அதிபராகி உடனடியாக செய்யப் போவதென்ன? - கமலா ஹாரிஸ் பேட்டி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 5ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதே போல் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தற்போது இரு கட்சியினரும் தீவிர பிரச்சாரங்களை முன் வைத்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதிபராக வெற்றி பெறும் வாய்ப்பு கமலா ஹாரிசுக்கு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில் அதிபராக வென்றால் தாம் உடனடியாக செய்ய வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பதை பற்றி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் கமலா ஹாரிஸ் கூறியிருப்பதாவது:–
அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம். அதில் தான் அதிக கவனம் செலுத்துவேன். நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே எனது முதல் இலக்கு.
காலநிலை மாறுபாடு என்பது அதி முக்கிய மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். எல்லைகளை பாதுகாக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் ஏற்கனவே கூறிய விஷயங்களில் இருந்து எந்த மாற்றமும் இல்லை.
பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டால் தீர்வு காணலாம் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டுவது, அதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. பொருளாதாரத்தை மீட்டு விட்டாலும், அதை மேலும் சிறப்பாக்க நிறைய விஷயங்கள் செய்ய வேண்டி இருக்கிறது.
இஸ்ரேல் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னமும் 68 நாட்கள் இருக்கின்றன. வெவ்வேறு விதமாக கோணங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கருத்துகளை ஏற்றுக் கொள்வது, பரிசீலிப்பது மிகவும் முக்கியம்.
பாலினம், நிறவேறுபாடு என எதிலும் பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினருக்கும் ஒரு சிறந்த அதிபராக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அதனால் தான் நான் வேட்பாளராக நிற்கிறேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை எதிர்த்து போராடியிருக்கிறேன். அந்த போராட்டங்கள் எதுவும் எளிதாக இருந்ததில்லை. அதே போல் தேர்தல் போராட்டமும் எளிதானது அல்ல. இது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம்.
நடுத்தர வர்க்கத்தை வலுப்படுத்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வேன். அதற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அமெரிக்க மக்கள் புதிய பாதையில் முன் செல்ல விரும்புகிறார்கள் என என்னால் அறிய முடிகிறது. எனது கொள்கை சார்ந்த மிக முக்கியமான அம்சங்கள் மாறவில்லை என்றே நான் நினைக்கிறேன் என கூறினார்.
‘கமலா ஹாரிஸ் தேர்தலுக்காக தன்னை கறுப்பினத்தவராக காட்டிக்கொள்கிறார்’ என்ற டிரம்பின் குற்றச்சாட்டு பற்றி பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியை பொருட்படுத்தாத கமலா, ‘இதெல்லாம் பல முறை சொல்லப்பட்ட, மிகவும் பழைய, தேய்ந்து போன புகார்; அடுத்த கேள்விக்கு வாங்க’ என்றார்.
வரும் 10–ம் தேதி ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.