For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி சொல்லி இருப்பது யோசனை அல்ல உளறல்!

09:30 PM Oct 28, 2023 IST | admin
இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி சொல்லி இருப்பது யோசனை அல்ல உளறல்
Advertisement

ந்தியா என்றாலும் பாரத் என்றாலும் நம் நாடாகிய மக்களின் திறமையை உலகுக்கு எடுத்துச் சொல்லி நிரூபித்தவர் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி. 76 வயதான அவர் உருவாக்கிய நிறுவனம் 80 பில்லியன் டாலர் சந்தை மூலதனம், 3.35 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனாக்கின் மாமனார்... இவர் இன்றைய இளைஞர்களின் கனவு ஹீரோ என்றால் அது மிகையில்லை!பலரும் காலை 10 மணிக்கு அலுவலகத்துக்குப் போய்விடுவார்கள்; இன்னும் சிலர் காலை 9 மணிக்கே போய்விடுவார்கள். ஆனால், நாராயண மூர்த்தி தினமும் எத்தனை மணிக்கு தன்னுடைய அலுவலகத்துக்குப் போவார் தெரியுமா? காலை 6.20 மணிக்கு... பெங்களூரின் நடுங்கும் குளிரில் அந்த அதிகாலை வேளையில் அவர் அலுவலகம் போனால், அன்றையை வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டு, இரவு 8 - 9 மணிக்குத்தான் வீடு திரும்புவார். இப்படி தினமும் 14 மணி நேரம் வேலை செய்வதை அவர் சில ஆண்டுகளுக்கு மட்டும் செய்யவில்லை. நிறுவனத்தை ஆரம்பித்தது தொடங்கி, அவர் ஓய்வு பெற்ற 2011-ம் ஆண்டு வரை செய்தார் என்பது ஆச்சர்யமான தகவல். இப்பேர்பட்ட இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயணமூர்த்தி, பணி கலாச்சாரம் குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வளர்ந்த நாடுகளை இந்தியா பிடிக்க வேண்டுமானால், இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளது பெரும் விவாதமாகி உள்ளது.

Advertisement

தினந்தோறும் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேரம் உழைப்பு என்ற உரிமை எளிதாகக் கிடைத்ததில்லை. பல நாடுகளில் பல ஆண்டுகள் நடந்த போராட்டத்தின் விளைவாகவே இந்த உரிமை கிடைத்தது. ட்டு மணி நேரம் வேலை என்பது ஒரே நேரத்தில், உலகம் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. அந்தந்த நாடுகளின் சூழல், அங்கு இருந்த அழுத்தங்கள், தொழிற்சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவை அமலுக்கு வந்தன. உலகில் முதன் முதலில் எட்டு மணி நேர வேலையை அறிமுகப்படுத்திய தேசம் ஸ்பெயின். இரண்டாம் ஃபிலிப் ஸ்பெயினின் மன்னராக இருந்த காலத்தில், 1594ல் அரச சாஸனம் ஒன்றின் மூலம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தொழிலாளர்கள் காலை நான்கு மணி நேரம் மாலை நான்கு மணி நேரம் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இது உலகம் தழுவிய போக்காக மாறவில்லை.

Advertisement

உலகின் பல பகுதிகளிலும் 14 மணி நேர வேலை என்பது சர்வசாதாரணமாக இருந்தது. பிரிட்டனில் தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு வேலை நேரம் மீதான அழுத்தம் இன்னும் அதிகரித்தது. அந்தத் தருணத்தில் ஜவுளி தொழிற்சாலையின் முதலாளியும் சோஷலிசவாதியுமான ராபர்ட் அவன், தொழிலாளர் நலன் குறித்து பேச ஆரம்பித்தார். தொழிற்சாலைகளில் சூழலை மேம்படுத்துவது, குழந்தைகள் வளர்ப்பைக் கூட்டாகச் செய்வது போன்றவற்றில் அவர் தொடர்ந்து குரல்கொடுத்துவந்தார்.

1810ல் முதல் முறையாக ஒரு நாளில் எட்டு மணி நேர வேலை என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார் ராபர்ட் அவன். அதற்குப் பிறகு, 1817ல் "8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு" என்ற புகழ்பெற்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்தும் விவகாரம் தொடர்ந்து பொது விவாதமாக இருந்த நிலையில், 1847ல் பிரிட்டனில் 10 மணி நேர வேலை அமல்படுத்தப்பட்டது. 1848ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பிறகு ஃப்ரான்சில் 12 மணி நேர வேலை அமலுக்கு வந்தது. 1850களில் நியூசிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் தொழிலாளர் இயக்கங்கள் எட்டு மணி நேரம் என்பதை வலியுறுத்த ஆரம்பித்தன. சில இடங்களில் அது கிடைக்கவும் செய்தது. 1866ல் ஜெனீவாவில் கூடிய சர்வதேச தொழிலாளர் அமைப்பு, எட்டு மணி நேர வேலையை கோரிக்கையாக வைத்தது.

