தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வெயிலால் உடல்நலக்குறைப்பாடுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

07:35 PM Mar 17, 2024 IST | admin
Advertisement

ழக்கம் போல் வெயில் வாட்டத் தொடங்கி விட்டது. எதிர்வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலால் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. கோடையில் ஏற்படும் வெப்ப அலையில் இருந்து மக்கள் தங்களை எப்படித் தற்காத்து கொள்ளலாம்? என்று இணையத்தைக் கேட்க ஆரபித்து விட்டோரின் எண்ணிக்கையும் எகிறிக் கொண்டே போகிறது. இச்சூழலில் மார்கெட்டிங், ஊடகம், தொழில் உள்ளிட்ட துறையில் பணிபுரியும் ஆண்கள் கட்டாயம் வெயிலில் பைக்கில் சுற்ற வேண்டியது இருக்கிறது. சிலருக்கு வெயிலில் சுற்றும் வேலை என்பது தவிர்க்க முடியாதது. குறிப்பாக மார்கெட்டிங் துறையில் பணி புரியும் ஆண்கள் கட்டாயம் வெயிலில் சுற்ற வேண்டியது இருக்கிறது.அவர்கள் இந்த வெயிலால் படும் அவஸ்தை சொல்லில் அடங்காதது. அவர்கள் இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவதால் ஓரளவு வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

Advertisement

இந்த வேனிற் காலத்தில் சூரிய உதயத்துக்கு முன் கண் விழிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்தக் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிப்பது சிறந்தது. உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தைப் போக்கவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் நீராடுவது பயன்தரும். வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதால், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம். குறிப்பாக நாள் முழுவதும் வெயிலில் சுற்றும் ஆண்கள் கட்டாயம் வீட்டிற்குச் சென்றதும் சில்லென ஷவரில் குளிப்பது சூட்டைத் தணிக்கும். தினமும் குளிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.

Advertisement

வெயிலின் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள, சில வாழ்வியல் நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். முந்தைய காலங்களில் வெளியே சென்றால் தலைப்பாகை அணியும் வழக்கம் இருந்தது. இது வெயில் நேரடியாக உச்சந்தலையில் படாமல் இருப்பதற்காக செய்யப்பட்ட நடைமுறை. எனவே நாமும் வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது நேரடியாக தலையில் வெயில் படுவதைத் தவிர்க்க, தொப்பி போன்ற எதையாவது அணியலாம்.

சரும அரிப்பு, எரிச்சல், வேர்க்குரு , வெயில் அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு கற்றாழை ஜெல் தான் சரியான தீர்வு. கற்றாழையில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துவிடுங்கள். குளிர்ச்சியானதும் முகம், கைகளில் தடவி ரிலாக்ஸாக அமருங்கள். இதனால் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். வெயில் பாதிப்புகளும் நீங்கும்.

மேலும் உடலில் எப்போதும் போதுமான நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். ஒருநாளைக்கு மூன்று முதல், நான்கு லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம். வீடுகளில் மண்பானை வைத்து அதில் வெட்டிவேர் இட்ட தண்ணீரை வைத்துப் பருகுவது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். இயற்கையான பழச்சாறுகள், பதநீர், இளநீர் ஆகியவற்றைப் பருகலாம்.ஆனால், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இளநீர் மற்றும் பதநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். அவற்றில் இருக்கும் பொட்டாசியம் சத்து, சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு பிரச்னையை உண்டாக்கும். தாகத்தைத் தணிப்பதற்கு என ஏரியேட்டடு பானங்கள் (Aerated drinks) பருகுவதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளரிக்காய், சுரைக்காய், வெள்ளை பூசணி போன்ற அதிக நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

வெயில் காலத்தில் காரம், புளிப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையும் செரிக்காத உணவையும் ஒதுக்குவது அவசியம். உடலுக்கு வெப்பம் தரும் அசைவ உணவு, எண்ணெய்ப் பதார்த்தங்கள், புளிக் குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நீர்க்காய்களான பீர்க்கம், சுரை, பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம். உணவு முறை தவறாக இருந்தால் செரியாமை, வயிற்றுப்போக்கு, ஆசனவாய் எரிச்சல், மூலம் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும்.

