For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அயோத்தி அழைப்பை மரியாதையுடன் நிராகரிக்கிறோம் - காங்கிரஸ் அறிவிப்பு!

06:33 PM Jan 10, 2024 IST | admin
அயோத்தி அழைப்பை மரியாதையுடன் நிராகரிக்கிறோம்   காங்கிரஸ் அறிவிப்பு
Advertisement

யோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்டி முடிக்கப்படாத கோயிலை பாஜக திறக்கிறது. மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அதனை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்யும் அரசியல் ஆக்கியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் என ரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.40 ஆண்டு காலமாக வட இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்த ராமர் கோயில் நிறைவாக விழா காண்கிறது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே எதிர்பார்ப்புகள் தீவிரம் பெற்றிருந்த அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இந்திய விழாவாகவே உருவாகி வருகிறது.

Advertisement

ஆனால் அதையொட்டி அரங்கேறி வரும் அரசியல், ராமர் கோயில் பரபரப்பை விட அதிகமாகி வருகிறது. ராமர் கோயிலுக்கு யாருக்கு அழைப்பு வழங்குவது என்பதில் தொடங்கி எவரை புறக்கணிப்பது என்பது வரை பலவாறான அரசியலும் வெடித்தது. பாஜக தனது தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காக ராமர் கோயில் விழாவினை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பாஜகவினரே வலு சேர்த்தனர். இதற்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர்கள் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்புகள் மற்றும் ஊகங்களின் மத்தியில், கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 22-ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கடந்த மாதம் பெற்றனர்.

நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி வருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டும், ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அண்மையில் அயோத்தியில் ரூ.1,463 கோடியில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும், ராமர் கோயிலுக்குச் செல்வதற்காக அகலப்படுத்தப்பட்ட ராம்பாத், பக்திபாத், தரம்பாத், ஸ்ரீராம் ஜென்மபூமி பாத் ஆகிய 4 சாலைகளையும் சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “550 ஆண்டுகால காத்திருப்பு, வேதனைக்கு இப்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. ஜன. 22-ல்நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக உலகம்முழுவதும் வாழும் இந்துக்களுடன், நானும் பேராவலோடு காத்திருக்கிறேன். அன்றைய விழாவில் அனைவரும் பங்கேற்பது சாத்தியமில்லை. எனவே, அன்று அயோத்திக்கு வர முயற்சி செய்வதற்குப் பதிலாக, கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றிவழிபட வேண்டும். அந்த நாளை தீபாவளியைப் போல பெரிய பண்டிகையாக கொண்டாட வேண்டும்.கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அயோத்திக்கு வந்து ராமரை கண்குளிர வழிபடலாம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அயோத்தியில் குழந்தை ராமர் தங்க நிரந்தரக் கோயில் கட்டப்பட்டுள்ளது” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement