ஒரு செய்தியாளனுக்கு என்ன சிறப்பியல் அவசியம்?
பத்திரிகையாளர்கள் என்றால், அவர்களும் அரசு எனும் அமைப்புக்கு வெளியே இந்தச் சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கும் பணியில், மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் பணியில், ஒருவகையில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாகத் தங்களை நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆனால் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள் பணியாற்ற ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரைக் கூட அதிகாரத்தின் எவ்வளவோ அச்சுறுத்தல்களுக்கு இடையில் எந்தப் பாதுகாப்பும் அற்ற சூழலிலேயே பத்திரிகையாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அதேசமயம், இதே தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் பணியும், அவர்களுடைய பணிக் காலத்தில் பொருளாதாரரீதியாகத் தங்களுக்கென பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ளும் அளவுக்குப் பெரும்பான்மையானோருக்கு என்றைக்குமே இருந்ததில்லை.!
ஆனால் அண்மையில் உருவாகி உள்ள இளம் பத்திரிகையாளர்களில் பலரும் தாங்கள் நியாயமான, நேர்மையான செய்தி வழங்குவது ஒரு கடமை என்பதை மறந்து மமதையுடன் உலா வருவதுதான் வேதனை. இது தொழில் அல்ல சேவை.! ஆனால் காலூன்றும் முன்னரே இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தில் மீடியா என்ற அரசு முத்திரையை பொறித்து கொண்டு தன்னால் பல இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும், மற்ற சாதாரண மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத சிவில் சமூக மற்றும் அரசு தொடர்புடைய பணிகள் பலவற்றை எளிதில் செய்து விட முடியும் என்பதுடன் வீடு ஒதுக்கீடு முதல் ரயில் முன்பதிவு வரை அனேக சலுகைகளை அவர் எளிதில் பெற முடியும் என்றே நம்பத் தொடங்கி விட்டனர். இதில் சோகம் கலந்த என்னவென்றால் அப்படி அப்படியான எண்ணத்துடன் இப்பீல்டுக்குள் என்ட்ரி ஆனோரில் இருபது சதவீதத்துக்கும் அதிகமானோர் மேற்படி லட்சியத்தை அடைந்தும் விட்டனராக்கும்,
இச்சூழலில் சீனியர் ஜர்னலிஸ்ட் ஏழுமலை வெங்கடேசன் பகிர்வு ஒன்றை இங்கு பகிர தோன்றுகிறது: .
செய்தியாளர்கள்/ ஊடகவியலாளர்கள்- நமக்கு தெரிந்தது இவ்வளவுதான்..!நாட்டில் மிகப்பெரிய அதிகாரம் கொண்டவர் பிரதமர். அவர்கூட (அரசியல் சாசனப்படி) கேள்விகேட்க முடியாத நபர் குடியரசு தலைவர்..ஆனால் அவரிடமே கேள்வி கேட்கும் உரிமை, வாய்ப்பு ஒரு செய்தியாளனுக்கு உண்டு. இவ்வளவு உயர்ந்த இடத்தில் அமர வைக்கப்பட்டிருக்கும் ஒரு செய்தியாளனுக்கு, எவ்வளவு சிறப்பியல் அவசியம்? நேர்மை, அடக்கம், அரசு துறைகள் சார்ந்த அறிவு, அரசி யல் வரலாறு, நாட்டு நடப்புகள், சமூதாய பொறுப்பு, வசவுகளை எதிர்கொண்டாலும் உணர்ச்சி வசப்படாமை போன்றவையெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும்.
தினமும் காலையில் ஒரு மணிநேரமாவது பேப்பர்களை படிப்பது அவசியம். அதுவும் சிறப்பு கட்டுரை வாசிப்பது அவசியமோ அவசியம்.யாரை கேள்வி கேட்க போகிறோமோ அவரைப்பற்றி தெரிந்துகொள்வது என்பது அடிப்படைத் தேவை. தெரியா விட்டால் மூத்தவர்களிடம் ஆலோசனை பெற்று செல்வது நல்லது. ஒரு செய்தியை கேள்விப்பட்டால் அவரவர் சோர்ஸ்சில் கிராஸ் செக் செய்வது அவசியம் மட்டுமல்ல,அதுதான் தலையாய கடமையே..!
செய்தியாளனின் எளிமையான அணுகுமுறைதான், பல விதமான நியூஸ் சோர்ஸ்களை சுலபமாக இழுத்து வரும். பந்தா காட்டினால் பேசக்கூட யோசிப்பார்கள். இந்த பிரஸ் என்ற வார்த்தையை செய்தி சேகரிப்பதற்கான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தினால் தங்களுக்கு தாங்களே கௌரவத்தை தேடிக்கொள்ளலாம்.நான் யார் தெரியுமா? பிரஸ்.. பஸ் ஸ்டாண்டு கக்கூஸ், ரேஷன் கடை, டிராபிக் போலீஸ் போன்ற ஏரியாக்களிலெல்லாம் இப்படி உதார் விடுவது படு காமெடியான விஷயம்.சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியே ஆகவேண்டும் என்பது போன்ற அரிதினும் அரிதான சூழ்நிலைகள் ஏற்பட்டால் மட்டுமே, ஒரு செய்தியாளன் அவனுக்குள்ள தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டும்.இதற்கு மேலும் விபரங்கள் வேண்டுமென்றால் இந்த கத்துக் குட்டியயை விட அனுபவ வாய்ந்த மூத்தவர்களின் அறிவுரையை நாடுங்கள்..!
நிலவளம் ரெங்கராஜன்