உரிமையை மீற வற்புறுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் -வாட்ஸ் அப் அதிரடி !
வாட்ஸ் -அப் செயலி உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவான தகவல் பரிமாற்றத்திற்காக இந்த ஆப்பை பலரும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் தகவல்களை பத்திரமாக வைத்துக் கொள்வதற்காக வாட்ஸ் -அப் நிறுவனம் 512 பிட் என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறது. அதாவது நீங்கள் அனுப்பும் தகவலில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் 512, 0 மற்றும் 1 என பிரித்து சேமித்து வைக்கப்படும். இதனால் அதனை மீண்டும் ஒருங்கிணைத்து அந்த செய்தியை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும்.
இந்நிலையில் மத்திய அரசு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் புதிய ஐடி விதிகளைக் கொண்டு வந்தது. இந்தியாவில் செயல்பட விரும்பும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த புதிய விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. அந்த புதிய விதிகளில் நீதிமன்றம் உத்தரவிடும் போது ஒரு மெசேஜ்ஜை யார் அனுப்பினார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதை அடுத்து . பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் இச்சட்டத்தை மீறுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இதனை எதிர்த்து இந்நிறுவனங்கள் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது யூசர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் அதில் சமரசம் செய்யக் கொள்ள முடியாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திற்கு இணங்குவது என்பது என்க்ரிப்ஷன் பிராசஸை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும் என்றும் அது தனியுரிமையை மீறும் ஒரு செயல் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜாஸ் கரியா கூறுகையில், "எங்கள் என்க்ரிப்ஷன் முறையை உடைக்கச் சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும். வாட்ஸ்அப் நிறுவனத்தைப் பொறுத்தவரைத் தனியுரிமை தான் எங்களின் முக்கிய கொள்கை. இந்த தனியுரிமையைப் பயனாளர்களுக்குத் தர எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் ரொம்பவே முக்கியம். வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர், பெறும் நபரைத் தவிர வேறு யாராலும் படிக்க முடியாது. இந்த என்க்கிரப்ஷன் இருப்பதாலேயே யூசர்கள் எங்களை நம்புகிறார்கள்" என்றார்.
அதே சமயம், ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட செய்தியால் சமூகத்தில் ஆபத்து ஏற்பட்டால் அதை அனுப்பியவர் யார் என்பதைக் கண்டறியவே மத்திய அரசு இந்த விதிமுறைகளை அறிவித்துள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
டெல்லி ஐகோர்ட்: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட், இதில் சிக்கல் இருப்பது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டது. தனியுரிமை என்பது எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் இருக்க முடியாது என்ற நீதிபதி, இந்த விவகாரத்தில் ஒரு சமநிலை தேவை என்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு கோர்ட் ஒத்திவைத்துள்ளது.