பேயன் வாழைப்பழம், சீத்தா, கொய்யா, திராட்சை, பலா, வெள்ளரி, முலாம் (கிர்ணி) போன்ற பழங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தட்பத்தைக் கொடுக்கும். வெயில் காரணமாக வறண்டுவிட்ட உடல்தாதுகளுக்கு வலுவூட்ட, உணவில் நெய்யைச் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்வது அவசியம். கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத், இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவை வேனிற் காலத்தைக் குளிர் விக்கும் பானங்கள்.

ஜீன்ஸ் பேன்ட் மற்றும் நம் தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தாத இறுக்கமான ஆடைகளை அணிவது, உடலுக்குத் தீங்கானதே. குறிப்பாக வெயில் காலத்தில் இவ்விதமான இறுக்கமான உடைகளால், பலவிதமான தோல் நோய்கள் உண்டாகின்றன. உடலை உறுத்தாத மெல்லிய உடைகளே வெயில் காலத்துக்கு ஏற்றவை. அதிலும் மகாத்மா முன்மொழிந்த கதர் ஆடைகளை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. வெயில் காலத்தில் ஆபரணங்கள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதனால் தேவைப்படும்போது மட்டும் அணிந்துகொள்ளலாம்.

வெளியில் செல்லும்போது தரமான கூலிங் கிளாஸ், கறுப்பு நிறமற்ற குடைகளைப் பயன்படுத்தலாம். இது கண்களையும் தோலையும் புறஊதாக் கதிரின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும். உடல் அதிகமாகச் சூடாக இருப்பது போல உணர்ந்தால் பாட்டிலில் குளிர்ந்த நீரை அடைத்துக் கணுக்கால், மணிக்கட்டு, மூட்டுகளில் வைத்து, சூட்டைக் குறைக்கலாம்.

அத்துடன் வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது சருமத்தை பாதுகாக்க சன் ஸ்க்ரீன் தடவுவது எப்படியோ அதேபோல் கண்களை பாதுகாக்க சன் கிளாஸ் அணிவது அவசியம். குறிப்பாக அதிக வெயில்நேரத்தில் செல்லும்போது பெரிய கிளாஸ்களை தேர்ந்தெடுப்பது சிறந்த பாதுகாப்பை கொடுக்கும். இது புற ஊதா கதிர்கள் கண்களை தாக்காமல் பாதுகாக்கும். இல்லாவிட்டால் கண்கள் வறண்டு அசௌகர்யம் ஏற்படுவதுடன் கண்ணீர் வரும். சிலநேரங்களில் ஹைட்ரேட்டேடாக இருப்பது மட்டும் போதாது. கண் மருத்துவருடன் ஆலோசித்து, அவர் பரிந்துரைக்கும் ஐ ட்ராப்பை எப்போதும் வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் கண்கள் வறண்டு எரிச்சல் ஏற்படலாம். இதனால் கண்களில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.

கோடைக்காலத்தில் கண்களில் நீர் வறட்சி ஏற்படும்போது, சிலர் அடிக்கடிக் கண்களைக் கசக்குவார்கள். கண்களை, இப்படி அடிக்கடி கசக்குவதால், கண் இமைகளில் உள்ள சிறு துவாரங்களில் அடைப்பு உண்டாகும். இதனால்,தொற்று ஏற்பட்டு வீக்கம் ஏற்படும். இதைத்தான் `சூட்டுக் கட்டி' என்கிறார்கள். இதைத் தவிர்க்கத் தேவையில்லாமல் கண்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோன்று, போதுமான அளவு உறங்குவதும் அவசியம். இவையெல்லாம் வரும்முன் கடைப்பிடிக்க வேண்டியவை.

சூட்டுக் கட்டி வந்துவிட்டால், ஆன்டிபயாடிக் ஐ டிராப்ஸ் மற்றும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். சூட்டுக் கட்டிக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, விரைவாகக் கட்டி பழுத்து, சீழ் வெளியேறும். பிறகு, கட்டி சுருங்கி, ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
healthsunsun Heatஉடல் நலம்சூரிய ஒளிவெயில்
Advertisement
Next Article