For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நீதியின் பெயரில் நடக்கும் வன்முறை!

05:58 PM Jul 06, 2024 IST | admin
நீதியின் பெயரில் நடக்கும் வன்முறை
Advertisement

த்தியப் பிரதேசத்தில் அனுப்பூர் மாவட்டத்தில் பாலுமுடா என்ற பகுதியைச் சார்ந்த சரிகா சென் என்ற 23 வயது இந்துப் பெண், சபிகான் என்ற முஸ்லிம் இளைஞரைக் காதலித்து வந்தார். இருவரும் மதங்கள் கடந்து சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். சிறப்புத் திருமணச் சட்டத்தில் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு முன் அறிவிப்பு கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டும். இந்த முன் அறிவிப்பால் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கத் தேடுகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காதலர்கள் தங்களுக்குக் காவல் துறை பாதுகாப்பு வழங்க மறுப்பதாகவும், மேலும் காதலன் மீது பொய் வழக்குப் போட முயற்சி நடப்பதாகவும் அது தடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் லதா சிங் /எதிர்/ உ.பி மாநிலம் 2006 என்ற வழக்கில் காதலர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கூறியதைச் சுட்டிக் காட்டிப் பாதுகாப்புக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement

இந்த வழக்கு மத்தியப் பிரதேசம், ஐகோர்ட் நீதிபதி குருபால் சிங் அலுவாலியா என்பவர் முன்பு விசாரணைக்கு வந்தது. பெண்ணின் பெற்றோர் தன் மகள் முஸ்லிமைத் திருமணம் செய்தால் தங்களை ஊரை விட்டு விலக்கி விடுவார்கள். மேலும் எங்கள் நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள் எனவே திருமணத்திற்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கூடாது என்றனர். நீதிபதிக்கு முஸ்லிம் பையன் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்வதில் உடன்பாடில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விட ஆழ் மனதில் ஊறிய பழைமைவாதம் இங்கு தலை தூக்கியது. எனவே ஒரு புதுத் தீர்ப்பை எழுதி உள்ளார்.

Advertisement

முஸ்லிம் சட்டத்தில் ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாத ஒருவரைத் திருமணம் செய்யக்கூடாது. குறிப்பாக உருவ வழிபாடு, தீயை வணங்குபவர்கள். (இது பார்சி சமூகத்தை நினைத்து உருவாக்கப் பட்டதாக இருக்கலாம்.) இந்தத் திருமணம் செல்லாததல்ல. (not void) ஆனால் வழக்கமான முறைப்படுத்தப் பட்ட திருமணம் அல்ல. (Irregular marriage) ஆனால் திருமணம்தான். இது பின் நாட்களில் நிகழும் நிகழ்வுகளைப் பொறுத்து, திருமண சாட்சிகளைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் நீதிபதி பார்த்தார், தீயை வணங்குபவரான இந்துக் காதலியும், முஸ்லிம் இளைஞரும் திருமணம் செய்வது செல்லாது. எனவே காதலர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது எனத் தீர்ப்புக் கூறிவிட்டார்.

திருமணம் செல்லுமா? செல்லாதா? எனக் கேட்டு யாரும் நீதிமன்றம் போகவில்லை. காதலர்களுக்கு, அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். உயிர் வாழும் உரிமையை ஆணவக் கொலையாளிகள் பறிக்க நினைக்கும் போது நீதிமன்றம் தலையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் நீதிபதியின் விளக்கம், போகாத ஊருக்கு வழி மட்டும் காட்டவில்லை. புதிய பிரச்சனைகளும் உருவாகின்றன.

சுப்ரீம் கோர்ட்டின் முன் தீர்ப்பு , சட்டத்தின் ஆட்சி, சனநாயகம் என்ற எல்லாப் பாதுகாப்புகளையும் தாண்டி நிலப் பிரபுத்துவம், மனு நீதி கோலோச்சுகிறது. பாதுகாப்பற்ற காதலர்களைச் சாதிய, மதவாதக் கட்டப் பஞ்சாயத்து, நாட்டாமை கைகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழியாக வீசி எறிவதும் நீதியல்ல!. இது முற்றிலும் நீதியின் பெயரில் நடக்கும் வன்முறை.

பாலமுருகன்

Tags :
Advertisement