For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

என்னாது - 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டாச்சா? -பிரதமரின் பேச்சுச் சர்ச்சை!

08:22 PM Jan 17, 2024 IST | admin
என்னாது   25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டாச்சா   பிரதமரின் பேச்சுச் சர்ச்சை
Advertisement

கேரளாவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குருவாயூர் கோவில் சென்று தரிசனம் மேற்கொண்டார். அதன்பிறகு ரூ. 4,000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, "வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை காங்கிரஸ் கொடுத்தது. ஆனால் நாங்கள் அந்த பணியை செய்துள்ளோம். நமது பணியின் தாக்கம் நாட்டின் வளர்ச்சியில் தெரிகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வந்துள்ளது. நமது நாட்டில், ஐந்து தசாப்தங்களாக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை கொடுத்தன. ஆனால் பாஜக ஆட்சியில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திருப்பது பெரிய விஷயம்” என்றார்.

Advertisement

உண்மை என்னவெனில் என்னவெனில், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் உலக நாடுகளின் தரவரிசைகளில் ஒன்றான உலக பசி குறியீடு வரிசை வேறு கதையை சொல்கிறது என்பதுதான். 125 நாடுகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 111-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. அதாவது அந்தளவுக்கு பசிக் கொடுமை இந்தியாவில் நிலவுகிறது.கடைசிக்கும் கொஞ்சம் முன்னால் உலகப் பசி பட்டியலில் இருக்கும் இந்தியாவில் 25 கோடி பேர் எப்படி வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருக்க முடியும்? வாய்ப்பே இல்லை என்பதுதானே நிதர்சனம்?

Advertisement

ஏற்கெனவே 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டதாக மோடி சொல்லும் கருத்தை பற்றி பல பொருளாதார நிபுணர்கள் விமர்சனம் வைத்திருக்கின்றனர். அவற்றில் முதலாவது, நிதி ஆயோக்கின் அறிக்கை சுட்டிக் காட்டும் Multidimensional Poverty in India எனப்படும் MPI தரவு. இந்த தரவை கணக்கிடும் முறை என்ன தெரியுமா? மத்திய அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்கள் எத்தனை பேரை சென்றடைய முடிகிறது போன்ற தரவுகளை கொண்டுதான் பன்முகத்தன்மையிலான வறுமை எனப்படும் இந்த MPI தரவு கணிக்கப்படுகிறது. இந்த தரவை மட்டும் கொண்டு வறுமையை கணக்கிட முடியாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

நிதி ஆயோக்கின் அறிக்கை இன்னொரு விஷயத்தையும் முன் வைக்கிறது. அதாவது 2030ம் ஆண்டுக்குள் இந்த ’பன்முகத்தன்மையிலான வறுமை’யை பாதியாக்கி தன்னிறைவு வளர்ச்சி இலக்கை இந்தியா எட்டி விடும் என்கிறது. இந்த ‘பன்முகத்தன்மையிலான வறுமை’தான் உள்ளபடியே உண்மையான வறுமை என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளலாம். இதை குறைத்து தன்னிறைவு வளர்ச்சியை உண்மையிலேயே எட்டிவிட முடியுமா? தன்னிறைவு வளர்ச்சி என்பது அரசின் உதவியின்றி தன்னளவில் உழைத்து வளருவது. இந்திய மக்கள்தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு உணவை உத்தரவாதப்படுத்த மானிய விலையில் அரசாங்கம் உணவை வழங்கி வருகிறது. இதன் அர்த்தம், மானிய விலையில் வழங்கினால்தான் மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகையினரால் உணவே உண்ண முடியும் என்கிற நிலை இருப்பதே.

அரசாங்கத்தின் உதவியின்றி, இந்திய பெரும்பான்மையால் உணவு கூட பெற முடியாதபோது அவர்கள் எப்படி அரசாங்கத்தின் உதவியின்றி தன்னிறைவு பெற்றுக் கொள்ள முடியும்? முடியவில்லை எனில், வறுமையை பாதியளவுக்கு எப்படி குறைக்க முடியும்? வேண்டுமானால் வறுமையின் உண்மையை எடுத்துக் காட்டாத ஒரு தரவை வைத்துக் கொண்டு கதை விடலாம், அவ்வளவுதான்.

மேலும் வறுமை இருவிதமாக வகைப்படுத்தப்படுகிறது. ‘அப்பட்டமான வறுமை’ (absolute poverty), ‘ஒப்பீட்டு வறுமை’ (relative poverty). ‘அப்பட்டமான வறுமை’ என்பது எந்த அடிப்படை வசதிகளையும் பெற முடியாத நிலையைக் குறிப்பது. மிகக் குறிப்பாக வீடற்று சாலை ஓரத்தில் வசிப்பவர்களை இந்தப் பிரிவின்கீழ் சேர்க்க முடியும். அதேபோல் ‘ஒப்பீட்டு வறுமை’ என்பது பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி இருப்பவர்களைக் குறிக்கக் கூடியது.

