For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விவேகானந்தர் நினைவு நாளின்று!

06:48 AM Jul 04, 2024 IST | admin
விவேகானந்தர் நினைவு நாளின்று
Advertisement

ரேந்திரநாத் தத்தாவாகப் பிறந்த சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் மிகப் பெரிய ஆன்மிக குருக்களில் ஒருவரான ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராவார். நரேந்திரநாத் தத்தா துறவியாக இருந்து ஆன்மீகவாதியாக வாழ்ந்த பிறகு சுவாமி விவேகானந்தர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர் சிறுவயதிலிருந்தே ஆன்மீகம் மற்றும் தத்துவத்தில் ஆர்வமாக இருந்தார், மேலும் இந்திய மக்களின் ஆன்மீக அறிவொளியில் முக்கிய பங்கு வகித்தார்.இந்தியத் தாய் பெற்றெடுத்த ஆன்மிகச் செல்வர்களில் முதன்மை ஸ்தானத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். `என்னிடம் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள். நம் நாட்டை மிகப் பெரிய வல்லரசாக மாற்றிக் காட்டுகிறேன்' என்று வீர முழக்கமிட்டவர்.

Advertisement

கம்பீரமான அவருடைய தோற்றம் எப்படிப்பட்டவரையும் வசீகரித்துவிடும். அவருடைய சொற்பொழிவுகளோ மற்றவர்களைக் கிளர்ந்தெழச் செய்யும். தன்னுடைய பேச்சாற்றலால் மக்களை ஈர்க்கும் திறமையில் அவருக்கு நிகர் அவர்தான். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலருக்கும் சுவாமிஜி ஆதர்ச சக்தியாக இருந்துள்ளார். `வீரத் துறவி’ என்ற சிறப்புக்கு மிகப் பொருத்தமானவர் சுவாமி விவேகானந்தர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதல் யோகி அரவிந்தர் வரை பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆதர்ச நாயகராக சுவாமிஜி திகழ்ந்தார். தேசிய கீதம் கொடுத்த ரவீந்திரநாத் தாகூர், `சுவாமி விவேகானந்தர் ஒரு ஜீனியஸ்' என்று போற்றிப் புகழ்ந்திருக்கிறார். பல நாட்டு அறிஞர் பெருமக்களும் சுவாமிஜியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

Advertisement

இவர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி கொல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா- புவனேஸ்வரி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தாய்மொழி வங்காளம். இவரது பெற்றோர் ஆன்மீக வழியில் பக்தி உணர்வுடன் திகழ்ந்தவர்கள் என்பதால் சுவாமி விவேகானந்தரும். சிறு வயது முதலே ஆன்மீகத்தில் அதிக ஆர்வமும் தியாக மனப்பான்மை கொண்டவராகவும் வளர்ந்தார். ஆன்மீகத்தில் மட்டுமின்றி படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்த மாணவராகவும், துடிப்புடன் பல்வேறு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். கல்விப்படிப்புடன் பகுத்தறிவால் சிந்திக்கும் திறனையும் சிறு வயதிலிருந்தே பெற்றிருந்தார். 1879 இல் பள்ளிப்படிப்பை முடித்த சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் மேல்கல்வி படித்த பின் ஸ்காட்டிஷ் சர்ச் என்னும் கல்லூரியில் தத்துவ பாடத்தை எடுத்துப் படித்து கல்வியில் சிறந்தார். தத்துவம் படித்த பின் அவர் மனதில் கடவுள் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்று சந்தேகம் மனதில் இருந்ததால் அதைப் பற்றிய விடையை அறிய முயன்றார். இந்தத் தேடுதலே பின்னாளில் அவர் சிறந்த ஆன்மிக தலைவராகவும் துறவியாகவும் மாற வழிவகுத்தது எனலாம் . கடவுள் எங்கிருக்கிறார் என்று அவர் தேடிய காலகட்டத்தில் தான் தத்துவஞானியான ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்த விவேகானந்தர் அவரிடமும் தனது சந்தேகத்தினை கேட்க முதலில் அவர் அளித்த பதிலும் அவரின் உருவ வழிபாடு போன்றவற்றையும் விவேகானந்தரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனினும் நாளடைவில் இராமகிருஷ்ணரின் போதனைகளால் விவேகானந்தரால் பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம் இரண்டின் வித்தியாசம் மற்றும் இரண்டின் அவசியத்தை உணர்ந்து கொள்ள வைத்தது. ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுள் குறித்து ஏற்றுக்கொள்ளும் வகையில் அளித்த பதிலால் விவேகானந்தர் திருப்தியடைந்து அவரையே குருவாக ஏற்றுக்கொண்டு அவரின் பிரதான சீடரானார்.

அதன் பின் 1886 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சர் காலமானதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ணரின் முதன்மை சீடர்களும் துறவறம் ஏற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு ஆன்மீக பயணம் சென்று சொற்பொழிவு ஆற்றினர். செல்லும் இடங்களில் விவேகத்துடன் செயல்பட்டு நன்மை தீமை பற்றி விளக்கி ஆன்மீக சேவை தந்ததால் மக்களால் சுவாமி விவேகானந்தர் என்றும் அழைக்கப்பட்டார். இந்தியா முழுவதும் வலம் வந்து மக்களின் கலாச்சாரம் பண்பாடுகளை அறிந்த விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வந்தார். அங்குள்ள ஒரு பாறையின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் இந்தியாவின் வளம் முன்னிட்டு தியானம் செய்தார். அப்போது ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட்டு இருந்த காலம் அவர் செய்த தியானத்தின் நினைவாக தற்போதும் அங்கு அந்த பாறையும் மற்றும் விவேகானந்தருக்கு நினைவு மண்டபமும் உள்ளது.

