தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பிரதமரே உங்களுக்கு நாங்கள் கொடுத்த வேலை என்ன? செய்வதென்ன?

07:58 PM Jan 21, 2024 IST | admin
Advertisement

டந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் ராமர் கோவில் திறப்பு விழா குறித்த மிகப்பெரிய ஆரவாரமும், விளம்பரங்களும் தடையின்றி அரங்கேறி வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.இந்தியாவில் ராமர் கோவில் கட்டப்படுவது அல்லது ராமாயணம் சார்ந்த மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வழிபாடு செய்வது ஒன்றும் புதிதல்ல. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ராமாயணம் இந்துக்களின் புனித நாவல். ஆகவே எனக்கு ராமர் கோவில் மீதோ ராமரை வழிபடுகிற இந்துக்களின் மீதோ எந்தக் காழ்ப்புணர்வும் இல்லை. அது அவர்களின் உரிமை, அதுகுறித்து அவதூறு செய்வதும், அந்த நம்பிக்கைகளின் மீது கல்லெறிவதும் ஒரு உலகப் பொது மானுடனாக என்னுடைய வேலையல்ல.இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் அது ஒரு வடிகட்டிய பொய்.

Advertisement

இந்தியா என்கிற நாட்டின் அரசுகள் அனைத்தும், அதன் ஏக போக உறுப்பினர்கள் அனைவருமே ஏறக்குறைய இந்துமதச் சடங்குகளை இந்துமதக் கடவுளரின் சிலைகளை அரசு அலுவலகம் முதற்கொண்டு நாடாளுமன்றம் வரையில் வைத்து வணங்கிக் கொண்டும், பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள்.செயற்கைக் கோள்களை அனுப்பும் விஞ்ஞானிகளும், அறிவியலில் பல்வேறு துறைத் தலைவர்களும் திருப்பதி, திருமலை, பழனி, பஞ்சாமிர்தம் என்று தொடர்ந்து ஒரு சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

இஸ்லாமிய சமயத்தின் மீது நம்பிக்கை கொண்ட, குடியரசுத் தலைவராய் இருந்த அப்துல் கலாம் ஐயா கூட பல ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்ட பம்பை முடி பாபாவின் காலடியிலும், சங்கராச்சாரிகளின் கால்களிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிந்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்சித் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவில் விழாவில் சிரத்தையோடு பங்கு பெறுவது பற்றி நம்மால் கேள்வி எழுப்ப இயலாது. ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் என்கிற இந்துத்துவ பிற்போக்குத் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தங்களை முன்னெடுக்க உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கம் பாரதீய ஜனதாக் கட்சி. அதன் பிரதிநிதி நரேந்திர மோடி.

ஆனால், இந்தியா என்கிற மதச்சார்பற்ற மக்கள் வாழும் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக அதிகாரப்பூர்வமாக மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஊர் ஊராகப் புனித யாத்திரை மேற்கொள்வதும், கோவில்களின் பிராகாரங்களில் சுற்றித் திரிந்து புனித நீராடல் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது. முற்று முழுதாக வட இந்தியாவின் மாநிலங்கள் ராமரின் பெயரால் உணர்வூட்டப்பட்டிருக்கிறது. இப்போது கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் இன்னும் முழுமையடைய குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும் என்பது தான் உண்மை நிலை.

ஆனால் 2024 தேர்தலில் மிக எளிதாக மத உணர்வு‌ தூண்டப்பட்டு பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியைப் பிடிக்க நிகழ்த்தப்படும் இந்த ராமர் கோவில் திறப்பு விழா என்பது இந்திய இறையாண்மையின் மீது ஏவப்பட்டிருக்கும் போர். இது குறித்து விழிப்புணர்வோடு பேசுகிற, கேள்வி எழுப்புகிற தலைவர்கள் யாருமில்லை. தமிழகமும் இந்த ஜோதியில் கலந்து விடுமுறை கொடுப்பதா? வேண்டாமா? என்ற அளவில் சுருங்கி விட்டது. மதச்சார்பின்மைக்கு எதிரான பிரதமர் மோடியின்‌ இந்த அலப்பரைகளை எந்த எதிர்க்கட்சியும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை.

