தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ரஷ்யாவின் சிற்பியான தோழர் லெனின் - நினைவுக் குறிப்புகள்!

07:59 AM Jan 21, 2024 IST | admin
Advertisement

ந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள். அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர் ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில் வாடிக்கிடப்பார்கள். ரஷ்யாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான் துன்பத்தில் உழன்றனர்.இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின். அவருடைய தலைமையில் 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற புரட்சியினால் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. உலகில் முதன்முறையாக தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தனர்.

Advertisement

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் லெனினுக்குத் தூக்கம் வரவில்லை. அது அவருக்கு முதல் இரவு. ஆம்! புரட்சி வெற்றி பெற்றதற்குப் பிறகு வரும் முதல் இரவு! உண்மையில் லெனினுக்குத் தூக்கம் இல்லை. அவரும் அவருடைய நண்பர் போன்ச் - புரூயேவிச்சும்தான் இரவில் தங்கள் அறைக்கு வந்தார்கள். புரட்சி காலத்தில் லெனினோடு இருந்தவர் இவர். பிற்காலத்தில் அரசாங்க இலக்கியப் பொருட்காட்சிச் சாலையின் பொறுப்பாளராக ஆனவர். லெனின் தூங்கி விட்டாரா என்று பார்த்துவிட்டுத் தனது அறைக்கு தூங்கப் போனார் போன்ச். விளக்கை அணைத்து விட்டு லெனின் தூங்கினார். போன்விச் இதை உறுதிப்படுத்திக் கொண்டு தூங்கினார்.இடையில் முழிப்புத்தட்டியது போன்விச்சுக்கு. எழுந்து பார்த்தால், லெனின் அறையில் விளக்கு எரிகிறது. லெனின் எழுதிக் கொண்டு இருந்தார். எழுதியதை அடித்தார். மீண்டும் எழுதினார். அதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க, ‘நிலங்கள் அனைத்தும் பொதுவுடமை ஆகிறது’ என்ற ஆவணம்!

Advertisement

‘‘சோஷலிசப் புரட்சியின் முதல்நாள் வாழ்த்துகள்” என்றபடி, ‘நிலம் பற்றிய ஆணைப் பத்திரத்தை’ அனைவருக்கும் வாசித்துக் காட்டினார் லெனின்.

‘‘இதை நான் பிரகடனம் செய்கிறேன். இதை இனி யாராலும் திரும்பப் பெற முடியாது. இந்த ஆணைப் பத்திரத்தை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளவும் நிலப்பிரபுக்களுக்கு நிலத்தை திருப்பிக் கொடுக்கவும் எந்த ஆட்சியாலும் முடியாது. இதுதான் நமது அக்டோபர் புரட்சியின் முக்கியமான வெற்றி. நில உடைமைப் புரட்சி உடனடியாக இன்றே நிறைவேற்றப்பட்டு உறுதிப்படுத்தப்படும்” என்று அறிவித்த பிறகுதான் லெனினுக்கு லேசாக தூக்கம் வந்தது.

அன்றைய தினம் மாலையில்தான் மாறுவேடத்தைக் கலைத்து விட்டு மக்கள் மேடையில் லெனின் ஏறினார். 300 ஆண்டுகால ஜாரிஸத்தையும் ஒன்பது மாதகால கேரென்ஸ்கிஸத்தையும் வீழ்த்திவிட விதை தூவியவர் இவர்தானா என்று லெனின் முகம் பார்க்க தொழிலாளர்களும் விவசாயிகளும் படைவீரர்களும் துடித்தார்கள். லெனின் அப்போது எப்படி இருந்தார்....

