கள்ளச்சாராயம் என்றால் என்ன?- கம்ப்ளீட் ரிப்போர்ட்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட 72 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்றைய தினம் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்த நிலையில் 33 பேர் இறந்து விட்டதாக மருத்துவமனைகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய கள்ளச்சாராய சாவுகள், தமிழக அரசின் காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்குத்துறை ஆகியவை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். கள்ளச்சாராயம் தொடர்பான சம்பவங்களை முன்வைத்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் அறிக்கை விடுத்துள்ள நிலையில் ஆளுநரும் விளக்கம் கேட்டிருப்பதால் கோட்டை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அது சரி.. கள்ளச் சாராயம் என்றால் என்ன?
பொதுவாகவே கள்ளச் சாராயம் என்பது சுகாதாரமற்ற சூழ்நிலையில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் ஆல்கஹாலில் தண்ணீர், வண்ணங்கள் மற்றும் சுவைகள் போன்ற பிற பொருட்களுடன் கலப்பது மூலம் இது தயாரிக்கப்படுகிறது. சட்டபூர்வமாக மதுபானக் கடைகளில் விற்கும் ஆல்கஹாலில் பயன்படுத்தப்படும் எத்தனாளுக்கு மாறாக தொழில்துறை ஆல்கஹாலில் மெத்தனால் அல்லது மெத்தில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருக்கும். இதை உட்கொண்டால் குருட்டுத்தன்மை மற்றும் உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும். சுகாதாரமற்ற முறையில் இதை தயாரிக்கும்போது பாக்டீரியா மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளால் மாசுபட்டு, நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது.
கள்ளச் சாராயத்தின் வரலாறு?
இந்தியாவில் சட்டவிரோத மது சார்ந்த பிரச்சனைகள் காலனித்துவ காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி செய்யும்போது சட்டப்பூர்வ ஆல்கஹால் மீதான அதிகப்படியான வரிகள், உள்ளூர் மக்களுக்கு மலிவான மதுபானங்களை உற்பத்தி செய்யும் சட்டவிரோத டிஸ்டில்லர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், மதுவின் மீதான வரி அதிகமாக இருந்ததால், சட்டவிரோத மதுவின் சந்தை வளர்ச்சி பெற்றது. பல மாநிலங்களிலும் மது விற்பனையை அரசே உரிமையை ஏற்றுக் கொண்டதால், மேலும் தீவிரமடைந்து கள்ளச்சாராய ஆலைகள் அதிகரிக்க காரணமாக அமைந்தது. இந்தியாவில் சட்டவிரோத மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இறப்புகள் மற்றும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். உதாரணமாக 2019 ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்து 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 2020 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளச் சாராயம் உட்கொண்டதால் 23 பேர் இறந்தனர்.
கள்ளச் சாராயம் குடித்தால் ஏன் இறப்பு ஏற்படுகிறது?
எல்லா கள்ளச் சாராயங்களும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உருவாக்கப்படுவதில்லை. சில சமயங்களில் உருவாக்கும்போது ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாகவோ, அல்லது தொழில் போட்டியால் வேண்டுமென்றே சில நச்சுப் பொருட்களை அதில் கலப்பது மூலமாகவோ ஆபத்தை விளைவிக்கும்படியாக மாறுகிறது. கள்ளச் சாராயத்தை உட்கொள்வதால் உடலில் அமோனியம் நைட்ரேட் அதிகமாகும்போது, தலைவலி, தலை சுற்றல், வயிற்று வலி, வாந்தி, இதயம் ஒருங்கின்மை, வலிப்பு மற்றும் மரணம் கூட ஏற்படலாம்.
கள்ளச் சாராயத்தில் அதன் ஆல்கஹால் தன்மையை அதிகரிக்க மெத்தில் ஆல்கஹால் அல்லது மெத்தனால் பயன்படுத்துகிறார்கள். இது மனிதர்களுக்கு மிகவும் நச்சுத்தன்மையுடையது. உடலில் 10ml கலந்தாலே குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும். 30 மில்லிக்கு அதிகமாகும்போது, உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது.
கள்ளச் சாராயம் விற்பவர்கள் சுலபமாக வெளியே வர முடியாதபடி மது விலக்கு அமல் சட்டத்தை திருத்தி கடுமையாக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்ததுபோல், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். கள்ளச் சாராய சாவுகளை கொலைக் குற்றமாக கருத வேண்டும். ஆனால் சட்ட விரோத ஆல்கஹால் பிரச்சனையை அணுகுவது சிக்கலான விஷயமாகும். சட்டப்பூர்வ மதுபானத்தின் மீதான வரிகளைக் குறைப்பதே முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றானது என சொல்லப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மலிவாகக் கிடைக்கும்போது, சாராயத்தின் தேவையைக் குறைக்கும். மேலும் கள்ளச் சாராய வழக்குகளில் சிக்குபவர்களுக்கு கடுமையான தண்டனைகளையும் அபராதங்களையும் அமல்படுத்தினால், இதன் உற்பத்தியை கணிசமாகக் குறைக்கலாம்.
நிலவளம் ரெங்கராஜன்