வினேஷ் போகத் இந்திய மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்றுவிட்டார்!.
இந்திய வரலாற்றில் எந்தத் துறையாக இருந்தாலும் வாய்ப்பு என்பது பாரபட்சமாகத்தான் இருக்கும். மதமும், சாதியும் புரையோடி இருக்கும். எனது கல்லூரி காலத்தில் பல்கலைக்கழக அணிக்காக கிரிக்கெட் விளையாட தகுதித் தேர்வு நடந்தபோது ஏற்கனவே அந்த அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தபோது ஏறத்தாழ 70 % உயர்சாதி மாணவர்கள் இருந்ததை மன அழுத்தத்தோடு உணர முடிந்தது.கிரிக்கெட்டை முறையாக அதற்கான பயிற்சிக் கருவிகளோடு அணுகுவது பொருளாதார அடிப்படையில் நல்ல நிலையில் இருக்கக்கூடிய உயர்சாதி மாணவர்களின் குடும்பங்களில் புழக்கத்தில் இருந்திருக்கிறது.பிற குடும்பங்களில் அந்த விழிப்புணர்வோ, வாய்ப்புகளோ இல்லை என்பது ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம், பல்கலைக்கழகங்களில் விளையாட்டு இயக்குனர்களும், பயிற்சியாளர்களும் உயர் சாதியினராக இருந்தது என்பதை மறுக்க முடியாது.
நான் பேசுவது ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முந்தைய கதை, இன்று ஓரளவு நிலைமை மாறி இருக்கிறது. கிரிக்கெட் மட்டுமில்லை எல்லா விளையாட்டுகளுக்கும் ஒற்றை வாய்ப்பை நம்பி இருக்காமல்... பல்வேறு வாய்ப்புகள் பெருகி இருப்பதும், இட ஒதுக்கீட்டு வாய்ப்புகளில் விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு பதவிகளுக்கு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை சமூகங்களின் மனிதர்கள் வந்து சேர்ந்திருப்பதும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், துறைச் செயலாளர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் உயர் பதவிகளில் இருக்கும் இயக்குனர்கள், தலைவர்கள், செயலாளர்கள் என்று இன்றும் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களே ஆளுமை செலுத்துகிறார்கள். விளையாட்டுத் திறன்கள் மட்டுமில்லாமல், பல்வேறு அறிவுத் திறன்கள் தொடர்பான துறைகளிலும் இவர்களின் முழுமையான ஆளுமையைக் கடந்து ஒரு சாமான்ய இந்தியன் உயரங்களை அடைவது கடுமையான சவால்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள், முதல்வர்கள், துறை அமைச்சர்கள் பல்வேறு சமூகங்களில் இருந்து வந்திருக்கலாம், ஆனால், அமைச்சகங்களில் ஒவ்வொரு நகர்வையும் தீர்மானிக்கும் அலுவலக லாபி இந்தியா முழுவதும் இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. குறிப்பாக இன்னும் வெளிப்படையாகப் பேச வேண்டுமென்றால் உயர்சாதி பிராமணர்களின் கோட்டை இந்தியாவின் அரசதிகாரம். இந்தக் கோட்டை முந்தைய காங்கிரஸ் அரசின் வழியில் இருந்து ஆழமாக உருவாக்கப்பட்டது. நாம் ஏற்கனவே சொன்னதைப் போல இந்துத்துவத்தின் மிதவாத முகம் காங்கிரஸ் என்றால், அதன் தீவிரவாத முகம் பாரதீய ஜனதா. இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஆதார மையம் ஆர்.எஸ்.எஸ்.
