இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவையில்லைங்கோ!..
சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது நம் அண்டை நாடான இலங்கை என்றழைக்கப்ப்டும் ஸ்ரீலங்கா. அங்கு மக்கள் உணவு,எரிபொருள், உடை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிரமப்பட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இத்தனைக்கும் இலங்கை அரசு தனது நாட்டின் பெருமளவு வருவாயை சுற்றுலாத்துறையை நம்பியே இருக்கிறது. அதை வளப்படுத்த அவ்வப்போது பல முயற்சிகளை செய்து வருகிறது. இதனிடையே ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டிற்குள் செல்ல விசா தேவைப்படுகிறது. சில நாடுகளுக்கு செல்ல எளிமையான முறையில் விசா பெற்றுவிடலாம். அதேவேளையில் கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகளும் உள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என இலங்கை அமைச்சரவை முடிவு செய்து அறிவித்திருக்கிறது.
இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோண்டு, சேலான், தப்ரபேன், செரண்டிப் என பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்ட இந்திய வரைபடத்தில் ஒரு சிறிய கண்ணீர்த் துளி வடிவிலான தீவு நாடான இலங்கை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது. இயற்கை, கலாச்சாரம் மற்றும் சமையல் இன்பங்களால் நிரம்பிய இந்த அழகான தேசம் எட்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது. சுற்றிலும் கடல் சூழந்த இலங்கை இயற்கை எழில் சூழ்ந்த நிலப்பரப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எழில் கொஞ்சும் ஓர் அழகிய தீவு!
தாழ்நில மழைக்காடுகளையும், வானுயர் பீதுறுதாலகால, சிவனொளிபாத மலையையும் பம்பரகந்த போன்ற அழகிய பல நீர் வீழ்ச்சிகளையும் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் பசுமை நிறைந்த எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களையும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பையும் கொண்டு காண்போரைக் கவர்ந்து நிற்கின்றது. இதன் வனப்பையும் வளத்தையும் அறிந்ததாலோ என்னவோ கவி பாரதி தன் பாடல் வரிகளில்
“சிங்களத் தீவினிற்கோர் பாலமமைப்போம் உயர்
சேதுவை மேடிருத்தி வீதி சமைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணளவாக 443 வகையான பறவையினங்களையும் ஆயிரக்கணக்கான விலங்கினங்களையும் கொண்டிருப்பதால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறுகிய பரப்பளவைக் கொண்ட இலங்கையில் பறவையினங்கள் அதிகமாகவே காணப்படுகிறது. வனப்புப் பெற்ற இந்நாட்டின் சிறப்பை உணர்ந்தே அதன் அழகைப் பருக அயல் நாட்டவர் படையெடுத்து வருகின்றனர். ஆகவே சுற்றுலாத்துறையில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு அதனூடாக நாட்டின் வருமானமும் உயர வழி கிட்டி இருந்தது. அதாவது இலங்கைக்கு மூன்று வழிகளில் அதிகமான பணம் வருகிறது. ஒன்று தேயிலை, இரண்டாவது ஆடை உற்பத்தி மூன்றாவது சுற்றுலா. இதை மூன்று 'டி' என்கிறார்கள். பொருளாதாரத்தில் இந்த மூன்று துறைகள்தான் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.
இந்த வழக்கத்தை உடைத்தது 2020-ஆம் ஆண்டில் வந்த கொரோனா. 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையும் அண்டை நாடுகளும் சர்வதேச விமானச் சேவைகளை நிறுத்தின. நாடும் முடங்கியது. பொருளாதாரத்தின் தூண்களாக இருந்த தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலாத் துறை ஆகிய அனைத்தும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன. அந்த மூன்றைத் தவிர வேறு எந்த நிரந்த வருமானமும் இல்லாத இலங்கை, படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது.
அதிலும் 2020-ஆம் ஆண்டில் வந்த கொரோனா. 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையும் அண்டை நாடுகளும் சர்வதேச விமானச் சேவைகளை நிறுத்தி நாட்டையே முடங்கிப் போட்டு விட்டது. பொருளாதாரத்தின் தூண்களாக இருந்த தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலாத் துறை ஆகிய அனைத்தும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன. இந்த மூன்றைத் தவிர வேறு எந்த நிரந்த வருமானமும் இல்லாத இலங்கை, படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது.
ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200 என்ற அளவில் இருந்து 300 ரூபாய்க்கும் அதிகமாகச் சரிந்திருந்திருக்கிறது. ரூபாயின் மதிப்புச் சரிந்தததால், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் திடீரென அதிகரித்தன.பெட்ரோல், டீசல், எரிவாயு, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருக்கின்றன. இவற்றுக்குக் கொடுக்கும் அளவுக்கு இலங்கை வங்கிகளிடம் டாலர் கையிருப்பில் இல்லை. அதாவது அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை. இதனால் இறக்குமதி தடைபட்டதால், பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் கட்டுப்பாட்டை இழந்து உயரத் தொடங்கின.
இதை எல்லாம் கவனத்தில் கொண்டு சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா வேண்டாம் என்று இலங்கை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்தை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை ஒப்புதல் உடன் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சோதனை முயற்சியை இலங்கை தொடங்கியுள்ளது. இதுகுறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த அறிவிப்பில், இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இலவச விசாக்களை மார்ச் 31 ஆம் தேதி வரை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.’ என தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் இந்த அறிவிப்பால், மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கிய நிலையில், தற்போது இலங்கை அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதை அடுத்து இந்தியர்கள் விசா இல்லாமல் வரலாம்.. வரலாம்.. வாங்க என்று வரவேற்பு கொடுக்கும் நாடுகளான
ஈக்வடார்
கிரெனடா
மக்காவ்
மாசிடோனியா (FYROM)
மைக்ரோனேசியா
பாலஸ்தீனிய பிரதேசங்கள்
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செனகல்
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
டிரினிடாட் மற்றும் டொபாகோ
வனுவாடு பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது