கவர்னர் ஆகிய பாஜகவே பாராட்டி விட்டதன் பின்னணி?
மழை-வெள்ளத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாகச் செய்திருப்பதாக கவர்னர் ஆர் என் ரவி அவர்களே பாராட்டுப் பத்திரம் வாசித்து விட்டார். அதனால்தான், எதுவானாலும் திமுகவைக் குறை சொல்லும் எடப்பாடி போன்ற எதிர்க்கட்சியினர் அனைவரும் வாயடைத்துக் கிடக்கின்றனர். இந்த மழை-வெள்ளத்தை வைத்து, முதல்வர் ஸ்டாலினை மட்டுமல்ல; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் சேர்த்தே ஒரு பிடிபிடித்து விடலாம் என்று நினைத்திருந்த எடப்பாடிக்கு, கவர்னரின் பாராட்டு, பெருத்த ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் கொடுத்து விட்டது.
கவர்னரின் பாராட்டைப் புறந்தள்ளுவதுபோல் திமுகவை எதிர்த்து தாமோர் அறிக்கை வெளியிட்டால், அது பலத்த பின்விளைவுகளை தில்லியில் ஏற்படுத்திவிடுமோ என்கிற சந்தேகம். என்னதான் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து, வெளியில் வந்து விட்டாலும், மழை விட்டாலும் தூவானம் விடாத கதைதான். இத்தனையும் ஒன்று சேர்ந்த குழப்பத்தில்தான், பாதிக்கப் பட்டோருக்கு முகாம்கள் அமைத்து, மூன்று வேளை உணவும் சிறப்பாக வழங்கப்பட்டு வரும் நிலையிலும் ‘பாதிக்கப்பட்டோருக்கு அம்மா உணவகத்தில் உணவு வழங்கலாம்’ என்று உப்புச் சப்பில்லாமல் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
சரி, அபத்தங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, வேறு கோணங்களுக்கு வருவோம். எலியும் பூனையுமாக இருக்கும் நிலையில், கவர்னர் எப்படி திமுக அரசைப் பாராட்டினார்? அப்படியானால், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் ரகசியக் கூட்டணி இருக்கிறதா? இனி, இப்படியோர் பட்டி மன்றம் கூட ஊடகங்களில் நடக்கலாம்.
இல்லையேல், கவர்னர் அதாவது பாஜக பாராட்டியது, முதல்வர் ஸ்டாலினையா? அல்லது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைத்தான் இப்படி மறைமுகமாகப் பாராட்டியிருக்கிறாரா? இப்படி, பூவுக்குள் ஒரு பூகம்பத்தை உண்டாக்கும் முயற்சியிலும் விவாதங்கள் நடக்கலாம். யார் கண்டது!