‘‘குள்ளமாக இருந்தார். தலை பெரிதாக இருந்தது. முடியே இல்லை. சிறிய கண்கள். மூக்கும் சிறியதுதான். வாய் பெரிதாக இருந்தது. பிடிவாதக்காரனுக்கு இருப்பது போல நாடி இருந்தது. உடையில் நாகரிகம் தெரியவில்லை. யாரோ உயரமானவருக்குத் தைத்தது போல இருந்தது அந்த உடை. அவர் அணிந்திருந்த உடையைப் பார்க்கும் பொதுமக்களுக்கு எந்த ஈர்ப்பும் தோன்றாது. பரவாயில்லை... அறிவு ஒன்றினால் பொதுமக்களின் தலைவர் ஆனவர் அவர். இந்த அபூர்வத் தலைவரை எந்த ரகத்திலும் சேர்க்க முடியாது. இவரது பேச்சில் நகைச்சுவை இல்லை. கர்ஜனைகள் இல்லை. முழக்கங்கள் இல்லை. பிடித்தால் ஒரே பிடி, அசையவே மாட்டார் என்று தெரிகிறது. ஆழ்ந்த கருத்துக்களை குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்கிறார். எந்தச் சிக்கலையும் தனித்தனியாக வெட்டி எடுத்துக் காட்டுகிறார். நடைமுறை சாதுர்யம் ஏராளமாய் இருக்கிறது. அவரது சாகச மூளைக்கு ஈடுஇல்லை. இப்படி ஒருவரைப் பார்த்ததே இல்லை” - அமெரிக்க மூளை இப்படி அளந்தது லெனினை.

உருவத்தால் அல்ல, உள்ளத்தால் உயர்ந்த தலைவனாக சோவியத்துகள் லெனினைக் கொண்டாடினார்கள். பாட்டாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள் என அனைத்து வர்க்கமும் தனது வர்க்கப் பிரதிநிதியாக லெனினைப் பார்த்தது. கம்யூனிஸ்ட் மொழியில் சொன்னால் அவர் பூர்ஷூவா வர்க்கத்தில் இருந்து வந்தார். அதுவும் ‘மிடில் க்ளாஸ்’. ‘பெட்டி பூர்ஷுவா’. கல்வி அதிகாரிக்கு மகனாகப் பிறந்தவர் விளாடிமிர் இலியீச் உல்யானவ், லெனின் என்பது அவரது புனைப்பெயர். சைபீரியாவில் ஓடும் நதியில் மனம் பறிகொடுத்த லெனின், அதன் பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார். சட்டக் கல்வி படித்தார். சமூகம் படித்தார். படிப்பது தான் அவருக்குப் போதை தந்தது. படித்தார். படித்துக் கொண்டே இருந்தார். பிறமொழி படைப்புகளை மொழிபெயர்த்தார். எழுதினார். எழுதிக்கொண்டே இருந்தார். எழுதும் போதும், படிக்கும் போதும் தூக்கம் வந்தால் எழுந்து சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வார். தூக்கம் கலைந்ததும் மீண்டும் படிப்பார். எழுதுவார். பொதுவாக புத்தகப் புழுக்கள் புரட்சி செய்ய முடியாது என்பார்கள். வார்த்தைகளில் வடை சுடுபவர்கள் வர்க்கப் போராட்டத்துக்கு லாயக்கு வர மாட்டார்கள் என்பார்கள்.

‘இவர் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கிறார். இவர் எழுத்தாளர் தான். இவர் எழுத்தால் புரட்சி வராது’ என்று சைபீரிய காவல்துறை அறிக்கை அனுப்பியது. ஆனால் இந்த இலக்கணம் மீறிய இலக்கியம் லெனின். மார்கஸ் எழுதிய மூலதனத்தை லெனினுக்கு முன்னால் கையில் வைத்திருந்தவர் அவரது அண்ணன் அலெக்சாண்டர். ஜார் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கைதான அலெக்சாண்டர் தூக்கிலிடப்பட்டார். அப்போது லெனினுக்கு வயது 17. அண்ணனின் போராட்டம் லெனினைக் கவனிக்க வைத்தது. அந்த தியாகம் லெனினை யோசிக்க வைத்தது. அரசுக்கு எதிராக மக்களை அணி திரட்டாமல் தனிமனிதத் தியாகங்கள் இளம்பிள்ளைவாதமாகத் தான் முடியும் என்பது லெனினுக்கு சிறுவயதிலேயே தோன்றியது. அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டக் கழகம் என்ற அமைப்பை (1895-ம் ஆண்டு) தொடங்கினார் லெனின். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். அந்த அமைப்பின் பெயரே அவரை கைது செய்ய வைத்தது.

