For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விவிபேட் வழக்கு- தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!

06:00 PM Apr 24, 2024 IST | admin
விவிபேட் வழக்கு  தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
Advertisement

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. எந்த பொத்தானை அழுத்தினாலும், குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்குகள் செல்லும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

Advertisement

இதனிடையே, தேர்தல் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) பதிவாகும் அனைத்து வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி முயற்சித்து பார்த்த பல ஐரோப்பிய நாடுகள், வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு செய்யும் முறைக்கே மீண்டும் திரும்பிவிட்டன என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘மனிதர்களின் தவறுகளால் வாக்கு எண்ணிக்கையில் ஏற்படும் சில பிழைகளைச் சரிபார்த்து சீர்செய்ய முடியும்’ என்று கூறினர்.

Advertisement

மேலும், இந்தியாவில் தேர்தல் என்பது மாபெரும் பணி என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் , இந்த முறை வீழ்ச்சி அடைவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று கூறி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறை குறித்த முழு விபரங்களையும் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில், அனைத்து வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக எண்ணுவதால் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (ஏப். 24) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ச்ப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா அமர்வில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரர்கள், தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள், ஆகியோர் முன், வாக்காளர் வாக்களித்தபின்ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும் எந்திரத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், 5 கேள்விகளுக்கு விளக்கம் தேவை என்று தெரிவித்தனர்

அதாவது விவிபேட் இயந்திரத்தில் இருக்கும் மைக்ரோ கன்ரோலரும், மெமரி ஜிப்பும் ஒன்றாக இணைக்கப்படுகிறதா? அது ஒரு முறை புரோகிராமா? பல முறை பயன்படுத்தக் கூடிய புரோகிராமா? பதிவு செய்யப்படும் மெமரியை மேலும் பல நாட்கள் சேகரிக்கும் வசதி இயந்திரங்களில் உள்ளதா? இவிஎம், விவிபேட், கன்ட்ரோல் யூனிட் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் சீல் வைக்கப்படுமா? வெவ்வேறு நேரத்தில் சீல் வைக்கப்படுமா? மைக்ரோ கன்ட்ரோலர் என்பது இவிஎம் இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் பொருத்தப்பட்டுள்ளதா? வாக்குப்பதிவு இயந்திரத்தின் பதிவுகளை 30 நாட்கள் என்ற நடைமுறையில் இருந்து 45 நாட்கள் வரை பாதுகாக்க முடியுமா? போன்ற 5 கேள்விகள் உள்ளன. எனவே தலைமை தேர்தல் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரி, இன்று பிற்பகல் 2 மணிக்கு நேரில் ஆஜராகி சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற அமர்வு கேட்டுக்கொண்டது.

அதன்படி மதியம், தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறும் போது, “கண்ட்ரோல் யூனிட், பாலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலர்களை கொண்டுள்ளன. இவற்றை பிசிக்கலாக அணுக முடியாது. அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒருமுறை நிரல்படுத்தக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது” என தெரிவித்தனர்.அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பூஷன், ”இந்த மைக்ரோ கண்ட்ரோலர்களை உருவாக்கும் நிறுவனம் அதை மறுமுறை பயன்படுத்த முடியும் என கூறியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறுகிறது. இதனால் தான் குழப்பம் நிலவுகிறது” என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும் போது, ”ஈவிஎம், விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர்கள் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் பாலட் இயந்திரம், ஈவிஎம், விவிபாட் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46வது நாள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை தொடர்பு கொண்டு தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்படும். ஏதேனும் வழக்குகள் இருந்தால் மட்டும், சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் தனியாக பாதுகாத்து வைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. ஒரு அரசியல் அமைப்பான நீதிமன்றம், இன்னொரு அரசியல் அமைப்பான ஆணையத்தை எப்படி கட்டுப்படுத்துவது? தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்கத்தான் வேண்டும். விவிபாட் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” என்றனர். தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் அவர்கள் தள்ளி வைத்தனர்.

Tags :
Advertisement