இந்தியாவின் வலிமையான தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றம் உள்ளடங்கிய பல்வேறு அமைப்புகள் எதுவும் வாய் திறந்ததாகத் தெரியவில்லை. இவர்களே வாய் திறக்க இயலாத சூழல் நிலவும் நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள் அனைத்தும் நேரலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. விடுதலை பெற்ற இந்தியாவின் மதச்சார்பற்ற முகம் எந்த எதிர்ப்பும்‌ இல்லாமல் கண்ணெதிரே‌ அழிந்து கொண்டிருப்பதையும், இந்திய இஸ்லாமியர்களின் இதயம் நசுக்கப் படுவதையும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் பல்வேறு சமய நம்பிக்கை கொண்டவர்களும் இந்த நிகழ்வை ஒரு மிகப்பெரிய அரசியல் சமூக மாற்றத்தின் துவக்கமாகப் பார்க்கிறார்கள். மெல்ல மெல்ல இந்தியா ஒரு இந்து நாடாகப் பரிமாணம்‌ பெறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மதரீதியான எதிர்ப்புணர்வையோ, நம்பிக்கைகளையோ இந்தியாவின் எதிர்க் கட்சிகள் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால், சட்டப்பூர்வமான பிரதமரின் கடமைகளில் இருந்து விலகி ஒரு தனிமனிதர்‌ காவி உடை தரித்து மதத்தின் பின்னால் நின்று கொண்டிருப்பதை பெருமைமிகு பாரத தேசத்தின் மதச்சார்பற்ற குடியரசின் மகனாக வேதனையோடு பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.சிறுதெய்வ வழிபாடு, நாட்டார் வழிபாடு, மாற்று மதங்களான இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம், சமணம், சைவம் எல்லாம் துடைத்தழிக்கப்பட்டு ஒற்றைத் தெய்வ வழிபாட்டு கார்ப்பரேட் கடவுளாக ராமர் இந்தியாவில் அவதரிக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மத உணர்வு அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான மிகப்பெரிய ஆயுதமாக பாரதீய ஜனதாவுக்கு இருக்கும். வரும்‌ காலங்களில் இந்த அதிகார உணர்வு நாட்டின் பிற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளின் மீது தனது அதிகாரத்தை ஏவும். இந்துத் தத்துவ மரபு என்று நுட்பமாக செய்யப்படும் ராமர் வழியான மதப் பரப்புரை அப்பாவி இந்தியர்களின் வாழ்வில் மிகப்பெரிய சீரழிவுகளை‌ உருவாக்கும். ஆனால், இதுபற்றிய எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் இந்தியாவின் எளிய‌ உழைக்கும் மனிதனின் பொதுப்புத்தி சீர்குலைக்கப்பட்டு விட்டது.

ஆகவே மீண்டும் சொல்கிறேன், எனக்கு ராமர் கோவில் மீதோ ராமரை வழிபடுகிற இந்துக்களின் மீதோ எந்தக் காழ்ப்புணர்வும் இல்லை. அது அவர்களின் உரிமை, அதுகுறித்து அவதூறு செய்வதும், அந்த நம்பிக்கைகளின் மீது கல்லெறிவதும் ஒரு உலகப் பொது மானுடனாக என்னுடைய வேலையல்ல. பிரதமர் மாதிரியான‌ அனைவருக்கும் பொதுவான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியைக் கேள்வி கேட்கிற உரிமையும், மதச்சார்பற்ற இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய கைகளில் ஒற்றை மத நம்பிக்கைக்கான பிரதிஷ்டை செய்வதை எதிர்ப்பதும் இந்தியாவின் பெருமைமிகு குடிமகனாக எனது உரிமையும், கடமையுமாகும்.

பிரதமரே உங்களுக்கு நாங்கள் கொடுத்த வேலை கோவில் கட்டுவதும், ராமரைப் பிரதிஷ்டை செய்வதும் அல்ல. கோடிக்கணக்கான ஏழைகளின் பசி போக்குவதும், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதும், அவர்களை ஏழ்மையில் இருந்து மீட்டு பாதுகாப்பான வாழ்வைத் தருவதும் தான். ஆனால் நீங்கள் அவற்றிலிருந்து விலகி இந்து மதத்தின் போப் ஆண்டவராக உங்களை முடிசூட்டிக் கொள்வதில் தீவிரமாக வேலை செய்கிறீர்கள். காலம் உறுதியாக எல்லாவற்றையும் சமநிலைப் படுத்தும் வேலையை செய்யும், இந்தியா என்பது மாபெரும் சமூகங்களின் ஒருங்கிணைந்த நிலம், இந்த நிலத்தில் மதங்களையும், இனங்களையும் கடந்த ஒரு நீதி எப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. அது ஒருநாள் வெல்லும்.

கை.அறிவழகன்

Tags :
electionHinduIndiaNarendra ModiPMRam MandirRamar TempleRSS
Advertisement
Next Article