கிழக்கு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஒரு புரட்சியாளனாக அவர் வளர்ந்த இடம் அதுதான். படித்தார். எழுதினார். எழுதியதைத் திருத்தினார். நடைபயிற்சி செய்தார். மல்யுத்தம் கற்றுக் கொண்டார். சுவாசப் பயிற்சி மேற்கொண்டார். வேட்டையாடினார். மீன் பிடித்தார். சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொண்டார். ஏழைகளுக்கு சட்ட ஆலோசனைகள் சொன்னார். தன்னைப் போலவே சிந்தித்த குரூப்ஸ்கயாவை காதலித்தார். அவரும் அரசாங்கத்தால் கைதானபோது, அவரையும் தன்னோடு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டார். இருவரும் இணைந்து வாழ்ந்தார்கள். சமூகத்துக்கு சேர்ந்து யோசித்தார்கள். ‘‘நாங்கள் இருவரும் சந்தித்தபோதே புரட்சிகர மார்க்சியவாதிகளாக இருந்தோம். சமூக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இரண்டுமே ஒன்றுதான் என்று நினைத்தோம்” என்று சொன்னார் குரூப்ஸ்.இவர்கள் இருவருமே தண்டனைக் காலம் முடிந்து ரஷ்யாவுக்குள் வந்தார்கள்.

1900-ம் ஆண்டின் தொடக்க ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராட்டம் ரஷ்யா முழுவதும் வேகம் எடுத்தது. வறுமை, பஞ்சம், தொழிலாளர்கள் வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை இதனைத் தூண்டியது. இதற்குக் காரணம் லெனின் தான் என்று சொல்லி நாடு கடத்தினார்கள். 1905-ம் ஆண்டில் இருந்து சுமார் 9 ஆண்டு காலம் பல்வேறு நாடுகளில் தலைமறைவாக இருந்தார் லெனின். மொத்த சோவியத் புரட்சிக்கான அடித்தளம் வெளிநாட்டில் இருந்துதான் போடப்பட்டது. சுவிட்சர்லாந்து, லண்டன், ஜெனிவா, பின்லாந்து, ஆஸ்திரியா என பல நாடுகளில் வாழ்ந்து வந்தார் லெனின். வெளிப்புறச் சக்திகளால் அல்ல, உட்புறச் சக்திகளால் மட்டும் தான் புரட்சி சாத்தியம் என்ற இலக்கணத்தையும் இந்தப் புரட்சித் தலைவர் உடைத்தார்.

தன்னுடைய சிந்தனைகள் அனைத்தும் ரஷ்யாவுக்குள் கொண்டு செல்லும் வாகனமாக பத்திரிகைகளை நினைத்தார் லெனின். ‘கட்சியை எங்கிருந்து தொடங்குவது?’ என்று கேட்டபோது, ‘ஒரு நாளிதழை உருவாக்கு, அதில் இருந்து தொடங்குவோம்’ என்றார் லெனின். அப்படி உருவானது தான், ‘தீப்பொறி’ நாளிதழ். அதன் பிறகு, ‘புதுவாழ்வு’ இதழைத் தொடக்கினார். ‘உண்மை’ இதழ் தொடங்கினார். ‘சமூக ஜனநாயகவாதி’ இதழையும் தொடங்கினார். இந்த நான்கு இதழ்களும் தான் சோவியத் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தன. இதில் பலநூறு கட்டுரைகளை லெனின் எழுதினார்.தத்துவம், தத்துவ விமர்சனம், வரலாறு, வரலாற்று விமர்சனம், கட்சி, கட்சியின் நடைமுறை.... என்று லெனின் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொரு பாட்டாளியையும் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியையும் உருவாக்கியது. ஜார் ஆட்சியை வீழ்த்துவதைக் குறைந்தபட்ச செயல்திட்டமாகவும், அதே இடத்தில் சோசலிச அமைப்பை உருவாக்குவதை அதிகபட்சத் திட்டமாகவும் கொண்ட ரஷ்ய சமூக ஜனநாயக் கட்சியை உருவாக்கினார். இந்த லட்சியத்தை நோக்கி சோவியத்துகளை அணி திரள எழுதினார். ஆயுதப் புரட்சியால் மட்டுமே ஜாரை வீழ்த்த முடியும் என்ற முடிவுக்கு (1905-ம் ஆண்டு) வந்தார்.

