தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இரும்பு சத்து உடலில் அதிகமானால் என்னவாகும்?.

05:28 AM Jul 23, 2024 IST | admin
Advertisement

ரும்புச் சத்து உடம்புக்கு வேண்டும். இன்றியமையாதது. அதனால், பேரீச்சம் பழம் சாப்பிடச் சொல்வார்கள். குடல் இரத்தம் சாப்பிடச் சொல்வார்கள். கீரை சாப்பிடச் சொல்வார்கள். விட்டால் இரும்பைக் கம்பியைக் கூட சாப்பிடச் சொல்வார்கள். உண்மையில், நம் உடலுக்கு நாம் உள்ளே இறக்குமதி செய்யும் பல பொருட்கள் அதிகமாகிவிட்டால் அவற்றை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. அதில் ஒன்று இந்த இரும்பு. ஆல்கஹாலை அதிகமாக இறக்கினால் கூட கல்லீரலைத் தியாகம் செய்தாவது அதை எப்படி வழியனுப்ப வேண்டும் என்று உடலுக்குத் தெரியும். குரங்குகளுக்குக் கூட குடிப்பழக்கம் உண்டு. ஆனால் இரும்பு போன்ற பொருட்கள் உடலில் அதிகமானால் அவுட் ஆஃப் சிலபஸ் ஆகிவிடும். உடலை ஃபெயில் ஆக்கிவிடும். ஆனால் பொதுவாக யாருக்கும் இந்த பிரச்சனை வராது. எவ்வளவுதான் இரும்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் நம் உடல் தேவையான அளவை மட்டும்தான் இரத்தத்திற்குள் உறிஞ்சும். மீதி இரும்பு டாய்லெட்டில்தான் இருக்கும். அதிகமாக இரும்பு சாப்பிட்டு யாரும் அர்னால்ட் ஆகிவிடமுடியாது.

Advertisement

இரும்பு மருந்து போல பத்து முதல் இருபது மில்லிகிராம் அளவில் உடலுக்குத் தினமும் தேவைப்படுவது. பெண்களுக்கு மாதவிடாய் இரும்பையும் வெளியேற்றிவிடுவதால் கொஞ்சம் அதிகம் தேவைப்படும். உணவின் மூலம்தான் இரும்பு கிடைத்தாக வேண்டும். உடலுக்குள் இரும்புச் சுரங்கம் ஏதும் கிடையாது. இருந்திருந்தால் அதானி, அம்பானியெல்லாம் உங்களைத் தோண்டியிருப்பார்கள். பூமியில் மண்ணில் கலந்து கிடக்கும் ஒரு கனிமப்பொருள் பரிணாம வளர்ச்சியில் நம் உடலுக்கு இன்றியமையாததானது ஆச்சரியமானது. மண்ணில்லையேல் மனிதர்களில்லை. இரும்பு, தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம் என்று பல உலோகப் பொருட்களை நம் உடலில் உள்ள புரோட்டீன்கள் தங்கள் மூல அறையில், மூலக்கூறு கட்டமைப்புக்குள் வைத்திருக்கின்றன. இவை இல்லாவிட்டால் அவற்றால் கடமையாற்ற முடியாது. ஹீமோகுளோபின் என்ற புரோட்டீனின் உள்ளே இரும்பு அணு சரியாக உட்காராவிட்டால் தலைகீழே நின்று பிராணயாமம் செய்தாலும் ஆக்ஸிஜன் உடம்புக்குள் செல்லாது. டிராகுலாவாகி ரத்தம் குடிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

Advertisement

ஹெமிங்வே என்று ஓர் ஆங்கில எழுத்தாளர் பலருக்குத் தெரிந்திருக்கும். மொடாக் குடிகாரர். அவருக்குத் தெரியாத சரக்கே கிடையாது. 1899-இல் இதே ஜூலை மாதத்தில் பிறந்தார். அவரது முப்பத்து எட்டாவது வயதிலேயே டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள், லிவர் டேமேஜ் ஆகிவிட்டது, குடியை நிறுத்து என்று. எப்படியும் சாகத்தான் போகிறோம் என்று இன்னும் குடிக்க ஆரம்பித்தார். ஐம்பத்து நான்கு வயதானது. அப்போதும் டாக்டர்கள் அதையே சொன்னார்கள். புலிட்சர் பரிசு வாங்கினார். இன்னும் குடித்தார். ஐம்பத்தைந்து வயது ஆனது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்கினார்.

