வயநாடு:ராகுல் ராஜினாமா & பிரியங்கா போட்டி!
கேரள டிஸ்ட்ரிக் வயநாடு பாராளுமன்றத் தொகுதியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அவரின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தார். விதிகளின்படி இரண்டு தொகுதிகளில் வெல்லும் ஒருவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ராகுல் காந்தி கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த நிலையில், தீவிர ஆலோசனைக்குப் பின்னர், ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியைத் தற்போது ராஜினாமா செய்யவிருப்பதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “வயநாடு தொகுதிக்கும் எனக்கும் இடையிலான உறவு உணர்வுப்பூர்வமானது. வயநாடு மக்களுக்காக தொடர்ந்து நிற்பேன். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார். தேர்தலில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். வயநாடு மக்கள், தங்களுக்கு நாடாளுமன்றத்தில் 2 உறுப்பினர்கள் உள்ளதாக நினைக்க வேண்டும். ஒன்று நான். மற்றொருவர் எனது சகோதரி. வயநாடு மக்களுக்காக என் கதவுகள் என்றுமே திறந்திருக்கும்.வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளும் எனக்கு மிகவும் நெருக்கமானவை. வயநாடு மக்களுக்காக நானும் என்னுடைய சகோதரி பிரியங்காவும் எப்போதும் குரல் கொடுப்போம். வயநாட்டுக்கு அடிக்கடி வருவேன். கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் கொடுத்த ஆதரவு, அன்பை மறக்கமாட்டேன்” என்று அவர் கூறினார்.
வயநாடு தொகுதியில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் தொகுதி மக்களுக்காகப் பாடுபடுவேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரியங்கா நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுலுடன் இணைந்து தீவிர பிரசரராம் செய்தார். தற்போது முதல்முறையாக வயநாடு தொகுதி எம்.பி.,பதவிக்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.