அன்பை விதைக்கும் அரசியலே தேவை!- வயநாட்டில் ராகுல் பேச்சு!
எனது அப்பா ராஜீவ் கொலையில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டவரையே கட்டி அணைத்து, அவரை பற்றி கவலைப்பட்ட அன்புள்ளம் கொண்டவர் பிரியங்கா காந்தி என்று ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு, 13 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரியங்காவும், பா.ஜ.க வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் மற்றும் இடதுசாரி வேட்பாளராக சத்யன் மோகெரியும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் வயநாட்டில் நடந்து வருகிறது.
"பிரதமர் மோடி குறித்துப் பேசப்போவதில்லை என்றும், அவரை பற்றி பேசி சலித்து விட்டது. இந்த கூட்டத்தில் அரசியல் உரையாற்றுவது மற்றும் என் குடும்பத்தாருடன் பேசுவது என இரண்டு விருப்பங்கள் எனக்கு உள்ளது. ஆகவே, நான் என் குடும்பத்தாருடன் பேசுவதைப் போல் உங்களிடம் பேசவே விரும்புகிறேன்" என்றும் தெரிவித்தார்.
மேலும், "காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அரசியலமைப்புச் சட்டம் என்பது கோபத்துடனும், வெறுப்புடனோ எழுதப்பட்டவை அல்ல. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள், துன்பப்பட்டவர்கள், சிறைவாசம் அனுபவித்தவர்களால் எழுதப்பட்டது. அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை அன்புடனும், பாசத்துடனும் எழுதியுள்ளனர். இது அன்புக்கும், வெறுப்புக்கும் இடையேயான சண்டை.இதுவரை தனக்காக பிரச்சாரம் செய்த பிரியங்காவுக்கு முதல்முறையாக நான் வாக்கு கேட்கிறேன். பிரியங்கா இரக்க குணம் கொண்டவர். நல்ல திறமையானவர்" என அவர்களது குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் ''தற்போதைய உலகில் மனிதமும், அன்பும் தேவைப்படுகிறது. எங்கு பார்த்தாலும், வன்முறை, வெறுப்புதான் இருக்கிறது. எங்கும் மனிதநேயத்தைப் பார்க்க முடிவதில்லை. என் தந்தையின் மரணத்தில் தொடர்புடையவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர் நளினி. அவரை என் சகோதரி பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது அவரைக் கட்டி அரவணைத்து ஆறுதல் கூறினார்.நளினியை சந்தித்துவிட்டு வந்து என்னிடம் பேசிய பிரியாங்கா காந்தி, ‘நளினியைப் பார்த்ததற்குப் பிறகு, அவரைப்பற்றி நினைத்தால் கவலையாக இருக்கிறது’ எனக் கூறினார்.
யாரைப் பற்றி பேசுகிறார்… என் தந்தையின் கொலையில் தொடர்புடையவர் எனக் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணைப் பார்த்து என் சகோதரி கவலைப்படுகிறார். அப்படித்தான் அவர் வளர்க்கப்பட்டிருக்கிறார். பிரியங்காவை சகோதரியாகப் பெற்றது என் அதிர்ஷ்டம்.இதுபோன்ற அன்பை விதைக்கிற அரசியல்தான் தற்போதைய இந்தியாவுக்குத் தேவை. வெறுப்பையும், வன்முறையையும் விதைக்கும் அரசியலல்ல. அன்பையும், மனிதத்தையும், மனிதர்கள் மீது காதலையும் உருவாக்கும் அரசியலைதான் நாம் முன்னெடுக்க வேண்டும்” என ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
முன்னதாக பிரியங்காபேசும்போது, “மத்தியில் ஆளும் மோடி அரசு, பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. அவருடைய நோக்கம் உங்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்கி தருவது அல்ல. படித்த இளைஞர்களுக்கு வேலை தருவது அல்ல. சிறந்த சுகாதாரம், கல்வியை வழங்குவது அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.