மொழியே பொறாமைப்படும் அளவுக்கு எழுதுவார் என்பார்கள். அவரது எழுத்துகள் ‘ஐஸ் பெர்க்’ எனும் வகையைச் சேர்ந்தவை. டைட்டானிக் கப்பலை உடைத்த பனிப்பாறை போல. அவர் சொல்லாமல் விட்ட விஷயங்கள் ஆழமாக இருக்கும். பனிப்பாறையின் முகடு போல மிகச் சுருக்கமாக அழுத்தமாக எழுதுவார். ‘அவள் அழகானவள். மீனும் அழகானது. அதனால் அவள் ஒரு அழகான மீன் என்று கருதுகிறேன்’ என்றெல்லாம் எழுதமாட்டார். ‘அவள் ஒரு மீன்’ என்று சுருக்கிவிடுவார். “நன்றாக எழுத வேண்டுமென்றால் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களை எழுதாமல் விட்டுவிடுங்கள். ஆனால், உங்களுக்கு அதைப்பற்றித் தெரியாது என்பதால் அதை எழுதாமல் விட்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் எழுத்தின் சோலி முடிந்தது”, என்பார்.

அவர் எழுதியதாக சொல்லப்படும் ஒரு மிகச்சிறிய சிறுகதை. ‘விற்பனைக்கு: யாரும் அணியாத, குழந்தைக்கான செருப்பு.’ (அவ்வளவுதான் கதை. யோசித்தால் புரியும் கதையின் சோகம்.) இவர் குடியால்தான் செத்துப்போவார் என்று அவரது இளம் வயதிலிருந்தே சுற்றியிருந்தவர்கள் எல்லாரும் முடிவு செய்துவிட்டார்கள். காலங்காத்தாலேயே குடித்துவிடுவார். இவரைப்பற்றி ‘Hemingway drunk before noon’ என்று ஜூலி மில்லர் என்ற பெண் கவிஞர் அவரது புகைப்படத்துடன் எழுதிய கவிதை மிகப்பிரபலம். சுஜாதா கூட இந்த கவிதையைப்பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்.

“அவருடைய அந்த புகைப்படத்தை எடுத்தபோது… அவர் மதியத்திற்கு முன்பே குடித்துவிட்டுத் தரையில் படுத்துக் கிடந்தார். குடியால் அவரது முகம் வீங்கி, தொப்பை அவரது பெல்டுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. ஆணுக்கான ஒரு கவர்ச்சியும் அவரிடம் இல்லை. அப்போது கேமராவின் கிளிக் சத்தம் அவருக்குக் கேட்டது. தரையிலிருந்து தலையைச் சிறிது தூக்கி, "சகோதரி, நீங்கள் எடுத்த இந்த புகைப்படத்தை எங்கேயும் வெளியிட்டுவிடாதீர்கள்”, என்றார். அந்த புகைப்படத்தை ஃப்ரேம் செய்து என் வீட்டுச் சுவரில் தொங்கவிட்டிருக்கிறேன்.”
-
ஹெமிங்வே லிவர் டேமேஜில் சாகவில்லை. மூளை டேமேஜ் ஆகி இறந்தார். அறுபத்தொன்றாவது வயதில் வாய்க்குள் துப்பாக்கியைச் செருகி தன் மூளையையே குறிவைத்துச் சுட்டு - தற்கொலை செய்து கொண்டு - செத்துப் போனார். அதிகமாகக் குடித்து மூளை கெட்டுவிட்டது என்று நினைக்கலாம். அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஹெமிங்வே பற்றிய மேலே உள்ள கவிதையை வாசித்திருந்தால் அவரது உடம்பின் லட்சணம் புலப்பட்டிருக்கும்.

ஹெமிங்வேக்கு ஒரு பேத்தி உண்டு. உடல் பராமரிப்பில் அவருக்கு நேர் எதிர். அமெரிக்காவின் மிக அழகான சூப்பர் மாடலாக அறியப்பட்டவர். டைம், வோக் போன்ற பிரபல அமெரிக்கப் பத்திரிகைகளின் அட்டைப்படங்களை அலங்கரித்தவர். அந்தப் பெண் தனது நாற்பத்திரெண்டாவது வயதில் அந்த அழகான உடலைத் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். ஹெமிங்வேயின் ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்கள். ஹெமிங்வேயின் தாயாரும் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார். இவர்கள் எல்லோரும் இறப்பதற்கு முன் சில வருடங்கள் மனநிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