‘‘ரகசிய வேலை செய்து... விரோதியைத் திடீரெனத் தள்ளிவிட்டு... அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” - இதுதான் லெனின் வகுத்துக் கொடுத்த திட்டம். பாதிக்கப்பட்ட மக்களை கோபம் கொள்ள வைத்து, உணர்த்தி, அவர்களைத் தத்துவார்த்த அடிப்படையில் வென்றெடுத்த பிறகு போராட்டக் களத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார் லெனின். ஆயுதப் போராட்டத்தையும், அரசு நிறுவனங்களைக் கைப்பற்றுவதையும் மிகமிக இறுதிக்கட்டத்தில் தான் கையில் எடுத்தார். ரஷ்ய பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது போல்ஷ்விக்குகளை தேர்தலில் போட்டியிட லெனின் அனுமதி தந்தார். மன்னரை எதிர்க்கும் அனைத்து தரப்பையும் முதலில் சேர்த்துக் கொண்டு போராடி, பின்னர் பாட்டாளிகளை மட்டும் தனியே பிரித்தெடுத்து மற்ற சக்திகளை ஒதுக்கித் தள்ளினார்.

இப்படி தனது அறிவார்ந்த அனுபவத்தின் மூலமாக தியரியை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்திப் பார்த்தவர் லெனின். ‘‘அவர் பேசும்போது பேசுவது போல் இல்லை. வரலாறு ஆணையிடுவது போல் இருக்கும்” என்று கார்க்கி சொல்வது இதனால் தான். லெனின் எளிமையாகச் சொன்னார். ஆணையிடுவது போல இருந்தது. இந்த எளிமையும் இனிமையும் தான் புரட்சியின் அடையாளமாகவும் மாறியது. 1917 நவம்பர் புரட்சிக்கு சில மாதங்களே இருக்கின்றன. லெனினை அவரது நண்பர் வந்து சந்திக்கிறார். குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வருவதாக அவர் சொல்கிறார். ‘குழந்தைகளை ஒரே இடத்தில் அடைத்து வைக்காதீர்கள். வெளியில் அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார் லெனின். கட்சி உறுப்பினர் ரயிலைச் செலுத்த ஐம்பது குழந்தைகள் வெளியில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ‘நம்மைப் பற்றி எல்லாம் லெனின் நினைக்கிறாரா?’ என்று அந்தக் குழந்தைகள் நினைத்தன. லெனின் எல்லாரையும் நினைத்தார். புரட்சிக்கு சில நாட்கள் முன்னதாக வீட்டு வேலை செய்யும் பெண்களை அழைத்து அவர்களது பிரச்னையைப் பற்றி அறிந்தார். சோவியத் புரட்சி முடிந்ததும் அரசாங்க சின்னத்தில் வாள் உருவத்தை வைத்தார்கள். ‘சோசலிசம் மலர்ந்து விட்டது. இனி இது எதற்கு?’ என்று கேட்டு நீக்கச் சொன்னார் லெனின். புரட்சியாளன் என்றால் வாள், துப்பாக்கியுடன் இருக்க வேண்டுமா என்ன? கருவியைத் தாண்டிய கனிவை வைத்திருந்தார் லெனின்.

அந்த தொழிலாளர்களின் ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும், வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. சமத்துவச் சமூகம் படைக்கப்பட்டது.இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது.

லெனினுடைய வழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள் நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழி காட்டினார்.ஆனால் ரஷ்ய மக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கு முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.இதனால் அவருடைய மரணத்துக்கு உலகமே அழுதது.

உலகின் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற நன்றியும், மீதி நிலப்பரப்பில் அதை நிறைவேற்றும் முன்னரே இறந்து விட்டாரே என்ற துக்கமும்தான் உலகத் தொழிலாளர்களை இப்படிக் கண்ணீர் சிந்த வைத்தது.

இப்போதும் அவரது முகத்தைப் பாருங்கள். ஆயுத எழுத்து போல இருக்கும்!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
first and founding head of government of Soviet RussiaLeninpolitical theorist.politicianussian revolutionaryVladimir Ilyich Ulyanov[Vladimir Lenin
Advertisement
Next Article