தொடர்ந்து 1893 சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவிற்கு சென்று அங்கு நடந்த சர்வதேச மதங்களுக்கான மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அவரது ஆங்கிலப் பேச்சு திறமையும் பகுத்தறிவுடன் ஆன்மீகத்தை அவர் அணுகிய விதமும் உலக அளவில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதன் பின்னர் ஆன்மீக உரை நிகழ்த்த உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் 1897 இந்தியா திரும்பி மக்களிடையே ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தினார். மேலும் சுதந்திரம் குறித்த கருத்துக்களை பரப்பினார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுச்சிமிக்க கருத்துக்களை பரப்பி அவர்கள் வாழ்வில் முன்னேற வைத்தார். தொடர்ந்து தனது குருவான ராமகிருஷ்ணரின் நினைவாக “ராமகிருஷ்ணா மிஷன்” என்ற ஏழை எளியவர்களுக்கு இலவச சேவை அமைப்பையும் கங்கை நதிக்கரை பேலூரில் ராமகிருஷ்ணர் என்ற பெயரில் மடத்தையும் நிறுவி சமூக சேவையில் ஈடுபட்டார்.

`தான் யார் என்று அறிந்துகொள்ளும்போது நரேந்திரன் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிடுவான்' என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதைப்போலவே, இந்த உலகத்தில் தான் அவதரித்த நோக்கம் நிறைவேறியதும், சுவாமி விவேகானந்தர் தான் யார் என்பதையும், எங்கிருந்து வந்தோம் என்பதையும் புரிந்துகொண்டார். அவர் அப்படிப் புரிந்துகொண்ட தினம் 1902-ம் வருடம், ஜூலை மாதம், 4-ம் தேதி.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் அது 1902 ஆம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி. தேவிக்கு மிகவும் பிடித்தமான வெள்ளிகிழமை நாள். அதிகாலை எழுந்து கொண்ட சுவாமி விவேகானந்தர், வழக்கத்திற்கும் மாறாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை தனித்திருந்து தியானம் செய்தார். பின் தேவியைக் குறித்து சில பாசுரங்களைப் பாடினார். காலையில் சக சீடர்களுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார். பின் என்றும் இல்லாத அதிசயமாக மதியம் உணவுக் கூடத்தில், அனைத்து சகோதரத் துறவிகளுடனும், சீடர்களுடனும் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து உணவு உண்டார். பின் சிறிது நேரம் அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து பிரம்மச்சாரிகளுக்கும், இளந்ததுறவிகளுக்கு கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் வரை வேதாந்த பாடம் நடத்தினார். வடமொழி இலக்கணத்தைக் கற்பித்தார். மாலை நேரம் ஆனதும் சக துறவியான பிரேமானந்தருடன் உலாவுவதற்காக வெளியே சென்றார். வெகு நேரம் உலாவி விட்டு வந்த பின் சக சீடர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின் தனது அறைக்குச் சென்ற அவர், தான் தனித்து அமர்ந்து தியானம் செய்யப் போவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சீடர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்படியே தனது அறைக்குள் சென்று தியானத்தில் ஈடுபட்டார்.

சிறிது நேரம் சென்றது. அப்போது இரவு எட்டு மணி இருக்கும். வெளியே மற்ற சீடர்கள் அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டிருந்தனர். தன் சீடர் ஒருவரை உள்ளே அழைத்த விவேகானந்தர், அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து விடுமாறு சொன்னார். கங்கை நதியைப் பார்த்தவாறே சிறிது நேரம் உட்கார்ந்து தியானம் செய்தார். பின் தான் படுத்துக் கொள்ளப் போவதாகவும் சற்று நேரம் தமக்கு விசிறிக் கொண்டிருக்குமாறும் சீடரிடம் வேண்டிக் கொண்டார். பின் மெல்லப் படுக்கையில் சாய்ந்தார். சற்று நேரம் சென்றிருக்கும். மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டார் சுவாமி விவேகானந்தர். அதுவே அவரது இறுதி மூச்சாய் அமைந்தது. அதன் பிறகு அவரது உடலிலிருந்து எந்தஅசைவுமில்லை. சலனமுமில்லை. சீடரோ அதை அறியாது தொடர்ந்து விசிறிக் கொண்டே இருந்தார்.

ஆனால் அதே சமயம் சென்னையில் தியானத்தில் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணானந்தரின் காதுகளில் அந்தக் குரல் ஒலித்தது. “” சசி, நான் என் உடம்பை விட்டு விட்டேன்!””. அது சுவாமி விவேகானந்தரின் குரல் தான் என்பதையும், அவர் மறைந்து விட்டார் என்பதையும் உணர்ந்த ராமகிருஷ்ணானந்தர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார். பின் வெகுநேரம் கழித்தே சுவாமிகள் சமாதி நிலை எய்திவிட்ட விஷயம் பேலூரில் உள்ள மற்ற சீடர்களுக்குத் தெரிய வந்தது. சொல்லொணா வேதனையுடன் அவர்கள் அவரது திருவுடலைச் சூழ்ந்து நின்றனர். சோகத்துடன் அவரது உடல் சமாதிக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். சுவாமி விவேகானந்தருக்கு அப்போது 39.

அப்படி சிறிய வயதிலேயே அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் இந்த உலகம் உள்ளவரை அவரின் எழுச்சி உரைகளும் சேவை மையங்களும் என்றும் நமக்கு அவரை நினைவூட்டும் என்பது உண்மை. இந்தியா என்றால் ஆன்மீகத்திலும் சேவையிலும் ஒரு அடையாளமாக விளங்கும் சுவாமி விவேகானந்தரின் நினைவு தினமான இன்று அவரை நாம் நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறோம்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement