கல்யாண முடக்கிகள்!
நேற்று(17-1-2024) காலை 6 மணி முதல் 9 மணி வரை, குருவாயூர் கோவிலில், நடக்கவிருந்த திருமணங்களுக்கு அனுமதி இல்லை என்றும், அந்தத் திருமணங்களைக் காலை 6 மணிக்கு முன்னரோ, 9 மணிக்குப் பின்னரோ நடத்திக் கொள்ளலாம் என்றும் குருவாயூர் கோவில் நிர்வாகம் திடீரென அறிவித்தது! அதே நேரம், மலையாள நடிகரும், பாஜக முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும், அடுத்தப் பிறவியில் பிராமணனாகப் பிறக்க வேண்டும் என்றும், சபரிமலை தந்திரியாகப் பிறந்து, சபரி மலை அய்யப்பனை ஆரத்தழுவி வணங்க வேண்டும் என்றும் கூறிவரும் சுரேஷ் கோபியின் மகளின் திருமணம், அதே குருவாயூர் கோவிலில் அதே நேற்றைய தினம் 17-1-2024, காலை 8-45 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.
அதாவது, ஏற்கனவே திட்டமிடப்பட்டு நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துத் தங்களது உற்றார் உறவினர்களைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் திருமண விழாவுக்கு வருமாறு அழைப்புகள் அளிக்கப்பட்ட பிறகு, திடீரென்று தங்கள் வீட்டுத் திருமணங்களை, நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமண நேரத்திற்கு ஏற்ப குருவாயூரப்பனின் சாதாரண பக்தர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பொருள்! அதற்கும் காரணம் இருந்தது! சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள நமது பிரதமர் வருகிறாராம். பிரதமர் வருவது அரசு நிகழ்ச்சி அல்ல! சுரேஷ் கோபியின் மகள் திருமணமும் அவரது தனிப்பட்ட நிகழ்ச்சி தான்! இப்படி ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சிக்காகத் தங்கள் வீட்டுக் குழந்தைகளின் திருமணங்களை மாற்றி வைக்கும் அறிவிப்பு கேரளாவில் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது;
ஆனால், வழக்கம் போல், மலையாள ஊடகங்கள், மாலை நேர விவாதங்கள் என்ற பெயரில் இன்று வரை முணுமுணுக்கக் கூடவில்லை என்பது மட்டுமல்ல. தங்களது #நம்பிக்கைகள் #ஆசாரங்கள் என்றெல்லாம் துள்ளும் எவரும் இது வரை வாய் திறக்கவில்லை. தன் மகளின் திருமணத்திற்காக, நாட்டின் பிரதமர் வரையிலான VIP களை அழைக்க சுரேஷ் கோபிக்கு இருக்கும் உரிமை, சாதாரண குருவாயூரப்பன் பக்தர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது! எத்தனையோ மாதங்களாகத் திட்டமிட்டு, நாளும் கிழமையும் பார்த்துத் தங்கள் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுத்த உறவினர்களை வடி கட்டி, மணமகன் வீட்டிலிருந்து 10பேர், மணமகள் வீட்டிலிருந்து 10 பேர் என்று ஆக மொத்தம் 20 பேர் தான் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளும் அறிவிக்கப் பட்டது; அதுவும், அடையாள அட்டை, பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி எல்லாம் கிடைத்தால் மட்டுமே அந்த 20 பேரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும் என்ற கெடுபிடி அதிகமிருந்தது!
திருமணங்கள் மட்டுமல்ல, நேற்றுநடக்கவிருந்த, குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும் சடங்குகளும், துலாபார நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.இதற்காக, அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு, சாதாரண மனிதர்களுக்கு அளித்துள்ள, அடிப்படை உரிமைகள் குறித்து எவரும் வாய் திறக்க முடியாது. ஏனென்றால், நேற்று நடந்தது அடுத்தப் பிறவியில் பிராமணனாகப் பிறக்கப் போகும் சுரேஷ் கோபியின் மகளின் திருமணம்; அதில் கலந்து கொண்ட பிரதமர் உட்பட பெரிய பெரிய மனிதர்கள்!இது போன்று, எங்கள் ஊரில் பக்கத்து வீட்டுத் திருமணங்களை எதையாவது குண்டக்க மண்டக்க என்று செய்து தடுத்து நிறுத்தும் மனிதர்களைக் கல்யாண முடக்கிகள் என்று அழைப்பது வழக்கம்...!