தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

குடியரசு நாள் தோன்றிய வரலாறு & கொண்டாடும் முறையை தெரிஞ்சுக்குவோமா?

11:40 AM Jan 26, 2022 IST | admin
Advertisement

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26. சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பதற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கி விட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.“ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர போராட்டம் நடந்தக் காலகட்டத்தில் “1928 ஜனவரி 26 ம் நாளை இந்திய சுதந்திர நாள்” என்று காந்தி அறிவித்தார். அவர் அறிவித்தப்படி சுதந்திரம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த நாள் தான் இன்று குடியரசு தினமாக போற்றப்படுகின்றது.

Advertisement

இன்னும் கொஞ்சம் விரிவாக தெரியணுமா?

Advertisement

இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக ஆண்டுக்கு இருமுறை கோலாகலமாக தேசியக் கொடி ஏற்றி இறக்கப்படுகின்றது. உலக நாடுகள் எல்லாம் ஒருமுறை, அதாவது அந்தந்த நாடு சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடி மகிழ்கின்றன. ஆனால் இந்தியத் திருநாட்டில் மட்டும், சுதந்திர தினம் என்றும், குடியரசு தினம் என்றும் இரு நாட்களாகக் கொண்டாடுகிறோமே ஏன்? நள்ளிரவு! அந்த நடுச்சாம வேளையில் பெயர் தெரியாத சில இளைஞர்கள் கூடிப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஊரே உறங்கிக் கொண்டிருக்கையில்...இவர்களின் கண்களும் காதுகளும் விழித்துக் கொண்டிருக்க, அந்த மையிருட்டில் அவர்கள் உருவமே அவர்களுக்குத் தெரியாத நேரத்தில் அவர்கள் பேசிக் கொண்டது வேறு எவருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை! பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர்களிடம் ஒருவித துறுதுறுப்பு; ஒருவித பரபரப்பு தென்பட்டதை அந்தக் காரிருள் மறைத்துக் கொண்டது. அவர்கள் பேச்சு ஒருவித முடிவுக்கு வந்ததற்கு அடையாளமாக எல்லோரின் தலையும் சம்மதம் என்பது போல ஆடி அசைய அந்த இளைஞர் குழுவின் தலைவன் எதையோ எடுத்து ஒவ்வொருவருக்கும் விநியோகிக்கின்றான்.

எல்லோரும் பெற்றுக் கொண்ட அடுத்த வினாடி... அரைக்கால் டிரவுசர் அணிந்த இளைஞர்கள் எதையோ கைகளில் மறைத்துப் பிடித்துக் கொண்டு கால்கள் பின்னந்தலையில் இடிக்க ஓட்டமாய் ஓடி வருகின்றனர். அவர்கள் ஓடி வந்து நின்ற இடம் மதுரை மீனாட்சியம்மன் கோயில். கோவில் நடை திறக்கப்படவில்லை. திரைப்படக் காட்சி போல அடுத்தடுத்த காட்சிகள் அங்கு அரங்கேறுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் மதில்சுவரை ஒட்டி ஒரு சிறுவன் குனிந்துகொள்ள அவன் முதுகில் மற்றவன், அவன் முதுகில் இன்னொருவன் என்று மளமளவென்று ஒருவரை ஒருவர் ஏணியாக்கி மேலேறுகின்றனர். அங்கிருந்து கோபுரத்துக்குத் தாவுகின்றனர். கிடுகிடுவென கோபுரத்தில் செதுக்கியிருந்த சிலைகளைப் பற்றி தங்கள் கால்களில் மிதித்து ஏறி முன்னேறுகின்றனர். கோபுர உச்சியை அடைந்ததும் தாங்கள் கையோடு கொண்டு வந்ததை அங்கிருந்த கலசங்களில் கட்டுகின்றனர்.கட்டி முடித்து விட்டு கீழே பார்க்கின்றனர். தலை சுற்றிப் போகிறார்கள். ஆஹா! இவ்வளவு உயரத்திலா இருக்கிறோம், என்று எண்ணுகிறார்கள்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுது, தூரத்தில் வருகிறவர் முகம் தெரியாத இருட்டு. கூடல் மாநகராம் மதுரை மாநகர வீதிகளில் பெண்கள் தங்கள் முற்றத்தைப் பெருக்கி சாணம் தெளித்து மாக்கோலம் இட்டு, பசுஞ்சாணத்தை உருண்டை பிடித்து அதன் தலையில் இதழ் விரிக்காத பூசணிப் பூவை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிற காலை வேளை! பால், தயிர், மோர் விற்கும் பெண்கள், வீட்டுக்கு தண்ணீர் சுமக்கும் பெண்கள், காலைக் கடன்களை முடிக்க வீட்டிலிருந்து வெளியேறும் ஆண்கள், அத்தனை பேர்களின் கண்களும் மீனாட்சி அம்மன் கோவில் உச்சியைத் தரிசிக்கிறது.ஆஹா! அடைந்து விட்டோமா?

