வைட்டமின் பி12 குறைபாடு-அறிகுறிகள் டூ தீர்வுகள்!
நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இதில் உள்ள வைட்டமின்கள் நம் உடலுக்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் கண் பார்வைக்கு வைட்டமின் ஏ, சரும ஆரோக்கியத்துக்கும் எதிர்ப்பு சக்திக்கும் வைட்டமின் சி, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி... அடிப்படையாகத் தேவைப்படும் வைட்டமின்கள் பற்றி பலரும் அறிந்திருப்போம். இவற்றுக்கெல்லாம் கொஞ்சமும் சளைத்ததல்ல வைட்டமின் பி12. ஆரோக்கியத்தின் அஸ்தி வாரமே இந்த வைட்டமின்தான் என்றுகூட சொல்லலாம். குறிப்பாக, பெண்களின் ஆரோக்கியத்துக்கு... அதீத களைப்பு, மூட்டு களில் வலி, தசைப்பிடிப்பு, மறதி என பல பிரச்னைகளுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இருப்பது பலருக்கும் தெரிவ தில்லை. வைட்டமின் பி12 ஏன் அவசியம், அது குறைவதன் அறிகுறிகள், உணவுமுறை, சிகிச்சைகள் என சகலத்தையும் அறிந்து கொள்வோமா?`
எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமை, சின்னதாக ஒரு வேலையைச் செய்தால்கூட உடல் சோர்வு, கொஞ்ச தூரம் நடந்தாலே கை, கால் மூட்டுகளில் வலி, அடிக்கடி ஓய்வெடுக்கத் தூண்டும் மனநிலை... இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் அதற்கு வைட்டமின் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம். நம் உடலின் ரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 மிக அவசியம்.நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி12, உடலின் பல அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அடிப்படை யானது. நரம்புகளின் ஆரோக்கியத் துக்கும், டிஎன்ஏ மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்திக்கும் உதவுவதுடன், மூளையின் இயல்பான செயல்பாட்டை பராமரிக்கவும் இந்த வைட்டமின் அவசியம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவை. கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டு வோருக்கும் சற்று அதிகம் தேவைப்படும். நம் வயிற்றில் உள்ள புரதமான ‘இன்ட்ரின்சிக் ஃபேக்டர்’ (Intrinsic Factor) என்ற அகக் காரணியின் உதவியோடு வைட்டமின் பி12 உறிஞ்சப்படுகிறது. இது வைட்டமின் பி12 மூலக்கூறுடன் பிணைந்து நம் ரத்தம் மற்றும் செல்கள் அதை உறிஞ்ச உதவுகிறது. அதிகப்படியான வைட்டமின் பி12 நம் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. ஒருநாளைக்கான தேவையைவிட அதிகமான வைட் டமின் பி12 உடலில் சேரும்போது, நம் உடல், அதை எதிர்கால பயன்பாட்டுக்காகச் சேமித்துவைக்கும்.
யாருக்கெல்லாம் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்?
சைவ உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு, எடைக் குறைப்புக்காக அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, வாய்வுக் கோளாறு பிரச்னைகளுக்கு மாத்திரை, மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு, அதிகமாக விரதம் இருப்பவர்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படலாம். இது அதிகமாகும்போது `அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகைப் பிரச்னை, ஞாபகமறதி போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம்.
காரணங்கள் என்ன?
வயதாக, ஆக இந்த வைட்ட மினை உட்கிரகிக்கும் தன்மை குறையும். எடைக்குறைப்புக் கான அறுவை சிகிச்சையோ, வயிற்றின் குறிப்பிட்ட பகுதியை அகற்றும் அறுவை சிகிச்சையோ மேற்கொண்டவர்களுக்கும், குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்தக் குறைபாடு ஏற்படுவது சகஜம். ‘அட்ராஃபிக் கேஸ்ட்ரைட்டிஸ்’ (Atrophic Gastritis) எனப்படும் வயிற்று பாதிப்பு உள்ளவர்களுக்கும், வைட்ட மின் பி12 சத்தை உட்கிரகிப்பதை சிக்கலாக்கும் ‘பெனிஷஸ் அனீமியா’ (Pernicious Anemia) பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்தக் குறைபாடு வரும்.
சிறுகுடலை பாதிக்கும் ‘க்ரோன்ஸ் டிசீஸ்’ (Crohn’s Disease), சீலியாக் டிசீஸ் (Celiac Disease ), பாக்டீரியா மற்றும் பாராசைட் தொற்று போன்றவையும் இதற்கு காரணங்கள். அளவுக்கதிமாக மது அருந்தும்போது, உடலானது ஊட்டச்சத்துகளை உறிஞ்சிக் கொள்ள சிரமப்படும். அதுவும் வைட்டமின் பி12 குறைபாட்டுக்கு காரணமாகலாம். நோய் எதிர்ப்பாற்றலை பாதிக்கும் பிரச்னைகளும் காரணமாகலாம். தவிர, நெஞ்செரிச்சல், கேஸ்ட்ரைட்டிஸ் மற்றும் நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் இந்தக் குறைபாட்டை ஏற்படுத்தலாம். வீகன் எனப் படும் ஒருவகையான வெஜிடேரியன் உணவுப் பழக்கமும் முக்கிய காரணம்.
அறிகுறிகள்...
உடல் சோர்வு
வாய்ப்புண்
நாக்கு வெந்து சிவப்பாதல்
தோல் தொடர்பான பிரச்னைகள்
காதுகளில் சத்தம் வருதல்
இந்தக் குறைபாட்டை எப்படித் தடுக்கலாம்?
மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் பி 12 அதிகமாகக் கிடைக்கும். சைவ உணவுகளைப் பொறுத்தவரை சோயாபீன்ஸ், பால், தயிர் ஆகியவற்றில் ஓரளவுக்கு வைட்டமின் பி 12 கிடைக்கும். `வைட்டமின் பி12 சேர்த்த உணவுகள்’ (Vitamin B12 foods) என்று பிரத்யேகமாகவே விற்கப்படுகின்றன. இவை தவிர வைட்டமின் பி12 சத்துகள் நிறைந்த மாத்திரைகள், மருந்துகள் இருக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் வாங்கிச் சாப்பிடலாம். ஊசியாகவும் போட்டுக்கொள்ளலாம்.
வைட்டமின்கள், நம் உடலுக்குக் குறைபாடாகவும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில், தேவையைவிட அதிகமாகவும் இருக்கக் கூடாது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் தங்கினால் அவை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கிவிடும். ஆனால், வைட்டமின் பி 12-ஐப் பொறுத்தவரை அந்தப் பிரச்னையும் இல்லை. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், தேவைக்கு அதிகமாகக் கிடைத்தாலும், உடலில் தங்காமல் சிறுநீர் மூலமாகவோ வியர்வை மூலமாகவோ எளிதாக வெளியேறிவிடும்
டாக்டர் செந்தில் வசந்த்