தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

யூஜிசி-யின் புதிய விதிகளை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம்- கோவி.செழியன்!

10:25 AM Jan 29, 2025 IST | admin
Advertisement

பல்கலைக்கழக மானியக் குழு ஆகிய யூ ஜி சி-யின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார். மேலும் இது, முழுவதுமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், பல்கலைக்கழகங்களை உருவாக்கி நிர்ணயிக்கும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

Advertisement

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்று அண்மையில் யூ.ஜி.சி. புதிய விதியை கொண்டு வந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (UGC) புதிய வரைவு நெறிமுறைகள் மாநில உரிமைகளைப் பறிக்கின்றது. வரம்புமீறிய சர்வாதிகாரப் போக்குடன் தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சியை அழிக்கின்றது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து UGC-க்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர் சந்திப்பில் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், “ஒன்றிய அரசின் கைப்பாவையாக இருந்து செயல்படக் கூடிய பலகலைக்கழக நிதி நல்கைக் குழு, புதிய வரைவு நெறிமுறைகள் 2025 வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரைவு நெறிமுறைகள் மாநில உரிமைகளை பறிக்கின்றது; மாநிலங்களின் கல்வி அமைப்பு முறையை சீர்குலைக்கின்றது. ஆகவே, ஒன்றிய அரசு இதனைக் கைவிட வேண்டும். யூஜிசி புதிய வரைவு நெறிமுறைகளைத் திரும்ப பெற வேண்டி, பல்வேறு போராட்டங்கள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.

அடிப்படைக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை ஒன்றிய அரசாங்கம் செய்துவரக்கூடிய இடர்பாடுகளை கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒன்றிய அரசின் சதித் திட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும். . யூஜிசி புதிய வரைவு நெறிமுறைகளைத் திரும்ப பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, நாடு முழுவதும் கருத்துகளை எடுத்து செல்ல வேண்டும். இதனை விளக்குவதற்காகவே பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளேன்.

நாட்டு மக்களின் பண்பாட்டு கூறாக அமையும் பள்ளிக் கல்வி - உயர் கல்வி ஆகியவற்றை அந்தந்த மாநில தேவைகளுக்கு தகுந்தாற் போல் அமைத்துக் கொள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு.இந்த மாநில உரிமையைப் பறிக்கும் விதமாக 6 ஜனவரி 2025 அன்று வெளியிட்டுள்ள யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகள் அமைந்துள்ளன. மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள், மாணவர்களின் உயர்கல்வியை ஒழுங்குபடுத்தச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகங்களை யூஜிசி மூலம் கைப்பற்றும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக, நான் சொன்னதை நீங்கள் செய்ய வேண்டும் என்ற சர்வாதிகார போக்கைப் பல்கலைக்கழகங்கள் மீதும் திணிக்கும் வகையில் யூஜிசி வரைவு நெறிமுறைகள் உள்ளன.

துணைவேந்தர் நியமனத்தில் இதுவரை உள்ள நடைமுறை பின்பற்றாமல், நாங்கள் நினைத்தை செய்ய வேண்டும் என்ற அதிகார போக்குடன் துணைவேந்தர் தேர்விலும் தலையிட்டு, முழு அதிகாரத்தையும் ஆளுநருக்கு மாற்றுகிறது.கல்வி அரசியலமைப்பின் ஒத்திசைவு பட்டியலில் உள்ளது. ஆனால் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமலேயே, யூஜிசி புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது வரம்பு மீறிய செயல் ஆகும். இந்த யூஜிசியின் செயல்பாடு மாநில உரிமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கிறோம்.

ஒத்திசைவு பட்டியல் என்றால் மாநில அரசின் கருத்து கேட்டு இருக்க வேண்டும். இதில் யூஜிசி அதிகார வரம்பை மீறி இருக்கிறது. எனவே யூஜிசி தொடர் செயல் பாடுகளை பார்க்கும் போது, ஒன்றிய அரசின் கைப்பாவையாக யூஜிசி செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது.கல்வியாளர்கள் அல்லாத, கல்வி பணி சாராத சார்ந்த ஒருவர்கூட துணைவேந்தராக நியமிக்கலாம் என வரைவுநெறிமுறைகளில் கூறியிருப்பது, கல்வியாளர்களுக்குப் போடப்பட்ட முட்டுக்கட்டை.

கல்வி என்பது மற்ற நிறுவனங்களை நடத்துவது போன்றது அல்ல. மாணவர்களிடம் கல்வி ஆர்வத்தை ஊட்டுதல், பாடத்திட்டங்களை வகுப்பது முதலானவற்றை மேற்கொள்வதற்கு, தொடர்ந்து கல்வி பணி ஆற்றுபவர்களே துணைவேந்தராகப் பணியாற்ற வேண்டும். கல்வி பணி சாராதவர்களும் துணைவேந்தர் ஆகலாம் என்பது உயர்கல்விக்கு விளைவிக்கும் இடையூறு.பட்டப்படிப்பு மூன்றாண்டு, முதுகலை படிப்பு இரண்டாண்டு என்ற நிலையை மாற்றி, எந்தவொரு ஆண்டிலும் சேரலாம், வெளியேறலாம் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி பயில்வதில் இடைநிற்றலுக்கு இது வழிவகுக்கும்.

தொழில் கல்வியில் இருந்து பொது கல்விக்கும், பொது கல்வியில் இருந்து தொழில் கல்விக்கும் மாறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இது மாணவர்களின் கல்வித் திறனை அழிக்கும் முயற்சி.இரண்டு பாடத் திட்டங்களும் வெவ்வேறாக இருக்கும் நிலையில், இரண்டையும் மாறி மாறி படிப்பது எதிலொன்றிலும் உரிய தகுதி பெற முடியாத நிலையை உருவாக்குகின்றது.

ஓரே நேரத்தில் இரண்டு இளங்கலை, முதுகலை படிக்கலாம் என்பது, கல்வியை முறையாக கற்கும் வழிமுறைகளை சீர்குலைக்கிறது.இந்தியாவில் உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம். 2030ல், 50 சதவீதத்தை அடைய வேண்டும் என்பது ஒன்றிய அரசு இலக்கு. ஆனால் தற்போதே 48 சதவீத இலக்கை எட்டிவிட்டது தமிழ்நாடு. ஆகவே உயர்கல்வியை சீர்குலைக்கும் முயற்சியாகவே இந்தப் புதிய வரைவு நெறிமுறைகளைப் பார்க்கிறோம்.

வரைவு நெறிமுறை திருத்தங்களை ஏற்காவிட்டால், பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டங்கள் செல்லாது, யூஜிசி கூட்டங்களுக்கு அழைக்க மாட்டோம், யாரும் பங்கேற்க இயலாது, பல்கலைக்கழக சட்ட அங்கீகாரமும் செல்லாது என மிரட்டல் விடுத்து இருக்கின்றனர்.இந்த சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9 -1- 2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது தொடர்பாக, வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுபோலவே மற்ற மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தெலுங்கானா முதல்வர் அவர்கள் புதிய நெறிமுறைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த வரைவு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது. திரும்ப பெறும் வரை போராடும். அதற்கான பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.பல்கலைக்கழகம் உருவாக்கம், இடம், கட்டடம் கட்டுவது, ஊதியம் வழங்குவது என அனைத்தையும் செய்வது மாநில அரசு. ஆனால் துணைவேந்தர் நியமனத்தில் மட்டும் மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு கூறியிருப்பது எவ்வளவு மோசமான சர்வாதிகாரப் போக்கு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்வரும் 5 - 2- 2025க்குள் இந்த விவகாரத்தில் கருத்துகளை சொல்ல வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முழுவதும் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகிய அனைவரும் பி்ப்ரவரி 5ம் தேதிக்குள் புதிய நெறிமுறைகளைத் திரும்ப பெற வேண்டும் என draft-regulations@ugc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கருத்துகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார்.

Tags :
EducationNew Rulesucg
Advertisement
Next Article