நாம் அந்தச் சுதந்திரத்தை அடைந்து விட்டோமா? என்று வியப்பு மேலோங்கப் பார்த்து பரவசப்படுகின்றனர். அன்றைக்கு அதிகாலையில் அவர்களின் கண்களுக்கு காட்சியளித்தது மீனாட்சி அம்மன் கோவில் கலசங்களில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடிதான் அது. அதைத்தான் அந்தச் சிறுவர்கள் அங்கே... அந்த உச்சிக்கு எடுத்துச் சென்று கூடல் நகருக்கே தெரிய வேண்டுமென்று கட்டிப் பறக்க விட்டிருந்தார்கள்.

அவர்கள் அப்படிச் செய்யக் காரணம் காந்திஜி அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த கட்டளை அது.

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், “பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்” என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த, “எங்கு, எப்போது, எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்” என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகி விட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பது குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.

நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்.” ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பதாக அவ்வாசகம் அமைந்திருந்தது.அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்... சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளைக் குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1948ல் இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

அது சரி ..இப்போது குடியரசு தினம் எப்படி கொண்டாடப்படும்?

குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியாவின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ராணுவ அணி வகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும். குடியரசு தின அணிவகுப்பு முதன்முறையாக 1955 ஆம் ஆண்டு ராஜ்பாத்தில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டம் இன்றுவரை ராஜ்பாத் பகுதியிலேயே நடைபெறுகிறது.இந்த பாதையில் குடியரசு தின அணிவகுப்பு எட்டு கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இதற்கு முன்னதாக குடியரசு தலைவர் டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார். முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகன ஊர்திகள் இடம்பெறும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அணிவகுப்பு அமையும். மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவார்கள். மாநில அரசுகள் சார்பாக பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், சிறந்த முறையில் பணியாற்றிவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் இந்த தினத்தின்போது வழங்கப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் உலக நாடுகளின் பிரதமர் அல்லது அதிபராக இருப்பார்கள்

இதனிடையே சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் ஒரே மாதிரியாக கொடி ஏற்றப்படும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி அவிழ்க்கப்படும். குழப்பமாக உள்ளதா? இதோ விளக்கம்!

ஆம்.. சுந்திர தினத்தன்று,பிரதமர் கொடி ஏற்றுகிறார். குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் கொடியை அவிழ்ப்பார். இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு விழாக்களுக்கு முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இரண்டையுமே ஏற்றுவதாகத் தான் குறிப்பிடுவோம். ஆனால் அது தவறு. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதிய தேசத்தின் எழுச்சியைக் குறிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி, கம்பத்தின் கீழிருந்து ஏற்றப்பட்டது. அதனால் அந்த சுதந்திரம் பெற்ற நாளின் நினைவாக இன்றும் கம்பத்தின் கீழிருந்து கொடி ஏற்றப்படும். மறுபுறம், குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மூவர்ணக் கொடியை அவிழ்க்கும் போது, ​​​​கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். இந்திய குடியரசுத் தலைவர் அதை சுதந்திர தினத்தன்று செய்வது போல் மேலே ஏற்றாமல், அவிழ்த்து விடுவார்.

யார் அவிழ்ப்பார், யார் ஏற்றுவார்?

முதல் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி இல்லை. லார்ட் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். அது ஆங்கிலேய அலுவலகம் அகற்றப்படுவதற்கு முன்பு, ஜனாதிபதி பதவிக்கு சமமான பதவியாக இருந்தது. புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்தின் கொடியை ஏற்றுவதற்கு காலனித்துவவாதி பொறுப்பேற்க முடியாது. எனவே அந்த பணி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு நபருக்கு மட்டுமே வழங்க முடியும்.

சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி இடைக்கால இந்திய அரசை அமைத்திருப்போம். அந்த அரசின் தலைமை பொறுப்பான பிரதமர் பதவியில் ஜவாஹர்லால் நேரு இருந்தார். அதனால் அவரே அந்த கோடியை ஏற்றினார். இதனால் தான் சுதந்திர தினத்தன்று இன்றும் நாட்டின் பிரதமர் கோடி ஏற்றுகிறார்.இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்திய நாடு குடியரசு நாடு என்று அறிவிக்கும் தினத்தன்று நாட்டின் முதல் குடிமகனாக, அரசியலமைப்புத் தலைவராக குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே சுதந்திரம் பெற்ற நாடு இப்போது குடியரசு நாடாக மட்டும் மாறுவதால் புதிய குடியரசு தலைவராகப் பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத் கொடியை அவிழ்த்து வைத்தார். அந்தப் பழக்கமே இன்றும் தொடர்கிறது.

இடம்: இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையிலான மற்றொரு வித்தியாசம் இடம். பிரதமர் செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார், அதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மறுபுறம், குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் ராஜ்பாத்தில்அவிழ்க்கிறார். அதைத் தொடர்ந்து இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் பாரிய நிகழ்ச்சி நாட்டின் வளத்தை உலகிற்குக் கட்டுவதற்காக நடைபெறுகிறது .

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Constitution of Indiacultural dancesDeclaration of Indian IndependencehistoryHolidays in schoolsindia republic dayParadesRepublic dayspeeches
Advertisement
Next Article