'யாமிருக்க பயமேன்?'
இது ஒரு டி ஷர்ட்டில் உள்ள வாக்கியம்!டாட்டூவுக்கு எதிரான போக்கு உலகமெங்கும் துவங்கியுள்ளது. சில பொது இடங்களுக்கு டாட்டூ குத்திய, உடலில் பெயிண்டிங் செய்தவர்களுக்கு அனுமதி இல்லை என்கிற அறிவிப்புகள் வைக்கிறார்கள்.
உடலில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக டாட்டூ (நம்மூரு பச்சைக் குத்திக்கிற பழங்கால கலாச்சாரம்தான்!)போட்டுக்கொள்கிற, உடலில் விருப்பப்பட்டதை வரைந்துகொள்கிற மோகம் மிகவும் அதிகமாயிருக்கிறது.முன்பு எங்கோ தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய டாட்டூ கடைகள் சின்னச் சின்ன ஊர்களில்கூட வந்துவிட்டது. திருவிழா, கண்காட்சிகளில்கூட ஓரமாக உட்கார்ந்து டாட்டூ போடுகிறார்கள்.
தரமற்ற ஊசிகள் கொண்டு பயிற்சியற்ற கலைஞர்கள் கொண்டு டாட்டூ போடும்போது அது உடலின் ஆரோக்கியத்தையேப் பாதிக்கும் விஷயமும்கூட. இதெல்லாம் ஒருவித கவன ஈர்ப்பே. பிடித்தவர்களின் பெயரை அல்லது இனிஷியலைப் போடுவதில் துவங்கி இன்று எதைத்தான் போடுவது என்கிற வரைமுறை இல்லாமல் போய்விட்டது. சிலர் நாக்கில், கண் விழித்திரையில் என்றும் போய்விட்டார்கள். சிலரின் உடலின் நிறத்தை டாட்டூக்களின் நடுவில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
பிரபல விளையாட்டு வீரர்கள், நடிகைகள் மூலம் இன்னும் பிரபலமாகிப் போய்.. தன் சுய விருப்பம் சார்ந்து போட்டுக்கொள்ளும் டாட்டூவை என்னமோ பாகுபலி மேக்கிங் வீடியோ போல வீடியோ எடுத்துப் போடுவது என்று அடுத்தக்கட்டத்திற்குப் போய்விட்டது. என் உடல், என் சுதந்திரம் என்று இதைப் பார்த்தாலும் , அதைக் காட்சிப் படுத்தும்போது சமூகத்திற்குள் வருகிறது இந்தத் தனி மனித சுதந்திரம்.
அதிலும் அந்தரங்கமான பகுதிகளில் ஆபாசமான படங்களை மற்றும் மக்கள் வணங்கும் தெய்வங்களை வரைந்துகொள்வதும், அதைப் பதிவாக்குவதும் வக்கிர மனங்களின் வெளிப்பாடாகத்தான் பார்க்க இயலும். அது குறித்து எழுதப்படுகிற பதிவுகளில் இடம்பெறும் கருத்துக்கள் அதைவிடவும் மலினமாக இருக்கின்றன.சட்டப்படியும் குற்றமாகிற செயல்களைக் கேலி செய்வதை விடவும் கண்டிப்பதுதான் முக்கியம்.
இது பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் விஷயம் என்று வழக்கு பாய்ந்தால் 'யாமிருக்க பயமேன்?' என்று முருகர் துணை நிற்பாரா?