இவர்களால் அடிப்படைத் தேவைகளை குறைந்த அளவிலேனும் பெறமுடியும். ஆனால், சமூக அமைப்பில் பிறருடன் ஒப்பிடுகையில் இவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கியதாக இருக்கும். இப்போது இந்தியா எதிர்கொண்டிருக்கும் சிக்கல் என்னவென்றால், ஒப்பீட்டு வறுமையில் இருப்பவர்கள், அப்பட்டமான வறுமையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதுதான்.

அப்படி இருக்கையில் பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அடிப்படையில் வறுமை என்பது ஒருவர் செலவு செய்யும் வலிமையை வைத்தே கணக்கிடப்படும். கடந்த காலங்களில் இதைத்தான் வறுமைக் கோடு எனக் குறிப்பிடுவார்கள். 2004-05ம் ஆண்டு நிலவரப்படி கிராமத்தை சேர்ந்த ஒருவர் மாதத்தில் 447 ரூபாய்க்கு குறைவாக செலவு செய்தால் அவர் வறுமையில் இருக்கிறாரென பொருள். நகரத்தை சேர்ந்தவர் 578 ரூபாய்க்கு குறைவாக செலவு செய்தால் வறியவர் என பொருள். இது போல மீண்டும் வறுமையின் நிலை இந்தியாவில் கணக்கிடப்பட்டது கடந்த 2011-12ம் ஆண்டில்தான். அதன்படி இந்திய மக்கள்தொகையின் 21.9 சதவிகிதம் பேர் வறுமையில் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. 2014ம் ஆண்டில் பாஜக அரசு ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. அடுத்த ஐந்து வருடங்களில் - அதாவது 2017ம் ஆண்டில் - வறுமைக்கான கணக்கீடு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எடுக்கப்படவில்லை. குடும்பங்களின் செலவின கணக்கெடுப்பும் எடுக்கப்படவில்லை. இவை இரண்டும் இயல்பாக விடுபட்டவையல்ல.

இந்தியாவின் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்று, சமத்துவமின்மை. பொருளாதார ரீதியாகவும், வாழ்வுரிமை ரீதியாகவும் இந்தியா கடும் ஏற்றத்தாழ்வை கொண்ட நாடாக உள்ளது. மக்கள் தொகையில், உயர் வர்க்கத்தில் உள்ள 10 சதவீத பிரிவினரிடமே 80 சதவீத சொத்துகள் இருக்கின்றன. இந்த விகிதாச்சாரமே இந்தியாவை மீள முடியாத சுழலுக்குள் தள்ளியுள்ளது. இவை தலைமுறை தலைமுறையாக மக்களை வறுமையில் ஆழ்த்தச் செய்கிறது.

அத்துடன் தற்போதுள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால் தனி நபர் வருவாய் 7 ஆண்டுகளுக்குமுன் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில்தான் தற்போதும் இருக்கிறது. குறிப்பிடும்படியாக மேம்படவில்லை. ஆனால் விலைவாசியோ இருமடங்காகிவிட்டது. உதாரணமாக 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு டீ-யின் விலை 5 ரூபாய். ஆனால் தற்போது 10 ரூபாய். எனில், போதிய வருமானம் இல்லாத ஒருவரால் இந்தச் சூழலை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இந்தச் சூழல் மேலும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2016ம் ஆண்டில்தான் பணமதிப்புநீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, பெரும் பொருளாதார அநீதி இந்தியாவில் நிகழ்த்தப்பட்டது. ஜிஎஸ்டி, எரிவாயு விலை என அடுத்தடுத்து பொருளாதார அநீதிகள் இந்திய மக்களின் மீது தொடுக்கப்பட்டன. 2017ம் ஆண்டில் Business Standard எடுத்த கணக்கெடுப்பில், கடந்த 40 வருடங்களில் இல்லாதளவுக்கு மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணமதிப்புநீக்கம் தொடங்கி அடுத்தடுத்து தொடர்ந்து நீடித்த பொருளாதார அநீதிகளின் தாக்கம் இன்றளவும் மக்களிடையே நீடிக்கிறது. அந்த உண்மையின் சான்றாகவே உலகப் பசி தரவரிசை பட்டியல் இருக்கிறது.

இத்தகைய பின்னணியில் தேசிய ஆய்வறிக்கைகளின்படி, கடன் மற்றும் வேலைவாய்ப்பின் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், பல்லாயிரம் கோடி கடன் பெற்ற ஒருவர் கூட மகிழ்ச்சியற்று இருப்பதாக எந்த விவரங்களும் வெளிவரவில்லை. ஆனாலும் இங்கு பெரும் செல்வந்தரும் சுகாதாரமான காற்றை பெற்றுவிட முடியாது. காற்று மாசு, சுகாதாரமற்ற குடிநீர், தரமற்ற உணவுகள், முறையற்ற கட்டமைப்புகள், நீதியின்மை, சாதியக் கொடுமைகள், ஊழல், பாலினப் பாகுபாடு எனப் பலவும் இந்தியாவின் தரத்தை மட்டுப்படுத்துகின்றன.130 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தனி நபர் வருமானம் ஒரு வேளை உணவுக்கே போதுமானதாக இல்லை. இந்த நிலையில் -  மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில், பொய்களை எந்தத் தயக்கமுமின்றி வழக்கம்போல் பொழிகிறார் மோடி.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement