வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஹேக் செய்ய முடியும்!
09:10 PM Apr 04, 2024 IST | admin
Advertisement
வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது. ஆனால் பதிவான வாக்குகளை ஹேக் செய்ய முடியும். இது என் வாதம். இந்தவாதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை உடனடியாக விசாரிக்க உச்சநீதி மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இதுவே மிகத் தாமதம் என்றாலும், இது சிறிய ஆறுதல்!
விவிபேட் இணைக்கப்பட்டதுமே வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. நாம் வாக்களித்த சின்னத்தை விவிபேட், ஒரு காகிதத்தில் பிரிண்ட் செய்து காட்டுகிறது. ஆனால் மொத்தமாக வாக்குகளை எண்ணும்போது, அந்தக் காகிதங்கள் அனைத்தையும் கணக்கில் கொள்வதில்லை. ஒரு சட்டசபை தொகுதியில் ஐந்து வாக்குச் சாவடிகளை மட்டும் தனியாக குறிக்கிறார்கள். அங்கு மட்டும் காகிதத்தில் பதிவாகியுள்ள வாக்குகளும், இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்று பரிசோதிக்கிறார்கள்.
இதே போல் அனைத்து சாவடிகளிலும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மொத்தம் 24 லட்சம் விவிபேட் இயந்திரங்களில் வாக்களித்த சீட்டுகள் பதிவாகும். ஆனால் வெறும் இருபதாயிரம் விவிபேட் இயந்திரங்களை மட்டுமே ஒப்பிட்டு பரிசோதனை செய்ய முடியும். அனைத்தையும் ஒப்பிட்டு சோதித்துப் பார்க்க நேரமாகும் என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.
தேர்தலை பல கட்டங்களாக நான்கு மாதங்களுக்கு நடத்துகிறார்கள். இதே போல் வாக்குகள் எண்ணுவதையும் பல கட்டங்களாக நடத்தலாமே? பல கட்டங்களாக எண்ணும்போது 5-6 மணி நேரத்துக்குள் ஒரு விவிபேட்டும், ஒரு வாக்கு இயந்திரமும் ஒரே எண்ணிக்கையை காட்டுகிறதா என்பதை சோதித்துவிட முடியும் என்கிறார்கள், வழக்கு தொடுத்திருக்கிறவர்கள்.
ஆனால் பல கட்ட தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், பலகட்டமாக எண்ணுவதை ஏற்க மறுக்கிறது. அது என் சந்தேகங்களை அதிகரிக்கிறது. கடைசி நேரம் என்றாலும், என்னுடைய ஒரே நம்பிக்கை உச்ச நீதிமன்றம்தான். தேர்தலும், வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடக்கும், அதற்கு உச்ச நீதி மன்றம் துணை நிற்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
Advertisement