நீங்களும் இது போன்ற விஷயங்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பார்த்திருப்பீர்கள். ஒரே குடும்பத்தில் சில பேர் பல காலகட்டங்களில் தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பார்கள். ஒரே குடும்பத்தில் சில பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். ஒருகாலத்தில் இதெல்லாம் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் மனரீதியாக இன்ப்ளூயென்ஸ் ஆவது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். சில இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயென்ஸர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனங்களைப் பார்த்து பலரும் அதையே செய்வது போல. நல்லதோ, கெட்டதோ சம்பந்தமே இல்லாதவர்கள் கூட மனரீதியாக ஒருவரை ஒருவர் தாங்கள் செய்வது பாதிப்பதன் மூலமாகதான் இந்த சமூகமே இயங்குகிறது. இது வேறு விஷயம், விவாதம்.

ஹெமிங்வேயின் குடும்பத் துன்பியல் நிகழ்வுகள் இதன் பின்னுள்ள மரபியலைக் கண்டுபிடிக்க உதவின. அவரது குடும்பத்தின் மரபணுக்களில் இருந்த பிரச்சனை இதுதான்: அவர்களது உடல் அவர்கள் சாப்பிடும் உணவிலிருந்து தேவைக்கு அதிகமான இரும்பை உறிஞ்சி இரத்தத்திற்குள் அனுப்பிவிட்டது. மனித உடலுக்குத் தேவைக்கும் அதிகமான இரும்பை இரத்தத்திற்குள் வைத்துக்கொண்டு அதை என்ன செய்ய வேண்டும், எப்படி வெளியே அனுப்ப வேண்டும் என்று தெரியாது. உடலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும். இந்த அளவுக்கதிகமான இரும்பு மூளைக்குள் சென்றுவிட்டால் அங்குள்ள புரோட்டீன்களைக் குழப்பும். தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும். இரும்பின் பார்வையில் அது தன்னை தான் பிறந்த அந்த மண்ணுக்கே திரும்ப அனுப்ப எடுக்கும் முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம்.

யோசித்துப் பார்த்தால், இது வெறும் இரும்புதான், நம்மை அழித்து தான் வாழ முயற்சிக்கும் வைரஸோ, பாக்டீரியாவோ அல்ல. இந்த வியாதிக்கு ‘பரம்பரை இரத்தநிறமாதல்’ (Hereditary haemochromatosis) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஏன் இந்த பெயர் வந்தது என்பதற்கு இதற்கு சம்பந்தமில்லாத ஒரு மருத்துவ வரலாறு உண்டு. ஹெமிங்வே போல அதை எழுதாமல் விட்டுவிடுகிறேன். ஆர்வமிருந்தால் AI-இடம் ஏய் சொல்லு என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சீஷோப்ரீனியா என்று தமிழ்ப்படங்களில் அதிகம் காட்டப்படும் மன வியாதியும் மரபணு சம்பந்தப்பட்டதுதான். ஆனால் அதற்கும் இரும்புக்கும் சம்பந்தமில்லை. நம் மூளையில் உள்ள சில புரோட்டீன்களை நம் உடலின் எதிரி என்று நம் உடலே நினைத்துக் கொண்டு தாக்குவதன் விளைவு - நம்முடனேயே நாம் பேச ஆரம்பித்துவிடுவோம். மரபணுரீதியாக கடத்தப்படும் வியாதி.

ஹெமிங்வே அவரது ‘The old man and the sea’ புத்தகத்திற்காக புலிட்சர் பரிசு வென்றது 1953-ஆம் ஆண்டு. 2011-ஆம் ஆண்டு ‘Emperor of all maladies’ என்று புற்றுநோய் பற்றி புத்தகம் பற்றி எழுதி புலிட்சர் பரிசு வென்றவர் சித்தார்த்த முகர்ஜி என்ற அமெரிக்க-வங்காள டாக்டர். அவரது குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வரும் சீஷோப்ரீனியா வியாதி உண்டு. அவருக்கு அது கடத்தப்படவில்லை.மனித உடலைப்பற்றிய அறிவியல் பல தளங்களில் விரிவடைந்திருக்கிறது. விரிவடைகிறது. இதற்கு முடிவுரை இன்றளவில் இல்லை. உங்களிடம் ஏற்கனவே முடிவுரை இருந்தால் நீங்கள் (கூ)முட்டைவாசிகள்.

யாரோ எழுதியது..

Tags :
healthhemingwayironwriterஇரும்புச்சத்து
Advertisement
Next Article