For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பூமித்தாயின் மீது பசுமைப்போர்வைப் போர்த்திய மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்!

06:25 AM Sep 25, 2024 IST | admin
பூமித்தாயின் மீது பசுமைப்போர்வைப் போர்த்திய  மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்
Advertisement

ம்மைச் சூழும் துயரங்களை காலம்தான் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, பிறந்த மண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி தன் வாழ்வை முழுவதுமாக மக்களுக்காக அர்பணித்தார் ஆப்பிரிக்காவின் வாங்கரி மாத்தாய். .சுற்றுச்சூழல் , வளர்ச்சி , மக்களாட்சி ஆகிய மூன்றும் தனித்தனியானவை அல்ல , மேற்கண்ட மூன்றும் ஒன்றோடொன்று சார்ந்தே இயங்குபவை என்பதை வலியுறுத்தி , அதற்காக பல முன்னெடுப்புகளை தனது ” பசுமைப் பட்டை இயக்கம் ” மூலம் செய்து , வியக்கத்தக்க வகையில் அதில் வெற்றியும் கண்ட மரங்களின் தாய் என நம் எல்லோராலும் போற்றப்படுகிற , அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வாங்கரி மாத்தாய் அவர்களின் நினைவு தினம் இன்றைய நாள் …!

Advertisement

கென்யா நாட்டின் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி இகதி எனும் சிறிய ஊரில் பிறந்தவர் வங்காரி மாத்தாய். மிக எளிய குடும்பம் அவருடையது. அந்தக் காலத்தில் பெண்களுக்குத் தொட முடியாத உயரத்தில் இருந்தது கல்வி. ஆனால், இவரின் சகோதரர் தந்த ஊக்கத்தினால் படிக்கத் தொடங்கினார். மிகுந்த ஆர்வத்துடன் படித்த இவர் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடித்தார். கென்யா நாட்டில் முதன்முதலாக டாக்டர் பெற்ற பெண் எனும் பெருமையைச் சூடிக்கொண்டார். நைரோபி பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியில் சேர்ந்தார். அப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் இவர்தான்.

Advertisement

இவர் அமெரிக்காவில் இருந்தபோது மாட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். தனது தாய்நாட்டிலும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது. அந்த எண்ணம்தான் அவரைப் பேராசிரியர் பணியைத் துறக்கச் செய்தது. பசுமை பட்டை எனும் சுற்றுச்சூழலைக் காக்கும் இயக்கத்தைத் தொடங்கினார். தனது வீட்டில் அருகே ஒன்பது மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தார். உலகைச் சமநிலைப்படுத்தும் இயற்கையைப் பாதுகாக்க, ஆப்பிரிக்க வன வளத்தைக் காக்கவும் தனது பணிகளை வரையறுத்துக்கொண்டார். ஊர், ஊராகச் சென்று ஏழை, எளிய மனிதர்களிடம் குறிப்பாகப் பெண்களிடம் பேசினார்.

1977ஆம் ஆண்டு தனது பேராசிரியர் பணியை துறந்த வாங்கரி மாத்தாய் , தனது சுற்றுச்சூழல் பணியை சுற்றுச்சூழல் தினமான 1977 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி துவங்கினார், தூய்மையான குடிநீர் , உண்ண உணவு , வீடுகளை அமைக்க தேவையான கட்டுமான பொருட்கள் , வீடுகளை பாதுகாத்துக்கொள்ள வேலி அமைப்பதற்கு தேவையான பொருட்கள் , உணவுகளை சமைப்பதற்கு தேவையான விறகுகளின் தேவை மற்றும் இவை அனைத்திற்கும் மேலாக எங்கள் மண்ணின் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் தங்களின் தேவைகளாக இருக்கின்றன என கென்ய பெண்கள் வாங்கரி மாத்தாயிடம் கூற , மேற்கண்ட தேவைகளை பூர்த்தி செய்ய நாம் மரங்களை நட்டு வளர்க்கலாமே என்கிற எண்ணம் வாங்கரி மாத்தாய் அவர்களுக்கு தோன்றி அதை அவர்களிடம் வெளிப்படுத்த , அதன் விளைவாக உருவானதே ” பசுமைப் பட்டை இயக்கம் ” மற்றும் வாங்கரி மாத்தாய் அவர்களின் சுற்றுச்சூழல் , ஜனநாயகம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான அனைத்து பணிகளும் !இந்த இயக்கம் மூலம் மரங்களை நடுவதற்கான பணியைத் தொடர்ந்தார். ஆப்பிரிக்காவில் ஆண்கள்தான் பெருமளவில் நிலத்திற்கு சொந்தக்காரர்கள். பெண்கள் அனைவருமே நிலத்தில் வேலை மட்டுமே செய்து வந்தார்கள். பெண்களுக்கென்று எந்த உரிமையையும் அன்றைய காலக்கட்டத்தில் இல்லை.

