வெப்பன் - விமர்சனம்!
ஹாலிவுட்டில் சூப்பர் ஹியூமன் மற்றும் ஹீரோ, அனிமேஷன் போன்ற படங்கள் தமிழ் மொழியில் சிறந்த டப்பிங் கலைஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டு, சிறந்த தமிழ் வசனங்களில் உருவாகி தமிழ் ரசிகர்களின் ஆதரவில் பிரபலமாகி உள்ளது . இந்நிலையில் , தமிழில் அது போன்றதொரு கதையை எழுதி அதை படமாக எடுத்திருக்கிறார் டைரக்டர் குகன் சென்னியப்பன். ஆனால் அவர் அந்த முயற்சியில் அளவுக்கு மீறி சொதப்பி விட்டார் என்பதுதான் சோகம்.
அதாவது வேலைவெட்டி செய்யாமல் பிழைப்புக்கு வழிகாட்டும் யூ ட்யுப் சேனல் ஒன்று நடத்தும் ஹீரோ வசந்த் ரவி, சூப்பர் ஹுயூமன் மனிதர்களை கண்டுபிடித்து அவர்கள் பற்றிய தகவல்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்துகிறார். அந்த வகையில் புதிதாக சூப்பர் ஹூயூமன் மனிதர் ஒருவர் இருப்பதாகக் கேள்விப்பட்டு தேனி காட்டுப் பக்கம் செல்கிறார். அதே சமயம், தனது ஆராய்ச்சிக்காக சூப்பர் ஹூயூமன் எனப்படும் மனிதர் ஒருவரிடம் இருக்கும் சீரத்தின் ஃபார்முலாவை கைப்பற்றும் முயற்சியில் ஆராய்ச்சியாளர் ராஜீவ் மேனன் ஈடுபடுகிறார். இவர்கள் இருவரில் யார் அந்த சூப்பர் ஹூயுமன் மனிதரை கண்டுபிடிக்கிறார்கள், அவர் யார்?, அவருக்குள் இருக்கும் சக்தி எப்படி வந்தது? என்பது தான் வெப்பன் படக் கதை..!
மெயின் ஹீராவாக வரும் வசந்த் ரவி. சாதாரண யூடியூபராக, காடுகளின் காதலராக சூழலியல் குறித்து கிளாஸ் எடுப்பது போல் அறிமுகமாகி `அடடே இது டம்மி பீஸோ என யோசிக்க வைத்து விட்டு இண்டர்வெல்லுக்கு பின்னர் ஸ்கோர் செய்திருக்கிறார். கிடைத்தக் கேரகடருக்கு தகுந்தால் போ உடல்வாகுடன் வசந்த் ரவி கச்சிதமாகப் பொருந்திப்போனாலும், ஓவர் ஆக்ட் கொடுத்து ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆகிறார். அதி முக்கிய பாத்திரமான சூப்பர் ஹியூமன் ரோலில் உலா வரும் சத்யராஜூக்கு . எதிர்பார்த்ததை குறைவான ஸ்கிரீன் டைம் என்றாலும் யானையுடன் கட்டிப்பிடித்து விளையாடுவது, மறுபக்கம் வில்லன்களை தயவு தாட்சண்யமின்றி புரட்டிப்போட்டு அடிப்பது, குடும்பத்தை எண்ணி கலங்குவது என கதாபாத்திரத்துக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார். ஏஐ சத்யராஜ் ப்ளாஷ்பேக் காட்சிகளில் வருவதாக விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் அந்தச் சீனகள் எடுபடவில்லை.
வழக்கமான பொம்மை ரோலில் நடிகை தான்யா ஹோப் வந்தார் சென்றார். வில்லன் ரோலுக்கு கெளதம் மேனன் கிடைக்காதக் காரணத்தால் கமிட் ஆகி இருக்கும் மேல் தட்டு நடிகர் ராஜீவ் மேனன், தன் அடியாள் ராஜீவ் பிள்ளை உள்ளிட்டோர் பெரிய அழுத்தமின்றி ஒப்பேற்றிவிட்டு செல்கிறார்கள்.
கேமராமேன் பிரபு ராகவ், டைரக்டரின் வித்தியாசமான முயற்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் தன் பங்களிப்பை செய்து கவனம் பெறுகிறார். மியூசிக் டைரக்டர் ஜிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு ஓரளவு பலம் சேர்த்திருக்கிறது.
முன்னொரு கால விட்டாலாச்சாரியா ஸ்டைலில் மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்சில் எப்படி ஒரு அவெஞ்சர்ஸ் ஃபேமிலி இருக்கின்றதோ அதேபோல் இங்கு ஒரு சூப்பர் ஹீரோ பேமிலியை உருவாக்கும் முயற்சியில் உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிக் கட்ட காட்சியில் இதன் இரண்டாம் பாகத்துக்குரிய குறியீடு கொடுத்ததில் காட்டிய . அக்கறையை படத்தின் திரை கதையிலும் செலுத்தி இருந்தால் கொஞ்சமாபது வரவேற்பை பெற்றிருக்கும்.
குறிப்பாக ஹிட்லர் காலக்கட்டத்தில் சிப்பாய்களுக்கு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சூப்பர் ஹியூமன் சீரம், அதை இந்தியாவுக்கு திருடி வருவது, பல ஆண்டுகள கழித்து அதனை உயிருக்குப் போராடும் தன் மகனுக்கு செலுத்தி பிழைக்க வைக்கும் அப்பா என கன்னாபின்னா கற்பனைக் கதையில் ஆரா, குண்டலினி மூலம் சூப்பர் பவரை எழுப்புவது, புராணக் கதைகளையெல்லாம் கோர்த்து கெடுத்து விட்டார்கள்
மொத்தத்தில் இந்த வெப்பன் - புஸ்வானம்
மார்க் 2/5