கவர்னரை முதல்வர் சந்தித்து பேசியது என்ன ?- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதாகவும், இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் இன்று பேசினார். ராஜ்பவனில் கவர்னரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கவர்னர் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி கவர்னரை அவரது மாளிகையில் சந்தித்து பேசினோம். 21 மசோதாக்கள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் 20 மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். ஒரு மசோதா மட்டும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட கோப்புகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அனுமதி தர கோரினோம். அத்துடன், முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக 112 கோப்புகள் முதற்கட்டமாக கவர்னநருக்கு அனுப்பப்பட்டன. அதில் 68 பேரின் முன் விடுதலைக்கு அனுமதி அளித்து, 2 பேரின் விடுதலையை ரத்து செய்திருக்கிறார் கவர்னர்.இன்னும் 42 முன்விடுதலை கோப்புகள் கவர்னரிடம் நிலுவையில் உள்ளன.
இது தவிர, மேலும் 7 கோப்புகள் நீதிமன்றத்தில் உள்ளன. மொத்தமாக 49 முன்விடுதலை கோப்புகள் நிலுவையில் உள்ளன. 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனில் 4 உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். அதற்கான ஒப்புதலையும் கேட்டுள்ளோம். இந்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கவர்னரிடம் மனுவாக கொடுத்துள்ளார். முதல்வர் எல்லோருக்கும் மரியாதை கொடுக்ககூடியவர். கவர்னரும் முதல்வர் மீது மரியாதை வைத்திருக்கிறார். இந்த இரண்டுமே இந்த சந்திப்பில் தெளிவாகத் தெரிந்தது. இந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது. விடை எப்படி வருகிறது என்பதை நீதிமன்றத்தில்தான் பார்க்க வேண்டும். சந்திப்பு சுமுகமாக அமைந்தது” என்று தெரிவித்தார்.
அதே சமயம் இந்தச் சந்திப்பு குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினை மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கும் சந்திப்புக்கு கவர்னர் ஆர்.என். ரவி அழைத்திருந்தார். அதன்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணியளவில் கவர்னரை சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமுகமாக இருந்தது. கவர்னரும் முதல்வரும் பரஸ்பரம் மரியாதையை பரிமாறிக் கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். தமிழக மக்களின் நலனில் தாம் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக கவர்னர் மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மாநிலத்தின் மிகப் பெரிய நலனை கருத்தில் கொண்டு முதல்வருடன் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.