For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

எது உண்மையான சமூகநீதி?

01:40 PM Jun 30, 2024 IST | admin
எது உண்மையான சமூகநீதி
Advertisement

முற்போக்கு - பெரியாரிய முகமூடி போட்டுக்கொண்டு திரியும் ஆபாச யூடியூபர்கள் , ஆளும்வர்க்கத்திற்கு முந்திக்கொண்டு முட்டுக்கொடுத்து வயிறு வளர்ப்பவர்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து "பூரண மதுவிலக்கு" என்ற கொள்கையை மிக மோசமாக விமர்சித்ததை காண முடிந்தது. அதுவும், "துப்புரவு தொழிலாளர்கள் (தூய்மை பணியாளர்கள் என்று உச்சரிக்கும் அரசியல் அறிவற்றவர்கள்) , கடின உழைப்பாளிகளுக்கு மது தேவை" என்ற அரை போதை விளக்கங்களை அள்ளி வீசிய அந்த அற்பர்களை "அயோக்கிய சிகாமணிகள்" என்று தன் கருத்தால் வெளுத்திருக்கிறார் டாக்டர். திருமா. ஆண்ட, ஆளும் திராவிட கட்சிகளின் தலைவர்கள் பேசாததை, ஒரு நல்ல தலைவருக்கு இலக்கணமாக பேசி அதில் தொடர்ந்து தனது இயக்கத்தையும் தன்னையும் ஈடுபடுத்தி வருவதெல்லாம் சாதாரண விவகாரம் அல்ல. அந்த வகையில் அவரது முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.

Advertisement

"ஒரு மனிதன் மலக்குழியில் இறங்குவதால் மது தேவைப்படுகிறது" என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் . அவனை மலக்குழிக்குள்ளும், சாக்கடைக்குள்ளும் இறக்காமல் நம் அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து "விளிம்புநிலை மக்களுக்கு மது தேவை" என்று பேசுபவர்கள் மிக மலினமான பார்வை கொண்டவர்கள். ஏனெனில், அவர்கள் அமைப்பற்ற உதிரிகள் ! நாள்தோறும் மக்களுடன் இருந்து அவர்களின் பிரச்சனைகளிலேயே கண்விழித்து இருப்பவர்களுக்கு தான் அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பற்றிய புரிதல் இருக்கும். AC அறைக்குள் அமர்ந்து கொண்டு, வாரந்தோறும் ஒன்றாக மது அருந்தும் நபரை எதிரில் வைத்து கொண்டு "மதுவிலக்கு எல்லாம் சாத்தியம் இல்லை" என்று பேசுவது அயோக்கியத்தனம். உனக்கு குடிப்பழக்கம் இருந்தால் உன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி கமல் ஹாசனின் கருத்து மேட்டிமைத்தன்மையுடைய , பாட்டாளி மக்களின் வலி உணராத கருத்தோ அப்படியான கருத்தையே இதுபோன்ற உதிரிகளும் முன்வைக்கிறார்கள்.

Advertisement

நல்ல சாராயம், நல்ல மது என்று பேசும் மோசமான கருத்துக்களையும் நாம் இத்துடன் பொருத்தி பார்க்க வேண்டும். 2003இல் TASMAC மதுவின் மூலமான வருமானம் 3,500 கோடியாக இருந்திருக்கிறது. இன்று 45,000 கோடியை எட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் 13 மடங்கு வருமானம் உயர்ந்துள்ளது. எனில், மதுவின் விலை கூடியதால் இந்த வருமானம் உயர்ந்துள்ளதாக பொருளா? நிச்சயம் இல்லை !

மது குடிப்போரின் எண்ணிக்கை உயர்ந்ததால் வந்திருக்கும் வருமானம் இது. சாதாரண எளிய மக்களின் வருமானத்தை பிடுங்கி வரப்பெற்ற வருமானம் இது. பல்லாயிரக்கணக்கான குடிநோயாளிகளை உருவாக்கி வரப்பெற்ற வருமானம் இது. அப்படி கொள்ளை காசு சம்பாதித்தும் அதில் 1%ஐ கூட மறுவாழ்வு மையங்களுக்கு செலவிட மனமற்ற கிக் ஏற்ற வழி தேடும் கூட்டத்திடம் நாம் சிக்கியிருப்பது பேரவலம். "இது ஒரு மோசமான எகனாமிக் மாடல்" என்று நான் சொல்லவில்லை..முன்னாள் நிதி அமைச்சர் PTR சொல்லி இருக்கிறார்.

எனில், மதுவால் வருமானம், குடிப்பது தனிப்பட்ட உரிமை என்றெல்லாம் பேசுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்று பாருங்கள். ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்பது மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்காத வரைதான் பார்த்துக்கொண்டிருக்க முடியும். எப்போது ஒருவனின் தனிப்பட்ட உரிமை மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையை பறிக்கிறதா , பாதிக்கிறதோ அதை தடுக்காமல் இருக்க முடியாது. வெளிநாட்டுக்காரர்கள் வந்தால் என்ன செய்வது? இன்றைய உலகில் இதெல்லாம் சாத்தியமா? என்று கேட்பவர்கள் எல்லோரும் மேட்டிமைத்தன்மை கொண்ட, தமிழ்நாடு மற்றும் இந்திய மனிதர்களை இன்னும் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று பேசும் ஒருவர் கூட கள்ளச்சாராயம் நோக்கி இவர்கள் நகர்வதற்கு காரணமே டாஸ்மாக் தான் என்று பேச வாய்திறக்கவில்லை. நல்வாய்ப்பாக சூர்யா போன்ற நடிகர்கள் வெளிப்படையாக அதை பேசி இருக்கிறார்கள். நமது ஊடகத்தில் முழு மது விலக்கு ஏன் தேவை? எப்படி சாத்தியம்? என்று ஆய்வு ரீதியாக அறப்போர் ஜெயராம் அவர்களுடன் நடத்திய உரையாடலை வெளியிடுகிறோம்.பார்த்து பகிருங்கள் !திட்டமிட்டு பொய் பரப்புபவர்கள் தெளியுங்கள் !

மதுக்கடைகளை மூடுவது தான் இந்த சமூகத்திற்கும் குறிப்பாக பெண்களுக்கும் கிடைக்கப்போகும் உண்மையான சமூகநீதி.

- அருள்மொழிவர்மன்

Tags :
Advertisement