விருந்து - விமர்சனம்!
பத்திரிகை செய்திகளை மையமாக வைத்துக்கொண்டு ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை விருந்து என்ற பெயரில் எழுதி வழங்கி இருக்கும் டைரக்டர் தாமர கண்ணன், படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் காட்சிகளையும், திரைக்கதையையும் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் இரண்டு கொலைகள், அதனை சுற்றி நடக்கும் சில மர்மமான சம்பவங்களை வைத்துக்கொண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் டைரக்டர், படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.குறிப்பாக அர்ஜுனையும், அவரது ஆக்ஷனையும் அளவாக பயன்படுத்தினாலும், அதை ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும், அவரது திரை இருப்பு படம் முழுவதும் இருப்பது போலவும் கச்சிதமாக காட்சிகளை கையாண்டிருக்கும் தாமர கண்ணன், இறுதியில் அர்ஜுன் மூலமாக மக்களுக்கு, குறிப்பாக படித்தும் சில மூட நம்பிக்கைகளில் மூழ்கி முட்டாள்த்தனமான செயல்களை செய்பவர்களுக்கு சாட்டையடியும் கொடுத்திருப்பதாலேயே பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.
அதாவது ஒரு பிரபல தொழிலதிபர் கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். இவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. யாரோ கொலை செய்துவிட்டு பிணத்தை கடலில் போட்டுள்ளார்கள் என்று காவல் துறைக்கு தெரிய வருகிறது. சில மாதங்களில் தொழிலதிபரின் மனைவியும் கொலை செய்யப்படுகிறார். இவர்களது மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிந்து கொள்ளும் குடும்ப நண்பர் மகளை அடர்ந்த காட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். அங்கே அர்ஜுனின் நட்பு மகளுக்கு கிடைக்கிறது. அர்ஜுனின் செயல்பாட்டை பார்த்து சந்தேகப்படும் மகள் அர்ஜுனை கொலை செய்ய முயற்சிக்கிறார். அர்ஜுன் தனக்கும் இந்த கொலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புரிய வைத்து, கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க உதவி செய்வதாக உறுதி அளிக்கிறார். இருவரும் சேர்ந்து கொலையாளியை தேடுவதுதான் இப்படக் கதை .
மெயின் ரோலில் ஹீரோயின் அப்பா ஸ்தானத்தில் – நிதி ஆலோசகர் தேவ நாராயணனாக – வருகிறார் ஆக்ஷன் கிங் அர்ஜூன். வயதுதான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிர இளமையும், அதிரடி ஆக்சனும் இன்னும் அர்ஜூன், ஆக்சன் கிங்தான் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். நிஜமாலும் சண்டைக் காட்சிகளில் தூள் பறத்துகிறார். அதே நேரம், தன்னை கொலை செய்ய நாயகி முயற்சிக்கும்போது அதிர்வது, உண்மையை நெகிழ்ச்சியுடன் விளக்கிச் சொல்வது என நடிப்பிலும் முத்திரை பதித்து இருக்கிறார்.
ஹீரோயின் பெர்லியாக நிக்கி கல்ராணி நடித்து இருக்கிறார்.அப்பா மீதான பாசம், அவரை காணவில்லை என்றவுடன் பதற்றம், அவரது துர் மரணத்தை அதிர்ந்து அதிர்ச்சி, தன் உயிருக்கும் ஆபத்து என்றவுடன் ஏற்படும் பயம்… என தன் கேரக்டரின் வெயிட் புரிந்து சரியாக நடித்து இருக்கிறார் நிக்கி கல்ராணி.ஆட்டோ டிரைவராக வரும் கிரீஷ் நெய்யார், சாத்தானின் தூதராக வரும் ஹரிஷ் பெராடி உள்ளிட்ட அனைவரும் இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.
மியூசிக் டைரக்டர் ரதீஷ் வேகாவின் இசையில், ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் பெட்டர் பின்னணி இசையும் நாட் பேட் என்ற ரேஞ்சில் இருக்கிறது .
கேமராமேன் ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவில் வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளின் அழகு வாவ் சொல்ல வைக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் அழைத்துச் செல்லும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் வி.டி.ஸ்ரீஜித், இறுதி வரை அடுத்தது என்ன நடக்கும்? என்ற கேள்வியோடு ஒவ்வொரு காட்சியையும் எதிர்பார்ப்புடன் பயணிக்க வைத்திருக்கிறார்.
அதே சமயம் வித்தியாசமான கதைக்களம், சரியான நடிகர்கள் தேர்வு, விறுவிறுப்பான காட்சிகள் என பல விஷயங்களை கவனமாக இந்த விருந்தில் பரிமாறிய டீம் கிளைமாக்ஸ் பற்றி இன்னும் கொஞ்சம் ஆலோசித்திருந்தால் இந்த விருந்து ஓஹோ என பேசப் பட்டிருக்கும்.
எனி வே இந்த விருந்து நாட் பேட்
மார்க் 3/5