ரயில் ஓட்டுநர்களின் குறைகள் என்ன?- ராகுல் காந்தி கேட்டறிந்தார்!
ஒரு ரயில் விபத்து நடந்தால் அந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மீது விசாரணை நடத்தப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ரயில் ஓட்டுநர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறையை கேட்டுள்ளார். இந்த யோசனை ஏன் ஆளுங்கட்சியை சேர்ந்த யாருக்கும் வரவில்லை என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.
இருப்பு பாதைகளின் வழித்தடங்களை நம் தேச வரைப்படத்தில் பார்க்கும் போது ரயில் பாதை நம் தேசத்தின் நரம்புகளாக காட்சியளிக்கும். உலகத்திலுள்ள மிகப்பெரிய தொடர் வண்டி வலையமைப்புகளில் நம் இந்திய ரயில்வேயும் ஒன்று. அதிகளவு பணியாளர்கள் கொண்டதில் உலகளவில் ஏழாவது இடத்திலிருக்கும் சிறப்பு பெற்றது நம் இந்திய ரயில்வே துறை (கிட்டதட்ட 1.4 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்) நாம் 500 கிலோ மீட்டருக்கு ரயிலில் பாதுகாப்பாக சுகமாக பயணிக்கிறோம் என்றால் அதற்குப் பின்னணியில் தோரயமாக 250 க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. மிகையாக கருத வேண்டாம். மிக குறைவாகவே சொல்லியிருக்கிறேன். ஆம் ஒரு ரயில் என்ஜினில் ஒரு ஓட்டுநர், ஒரு உதவி ஓட்டுநர், கார்டு பெட்டியில் ஒரு கார்டு என்று சொல்லப்படும் கண்காணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பல ஸ்டேஷன் மாஸ்டர்கள். அவர்களுக்கு உதவியாக உதவியாளர்கள்.. ரயில் பாதையை சீர் செய்பவர்கள். சிக்னல் சரியாக இயங்க தினந்தோறும் ஆய்வு செய்யும் தொழில் நுட்ப அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள். ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலைய நடை மேடைகளை சுத்தம் செய்யும் துப்புரவாளர்கள். ரயில்வே போலீசார் என பல நிலைகளில் பல துறைகளாக ஒன்றிணைந்து நமது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறார்கள்.
இவர்களில் டிரெயின் பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் மற்றும் கார்டு எனப்படும் கண்காணிப்பாளர் பணியானது மிகுந்த நுட்பமாகவும், எந்நேரமும் புத்துணர்ச்சியுடன் அசதி ஏற்படாதவாறு உழைக்க வேண்டியதொன்று. ரயில் ஓட்டுநருக்கு அதிக கவனிப்புத் திறன், துரிதமாக செயலாற்றும் திறன், நுட்பமான நுண்ணிய கண் பார்வை போன்றவை மிக முக்கியம் ஆனால் அவர்கள் பணியிலிருக்கும் போது சிறுநீர், மலம் கழிக்க இயலாது. ரயில் என்ஜினில் நாம் பயண செய்யும் ரயில் பெட்டியிலுள்ளது போல கழிப்பறை இல்லை. ரயில் குறித்த காலத்தில் சரியாக இயக்க வேண்டும். சிக்னல் கொடுக்கப்பட்டால் உடனடியாக ரயில் இயக்க வேண்டும் எனும் போது அவர்கள் தங்களது இயற்கை உபாதைகளை எப்படித் தீர்க்க முடியும்? ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் சமயத்தில் அல்லது சிக்னலுக்காக நடு வழியில் காத்திருக்கும் போது கிடைக்கும் நேரத்தில் தான் முடியும் என்கிறார்கள் ஒரு ஓட்டுனர்கள். இச்சூழலில்தான் அண்மையில் ஏற்பட்ட ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று நாடு முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ரெயில் ஓட்டுநர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்
அப்போது ரயில் ஓட்டுநர்களின் முறை என்ன? அவர்களுடைய மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்று ராகுல் காந்தி கேட்டார். பெரும்பாலான ரயில் ஓட்டுநர்கள் ஓய்வு கிடைப்பதில்லை என்றும் நீண்ட தூரம் ரெயில்களை இயக்கும் போது வீடுகளை விட்டு வெகு தொலைவு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதிக நேரம் ரயில்களை இயக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் ஓட்டுனருக்கு போதிய இடைவெளி கிடைப்பதில்லை என்றும் கூறினர்.
இதனை அடுத்து ரயில் ஓட்டுநர்களின் குறைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று ராகுல் காந்தி அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார். ரயில் ஓட்டுனர் தங்களுக்கு வாரத்தில் 46 மணி நேரம் ஓய்வு அளிக்க வேண்டும் என்றும், உதாரணமாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீடு திரும்பினால் ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஓய்வு வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ரயில் ஓட்டுநர்களின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கு போதிய ஓய்வு மற்றும் இடைவெளி கொடுத்தால் மட்டுமே அவர்கள் கவனத்துடன் ரயில்களை இயக்க முடியும் என்றும், ஒரு ரயிலில் உள்ள நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் ரயில் ஓட்டுநர் கைகளில் இருப்பதால் அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது ரயில்வே துறையின் கடமை என்றும் கூறப்பட்டு வருகிறது.
நிலவளம் ரெங்கராஜன்