வேலை மட்டுமே செய்து வந்த பெரும்பாலான பெண்களுக்கு, மரங்களை வளர்க்க தெரியாதபோது, பல முயற்சிகளால் பல கிராமங்களுக்கும் சென்று மரம் நடுவதற்கான பயிற்சியை அளித்தார் வாங்கரி மாத்தாய். காடுகளில் வளர்க்கப்பட்டு வந்த பணப்பயிர்களை எதிர்த்து போராடி பெண்களை பாரம்பரிய பயிர்களை வளர்க்க தூண்டினார். அதன் மூலம் அவர்களே சத்தான உணவை உற்பத்தி செய்ய பழக்கப்படுத்தினார்.ஆப்பிரிக்காவில் காலனிய ஆதிக்கத்தால், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்ன என்று தெரியாது இருந்த மக்களை, குறிப்பாக ஏழை மக்களை, வழிநடத்தும் தலைவரானார்.

பெண்களுக்காகவும், அவர்களுடைய உரிமைகளுக்காகவும் போராடிய வாங்கரி மாத்தாய் கிராமப்புற பெண்களுக்கு மரம் வளர்ப்பதற்காகவும், அதை பராமரிப்பதற்காகவும் சிறியளவில் ஊக்கத்தொகை வழங்கி வந்தார். இதன்மூலம், ஆண்களும், பெண்களுடன் சேர்ந்து மரங்கள் நடுவது, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு கல்விக்கான முக்கியத்துவத்தை கொடுப்பது போன்ற மாற்றங்களில் இறங்கினர்.

சிறிய கிராமத்தில் தொடங்கிய வாங்கரி மாத்தாயின் பணி, கென்யாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 90களில் பெரிய பூங்காவை அழித்து 60 மாடி கட்டடம் கட்ட அரசு எடுத்த முடிவை எதிர்த்து பெரிய கிளர்ச்சிச் போராட்டம் கென்யாவில் நடந்தது. இதில் பெண்கள் பலரும் தாக்கப்பட்டனர். வாங்கரி மாத்தாய் நினைவு இழந்து தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். இந்த போராட்டம்தான் வாங்கரி மாத்தாய்க்கு உலகளவில் பெரிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்தது.

உலகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய அனைத்து விஷயங்களும் , தொடக்க காலத்தில் பெரும் இகழ்ச்சியை சந்தித்தவை தான் என்கிற உலக நியதியின் அடிப்படையில் , வாங்கரி மாத்தாயின் பசுமைப்படை இயக்கத்தின் தொடக்க கால முன்னெடுப்புகளும் பல இகழ்ச்சிகளை கண்டது , ஆனால் நாளடைவில் பலரின் ஆதரவையும் பெற்று 5 கோடி மரங்கள் வரை நட்டு வளர்க்கப்பட , வாங்கரி மாத்தாய் அவர்களின் சுற்றுச்சூழல் பணிகளும் , பசுமைப் பட்டை இயக்கமும் காரணமாக அமைந்தது என்பதே வரலாறு கூறும் செய்தி., மேற்கண்ட 5 கோடி மரங்கள் வரை நட்டு வளர்க்கப்பட காரணமாக விளங்கிய வாங்காரி மாத்தாய் அவர்கள் இந்த சாதனையை எளிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை.அரசாங்கத்தின் மூலம் பல இன்னல்களுக்கு ஆளாகி , சிறை வாழ்வுகள் , தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சுகள் ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்ட பின்தான் மேற்கண்ட சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது …

2004 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கு வழங்கப் போகிறார்கள் என உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் , அந்த பரிசுக்கான நபராக அறிவிக்கப்பட்டார் வாங்கரி மாத்தாய். அமைதிக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன தொடர்பு உள்ளது , இதை ஏன் வாங்கரி மாத்தாய்க்கு வழங்குகிறார்கள் என பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் , சூழலியல் பாதுகாப்பு எனும் விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு , அதன் மூலம் அமைதி , வளர்ச்சி மற்றும் மக்களாட்சி கட்டமைப்பு ஆகியவை மேம்படுவதற்கான பணிகளை மேற்கொண்டதால் , வாங்கரி மாத்தாய்க்கு 2004 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்குகிறோம் என அறிவித்தார்கள் நோபல் பரிசு தேர்வுக் குழுவை சார்ந்தவர்கள் …

இந்தியாவின் மிக அதிக பரிசு தொகை கொண்ட காந்தி அமைதி விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளை பெற்றுள்ள , ஆப்பிரிக்காவின் முதல் நோபல் பரிசை பெற்ற பெண்மணியான வாங்கரி மாத்தாய் அவர்கள் , சூழலியல் பாதுகாப்பு என்பது நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களாட்சி அமைப்பு ஆகியவற்றோடு சேர்ந்து செயல்படும் ஒன்றே என்பதை உலகிற்கு உணர்த்தி சென்றுள்ளார் …

காடழிப்பையும் மற்றும் இயற்கைவள சுரண்டல்களையும் கண்டு , நம்மால் என்ன செய்துவிட முடியும் என விரக்தியில் ஒதுங்காமல் , மரங்களை கோடிக்கணக்கில் உருவாக்கி அதன் மூலம் இழந்த பசுமையை மீட்டெடுக்க முடியும் என முடிவு செய்து அதனை செயல்படுத்தி வெற்றியும் கண்ட , கென்ய நாட்டை சேர்ந்த வாங்கரி மாத்தாய் , உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முன்னோடியாக திகழ்ந்த அவரது நினைவு நாளான இன்று நாம் அனைவரும் அவரை போற்றும் விதத்தில் , நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களாட்சி அமைப்போடு சார்ந்துள்ள சூழலியலை பாதுகாக்க உறுதி ஏற்போம் , நன்றி!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement