தம் செய்தோம். அவர்களுடைய பணிகள் கவனிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

.

Tags :
Advertisement