தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கூட்டுக் குழுவின் பரிந்துரைக்குப் போன வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா!

05:51 PM Aug 08, 2024 IST | admin
Advertisement

க்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ இன்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வக்ஃப் வாரியங்களில் பெண்களைக் கட்டாயமாகச் சேர்ப்பது உட்பட பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். வக்ஃப் சொத்துக்கள் மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதால் எதிர்கட்சிகள் கடுமையாக கண்டித்தன

Advertisement

வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் 1995இன் படி, இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக நிலங்களை வழங்குவார்கள். அந்த நிலங்கள் மூலம் கிடைக்கும் வருவாயானது மசூதி பயன்பாட்டிற்கு, இஸ்லாமியர்களின் கல்வி உதவி உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தானமாக வழங்கப்பட்ட நிலங்களை நிர்வகிக்கவே 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது.இந்த வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் 1995இல் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் 2024 மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதில் குறிப்பிட்டுள்ள பிரதான சட்ட திருத்தங்கள் பின்வருமாறு…

நாடு முழுவதும் 9.4 லட்சம் ஏக்கர் அளவில் வக்பு வாரிய அமைப்புகளுக்கு சொத்துக்கள் உள்ளன. இவ்வாறு வக்ஃபு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துக்களை மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

வக்ஃபு வாரிய அமைப்புகளில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். அதனை திருத்தி, இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களும் வக்பு வாரியத்தில் பங்கெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வக்ஃபு வாரிய சொத்துக்களுக்கு அந்த அமைப்புகள் உரிமை கோரும்போது அதனை உரிய வகையில் ஆய்வு செய்து உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஷியாக்கள், சன்னி, போஹ்ராக்கள், அக்கானிகள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவமானது வக்ஃபு வாரியத்தில் உறுதி செய்யப்பட வேண்டும் என்று திருத்த மசோதாவில் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு சட்டதிருத்தங்கள் வக்பு வாரிய சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவில் மத்திய அரசு இச்சட்டம் குறித்து விவாதிக்கும். அதன் பிறகு இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்புவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு :

வக்ஃபு சட்டத்திருத்தம் பற்றி காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் மக்களவையில் பேசுகையில், வக்பு சட்டத்திருத்த மசோதா 2024 அரசியலமைப்பின் மீதான அடிப்படைத் தாக்குதல் ஆகும். இந்த மசோதா மூலம், முஸ்லிம் அல்லாதவர்களும் வக்பு ஆட்சிக் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இது மத சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல். இந்திய மக்கள் இந்த மாதிரியான பிரித்தாளும் அரசியலை ஏற்க மாட்டார்கள்.

நாங்கள் இந்துக்கள். ஆனால், அதே சமயம் மற்ற மதங்களின் நம்பிக்கையை மதிக்கிறோம். இந்த மசோதா மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை இந்திய மக்கள் உங்களுக்குத் தெளிவாகப் பாடம் புகட்டினார்கள். இது கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் என்று வக்ஃபு சட்டதிருத்தத்திற்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால்.

திமுக எதிர்ப்பு :

திமுக எம்பி கனிமொழி பேசுகையில், சிறுபான்மையினர் தங்கள் அமைப்புகளை நிர்வகிப்பது தொடர்பான சட்டப்பிரிவு 30இன் மீதான நேரடி விதிமீறலாகி உள்ளது இந்த சட்டதிருத்தம். இந்த மசோதா இஸ்லாமிய மதத்தினரை குறிவைக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினராக நியமிப்பது நியாயமா? இதே போல இந்து கோயில் நிர்வாகத்தில் மற்ற மதத்தினரை அனுமதிப்பீர்களா.?

இந்த சட்ட மசோதாவானது நாட்டு மக்களிடையே பிரிவை ஏற்படுத்தும் முயற்சி. குறிப்பிட்ட மதம், சமுதாயத்தினரை குறிவைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு எதிரான மசோதாவாகும் என்று தனது எதிர்ப்புகளை பதிவு செய்தார்.

அதே சமயம் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் மக்களவையில் பேசினர். இது வக்ஃப் வாரியத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது என்றும், மசூதிகள் விவகாரத்தில் தலையிடும் முயற்சி அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்புவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார்

Tags :
WaqfWaqfActWaqfActBillWaqfBoardAmendmentBillWaqfBoardBillவக்ஃப்வக்ஃப் சட்டத்திருத்த மசோதா
Advertisement
Next Article