இதற்கிடையில் 1889 ஜூலை 14ஆம் தேதி பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. 18 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, அதாவது 1890ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை ஒட்டியே மே ஒன்றாம் தேதி மே தினம் உலகமெங்கும் படிப்படியாக பிரபலமாக ஆரம்பித்தது. ஒரு அரச சாஸனத்தின் மூலம் எட்டு மணி நேர வேலை என்ற கருத்தாக்கம் இருந்தாலும், 1919ல் இதற்கென ஒரு சட்டத்தை இயற்றியது ஸ்பெயின். எந்த வேலை பார்ப்பவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர பணி என்பது நாடு முழுவதும் அமலுக்கு வந்தது என்பது மட்டுமின்றி அடுத்தடுத்து நடந்த பல நிகழ்வுகள் உழைப்புக்கான நேர்த்தை சர்வதேச அளவில் நிர்ணயித்தன..

இச்சூழலில் நம் இந்தியா முன்னேற இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய முன்வர வேண்டும்" என்று 3 One 4கேபிடல் என்ற பாட்காஸ்டில் தி ரெக்கார்ட் என்ற பெயரில் சொல்லி இருக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி. வெளியிட்ட ஆடியோ ஒன்றில், "உற்பத்தித் திறன் குறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலக அரங்கில் போட்டிபோட வேண்டுமானால் அதற்கேற்ப இந்திய இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான், ஜெர்மனி ஆகியவற்றில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டது" எனக் கூறி இருந்தார். அதிக நேரம் பணியாற்ற வேண்டும் எனக் கூறும் முதல் சிஇஓ இவர் அல்ல.

இவருக்கு முன், இது குறித்துப் பேசிய ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால், "பல தலைமுறைகளாக மற்ற நாடுகள் கட்டியெழுப்பியதை ஒரு தலைமுறைக்குள் உருவாக்குவதற்கானது நமது தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் 2020ல் பேசிய இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, "கோவிட் பெருந்தொற்றுக் காலத்திற்கு முந்தைய நிலைக்கு நாம் செல்ல வேண்டுமானால், இந்திய தொழில் வல்லுநர்கள் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 60 மணி நேரம் பணியாற்ற வேண்டும்" என வலியுறுத்தி இருந்தார்.

சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனரா ஜாக் மா, சீன தொழில்நுட்பத் துறை வேகமாக முன்னேற 996 கோட்பாடுகளை அறிவித்தார். அதில், அதிக நேரம் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்களின் கடின உழைப்பைப் போற்றும் விதத்தில் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பணியாற்ற வேண்டும் என்பதை அவர் பரிந்துரைத்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்றும், ஒருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகும் என்றும் விமர்சிக்கப்பட்டது.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், வாரத்திற்கு 100 மணி நேரத்திற்கு மேலாக உழைக்குமாறு பணியாளர்களை கடந்த ஆண்டு அக்டோபரில் கேட்டுக்கொண்டார். தான் அவ்வாறுதான் உழைப்பதாகவும், சில நேரங்களில் அலுவலகத்திலேயே தான் உறங்கிவிடுவதாகவும், பணியாளர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்றும் எலான் மஸ்க் கேட்டுக்கொண்டார்.

பாம்பே ஷேவிங் கம்பெனி நிறுவனத்தின் சிஇஓ-வான ஷாந்தனு தேஷ்பாண்டே, "பணியில் முதல்முறையாக இணைபவர்கள் அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு கடுமையாக உழைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். நன்றாக சாப்பிடுங்கள், உடலை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழையுங்கள்" என அவர் பரிந்துரைத்தார்.

வாரம் 6 வேலை நாள் என்று வைத்தாலும் சராசரியாகத் தினம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஒருவர் உழைக்க வேண்டும் என்றாகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாகச் சட்டபூர்வமாக ஆக்குவதற்கான கோரிக்கைகள் முதலாளிகள் தரப்பிலிருந்து வந்துகொண்டுதான் இருந்தன. அதேவேளையில், இடதுசாரித் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உள்ளிட்டோரும் வேலை நேரத்தைச் சட்டபூர்வமாக 6 மணி நேரமாக மாற்ற வேண்டும் எனத் தொடர்ந்து பேசிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது.ஆனால், ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்?

ஆனால் இதிலிருக்கும் சிக்கல்கள் என்ன?

1) போராடிப் பெற்ற 'தினம் 8 மணி நேர வேலை' என்ற தொழிலாளர் உரிமையை இது நேரடியாகப் பறிக்கிறது. மறுபடி சுரண்டலுக்குள் நுழைகிறோம் என்று அர்த்தம்.

2) ஏற்கெனவே ஐடி வேலை முதல் கொளுத்து வேலை வரை - சில இடங்களில் மட்டும் - தினம் 12 நேரம் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் (ஆனால் ஐடி வேலை வாரம் 5 நாட்கள்). அவ்விடங்களில் இதில் புதிதாக மாற ஏதுமில்லை.

3) பிழைப்பின் நிமித்தம் ஏதோ ஒரு 8 மணி நேர வேலை செய்து கொண்டு மேலும் 4 மணி நேரம் தமக்கு ஆர்வமான துறையில் (உதா: எழுத்து, ஷேர் மார்க்கெட்) வேலை செய்து வருவோர் பலர் இருக்கிறார்கள். அவர்களும் ஏற்கெனவே 70 மணி நேரம் உழைக்கும் கணக்கில் வருகிறார்கள்.

4) வழமையாகச் செய்யும் 8 மணி நேர வேலையை விட இது ஒன்றரை மடங்கு அதிகம். எனவே நிறுவனங்கள் ஒன்றரை மடங்கு கூடுதல் சம்பளம் தர வேண்டி இருக்கும். அது சாத்தியமற்றது.

5) அப்படி ஒன்றரை மடங்கு ஊதியம் அதிகரித்தால் தொழிலாளர்களின் வரவு - செலவு எல்லாமே ஒன்றரை மடங்கு அதிகரிக்கும். நிறுவனங்களுக்கு மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்தையே அசைக்க வல்ல பெரிய முடிவு இது. ரூபாயின் மதிப்பு கூட மாறிப் போகும்.

6) உடல் சுழற்சி பாதிக்கப்படும். தினம் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் பொழுதுபோக்கு, குடும்பம், ஓய்வு என்பதுதான் இயல்பான மனித வாழ்வு. 12 மணி நேர வேலையால் தூங்கும் நேரம் குறையும். உடல் நிலை மோசமாகும்.

7) ஏற்கெனவே மகிழ்ச்சிகரமாக வாழும் மனிதர்களின் பட்டியலில் அதள பாதாளத்தில் இருக்கிறது இந்தியா. இந்த மாதிரி வேலை நேரம் அதிகரித்தால் மக்கள் மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறையும், உறவுகள் உடையும்.

ஒரு கதை உண்டு. ஒரு நாட்டின் மன்னர் ஒரு போட்டி அறிவிப்பார். அன்று மக்கள் எவ்வளவு தூரம் ஓடுகிறார்களோ அந்த நிலமெல்லாம் அவர்களுக்குச் சொந்தம் என. ஒரு சிறந்த ஓட்டப் பந்தயக்காரன் இருப்பான். அவன் அதிகாலையில் இருந்தே எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடுவான். அந்தி சாய்கையில் நாட்டில் பாதியை ஓடிக் கடந்திருப்பான். அவனால் அதற்கு மேல் ஓடவே முடியாது. ஆனால் இன்னும் அரை மணி நேரம் ஓடினால் கூடுதல் நிலப்பரப்பு சொந்தமாகுமே என மேலும் முக்கி முக்கி ஓடுவான். இறுதியில் நெஞ்சு வலி கண்டு கீழே விழுந்து செத்துப் போவான். எங்கே ஓடுவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிந்திருப்பது முக்கியமான அறிவு. அப்படித்தான் இந்த வாரம் 70 மணி நேர வேலைத் திட்டமும் முடியும்.

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி எந்த யோசனையும் இல்லாமல் அல்லது ரத்தமும் சதையுமான மனிதர்களை ரோபோக்கள் எனக் கருதி அல்லது ஆதிகால அடிமைகள் என எண்ணி போகிற போக்கில் உளறி இருக்கிறார். அதற்கு எந்த மதிப்பும் இல்லை. நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் மக்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, நிம்மதியாக இருப்பதையும் சேர்த்துதான். அப்படித் தன் குடிகளைப் பலியிட்டு எதற்கு ஒரு நாடு முன்னேற வேண்டும்?

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement