தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

விசிக இல்லாத திமுக என்ன ஆகும்? - ஒரு அலசல்!

06:04 PM Sep 15, 2024 IST | admin
Advertisement

மீப காலமாக மது ஒழிப்பு மாநாடு முதற்கொண்டு நிகழும் செய்திகளைப் பார்த்தால், கூட்டணியில் மாற்றங்கள் நிகழும் என்றே தோன்றுகின்றன.

Advertisement

பலரும் சொல்லும் கூற்றுப்படி:

அதிமுக விசிக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி.
அல்லது
அதிமுக விசிக நாதக கம்யூனிஸ்ட்

Advertisement

பாஜக & தவேக நிலைமை?

பாஜக வழக்கம்போல பாமக & தேமுதிக கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளலாம். இதில் ஒரு தவிர்க்க முடியாத சந்தேகம்; விசிக திமுகவை விட்டு விலகினால் பாமக திமுகவுடன் இணையும் வாய்ப்பு அதிகம் என்பது கருத்தாக இருக்கிறது. அப்படி பாமக திமுகவுடன் போய்விட்டால் தேமுதிக பாஜகவுடன் தொடர்வதை யோசிக்கும். அல்லது தேமுதிக வேண்டுமா என்பதை பாஜக யோசிக்கலாம். ஒருவேளை அதிமுகவின் மண்டையைக் கழுவி பாஜக கூட்டணி சேர்ந்தால் அங்கு காங்கிரஸ் நிச்சயம் இடம்பெறாது. விசிக-வும் யோசித்துச் செயல்படும் நிலைக்குத் தள்ளப்படும்.

சரி, விசிக திமுக-வை விட்டு விலகினால் யாருக்கு நன்மை & யாருக்குப் பாதிப்பு?

சில தரவுகளை அலசலாம்.

வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கை சுமார் 6 கோடியே 50 லட்சம் பேர். ஒருசில லட்சங்கள் வேறுபாடு இருக்கலாம். இந்தத் தகுதியானவர்களில் வாக்களிக்கச் செல்பவர்கள் சுமார் 4.40 கோடிப்பேர். ஒன்றிரண்டு லட்சங்கள் மாறுபடலாம். இதில் ஆண்கள் சுமார் 2.10 கோடி & பெண்கள் 2.30 கோடி. இப்போதைய சூழ்நிலையில் திமுக மேல் என்னதான் குறைகள், குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதிக வாக்குகள் அவர்களுக்கே விழும். அதற்குப் பல காரணங்கள் உண்டு.பொதுவாகப் பெண்கள் வாக்குகள் யாருக்கு அதிகமாக விழுகிறதோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஜெ-வை அசைக்க முடியாத சக்தியாக வைத்திருந்தது இந்தப் பெண்களின் வாக்குகள்தான். அதற்கு முன்பு எம்ஜிஆருக்கும்!

ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, திருமா, சீமான், அன்புமணி, செல்வப் பெருந்தகை, அண்ணாமலை... இவர்களில் பெண்கள் வாக்கு யாருக்கு அதிகம் செல்லும்?

சந்தேகமில்லாமல் ஸ்டாலினுக்குத்தான்.

முன்பு கலைஞர்மேல் பெண்களுக்கு தேவையற்ற வெறுப்பு இருந்தது. அதற்குக் காரணம் எதிரே இருந்த எம்.ஜி.ஆரும், ஜெ-வும். ஆனால் அத்தகைய வெறுப்பு இப்போது ஸ்டாலின்மேல் இல்லை. பெண்கள் சார்ந்த நலத்திட்டங்கள் அவர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. என்னதான் மது ஆறாக ஓடுகிறது, போதைப் பொருட்கள் தாராளமாகப் புழங்குகிறது, காவல்துறை மோசமாக இருக்கிறது, எதுவும் வேகமாக நிறைவேறுவதில்லை போன்ற பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் பெண்களின் மனதை மாற்றப் போதுமானதாக இல்லை. அந்த 2.30 கோடி பெண்களின் வாக்குகளில் யார் கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சுமார் ஒரு கோடி பெண்களின் வாக்குகள் திமுகவிற்கு உண்டு. ஒவ்வொரு தொகுதியிலும் அது சுமார் 20%. இன்னும் 15-20% எடுத்தாலே அந்தத் தொகுதியில் வெற்றிபெறும் வாய்ப்பு உண்டு. அந்த 15-20%-ல் இஸ்லாமியர்களின் பங்களிப்பு 5-8% வந்துவிடும். பாரம்பரிய முஸ்லீம் லீக், இஸ்லாமிய இளைஞர்களை அதிக அளவில் கவர்ந்திருக்கும் தமீமுன் அன்சாரியின் மஜக ஆகியவை போதும்.

வழக்கம்போல காங்கிரஸ்(இருந்தால்) மதிமுக, பாமக(இணைந்தால்) மற்றும் சில உதிரிக் கட்சிகளின் வாக்குகளைக் கூட்டி அள்ளினால் அதுவொரு 10%வரை தேறும்.விசிக இல்லாத திமுக நிச்சயம் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகம். ஒரு 50 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும். மதில் மேல் பூனையாக எந்தப் பக்கமும் சரியலாம்.

இப்போது அதிமுக விசிக கூட்டணி பற்றிப் பார்ப்போம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்கு சுமார் 18%. விசிக-வின் புரஜெக்டட் வாக்கு சுமார் 10%. இவர்களுடன் SDPI என்ற இஸ்லாமியக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில உதிரிக் கட்சிகள் சேர்ந்தால் அவை கொண்டுவருவது 5-7% வாக்குகள். இந்தக் கணக்கு கொங்கு மண்டல 70 தொகுதிகளில் ஒரு மாதிரியும், வட தமிழகத்தில் வேறு மாதிரியும் இருக்கும். திருச்சிக்குத் தெற்கே கன்னியாகுமரிவரை கணக்கு மாறுபடும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்கள் என்பவர்கள்:
1. கவுண்டர்கள்
2. மதுரைக்கு மேற்கே உள்ள தேவர்கள்
3. ராமநாதபுரம் சுற்றியிருக்கும் தேவர்கள்
4. வட தமிழகத்தின் வன்னியர்கள்
5. வட தமிழகத்தின் பறையர்கள்
6. தென் தமிழகத்தின் பள்ளர், அருந்ததியர் மற்றும் சில தாழ்த்தப்பட்ட சாதியினர்
7. தமிழ்நாடு முழுவதும் பரந்துவிரிந்திருக்கும் இஸ்லாமியர்கள்
8. அவர்களை அடுத்து வரும் கிருஸ்தவர்கள்.

விசிக-வுக்கு ஆட்சியில் பங்கு என்று அதிமுக அறிவித்தால், அதனை அந்தக் கட்சியிலுள்ள கவுண்டர் & வன்னியர் சமூக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி எழும் என்று சில நபர்கள் கூறுகிறார்கள். சாதிப் பாகுபாடு என்னதான் குறைந்திருந்தாலும் அது இன்னும் கிராமங்கள் அளவில் மேலோங்கி இருப்பதால் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பு அதிமுக-வைப் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். ஒன்று சேரும்போது அதிகமாக வேண்டிய வாக்குகள் பாதிப்படையாமல் இருக்க இப்போதே கருத்துக்கணிப்பு நடத்துவது அவசியமாகிறது. ஒருவேளை நாதக இந்தக் கூட்டணியுடன் இணைந்தால் சில விழுக்காடு வாக்குகள் அதிகரிக்கலாம். அனைத்துத் தொகுதிகளிலும் 30-35% வாக்குகள் வாங்கும்போது, குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடையும் வாய்ப்பு அதிகம்.

நிச்சயம் இந்தத் தேர்தலில் பணம் பெரிய பங்கு வகிக்கும். யார் அதிகப் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே வாக்குகள் அதிகம் விழும். ஆவரேஜாக ஒரு தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வரும் எனில் (தகுதியானவர்கள் 2.50 லட்சம்) குறைந்தபட்சம் 1.50 லட்சம் பேருக்குச் சுமார் 1000 ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்கு 15 கோடி ரூபாய் வேண்டும். தேர்தல் செலவு என்பது தனி. ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் சுமார் 300 பூத் கமிட்டிக்கும், கட்சிக்காரர்களுக்கும் செலவு செய்ய அதற்குத் தனியாக 1.50 - 2 கோடிவரை தேவைப்படும். ஒருவேளை ஒரு கட்சி 1000 ரூபாய் கொடுக்கும்போது மற்ற கட்சி 1500 கொடுக்க வேண்டியது வரும். அது 23 கோடி. எனவே, ஒரு தொகுதியில் தேர்தலைச் சும்மா சந்திக்க ஒரு கோடிவரை செலவு செய்ய வேண்டும். வெற்றிபெற 25 கோடிவரை செலவு செய்தாக வேண்டும்.பணத்திற்குப் பின்னால்தான் மதம், சாதி அனைத்தும். இதில் நாதக-வின் வாக்குகள் மட்டும் விதிவிலக்கு.

இப்போது கையில் வைத்திருக்கும் 4 எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கப் போகிறார்களா, இழக்கப் போகிறார்களா அல்லது அதிகப்படுத்தப் போகிறார்களா என்பதை காலம் சொல்லும். இவற்றை அனைத்துக் கட்சிகளும் அலசினால் அவர்களுக்குத் தெளிவு வரலாம். ஒருவேளை கிடைக்கப்போகும் 500, 1000 கோடி முக்கியம் என்று நினைத்தால் காட்சிகள் மாறும்.

பார்ப்போம் என்ன நடக்கப்போகிறதென்று!

-கஸாலி

Tags :
ADMKallaiancedmkthirumavalavanVCKஅதிமுககூட்டணிதிமுகதிருமாவளவன்விடுதலைச் சிறுத்தைகள்
Advertisement
Next Article