இந்த முன்னுரையோடுதான் நாம் வினேஷ் போகத் விஷயத்தை அணுக வேண்டியிருக்கிறது. வினேஷ் போகத் 53 கிலோ பிரிவில் விளையடக்கூடியவர், அவரது உடல் தகுதிக்கு ஏற்ற பிரிவான இந்தப் பிரிவில் ஏற்கனவே விளையாடிப் பதக்கங்கள் வென்றவர். ஆனால், இடையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகளின் போது இவரது எடையில் இருந்த ஏற்ற இறக்கங்கள் காரணமாக வலிந்து 50 கிலோ பிரிவில் விளையாடுவதற்குத் தயாராகி தன்னைவிட உடல் வலு குறைவான போட்டியாளர்களை சந்தித்து வெற்றி பெற்று இறுதிச் சுற்று வரை வருகிறார். இறுதிச் சுற்றுக்கு முதல் நாள் அவரது எடை எதிர்பாராத விதமாக அதிகரிக்கிறது. பல்வேறு தொழில்நுட்பக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த எடை அதிகரிப்புக்கு அவரது உணவுக் கட்டுப்பாட்டு நிபுணரும், பயிற்சியாளரும், மேலாளர்களும் மிக முக்கியமான காரணமாக இருப்பார்கள். போட்டியாளர்களின் உடல் தகுதி மற்றும் மனநிலையைத் தீர்மானிப்பது மல்யுத்த அணியை நிர்வகிக்கும் அலுவலர்களின் பொறுப்பு. ஆனால், இந்தப் பொறுப்பில் இருந்து அவர்கள் தவறி இருக்கிறார்கள்.இந்தத் தவறு இயல்பாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்ற கேள்வி இப்போது முக்கியமானது. குழு மற்றும் துறையைக் தாண்டி ஒரு விளையாட்டு வீரர் எந்தப் பிரிவில் போட்டியிட விரும்புகிறார் என்பது முழுக்க முழுக்க அவரது விருப்பம் சார்ந்தது.
தனது உடல்தகுதிக்கு மாறான பிற பிரிவுகளில் அவர்கள் போட்டியிட விரும்பும் போது ஏற்படும் உடல் எடை தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களுக்கு அவர்கள்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.ஆகவே, வினேஷ் 50 கிலோ பிரிவைத் தேர்ந்தெடுக்கும் போதே இந்த சிக்கல்கள் உருவாகத் துவங்கி இருக்கும். வீரர் வீராங்கனைகள் எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அவர்கள் ஏற்கனவே விளையாடிய படைப்பிரிவு என்ன? உடல் தகுதியில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை எல்லாம் ஒலிம்பிக் மல்யுத்தக் கூட்டமைப்பு நுட்பமாகக் கவனிக்கும். மாற்றுப் பிரிவுகளுக்கு வந்து விளையாடுகிற போது அதே பிரிவில் ஏற்கனவே விளையாடிக் கொண்டிருக்கும் பிற விளையாட்டு வீரர்களின் ஆட்டத்திறனில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஒலிம்பிக் கமிட்டி உன்னிப்பாக கவனிக்கும்.அப்படித்தான் வினேஷ் போகத்தின் போக்கையும், அவரது உடல் திறனில் குறிப்பாக எடையில் ஏற்படும் மாற்றங்களை ஒலிம்பிக் கமிட்டி கவனித்திருக்கும். அதில் பாரபட்சம் நிகழ்ந்திருக்கும் என்று குற்றம் சாட்டுவது ஒருதலைப்பட்சமானது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலிம்பிக் போட்டிகளில் சில தவறுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. அதற்கான முன்னுதாரணங்கள் பல உண்டு.ஆனால், ஒலிம்பிக் கமிட்டியின் முடிவுகளில் இந்திய அரசியல் லாபியால் நீதிக்குப் புறம்பான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பாரதீய ஜனதாவின் அதிகார மையங்களுக்கு எதிராக வினேஷ் போகத் போராட்டங்களில் கலந்து கொண்டார். அதில் தீவிரமாக இருந்தார் என்பதால் இந்த அரசியல் விமர்சனங்கள் தீவிரமாக நாடாளுமன்றத்திலும் ஒலித்திருக்கிறது.ஆனால், வினேஷ் போகத்தை பாரதீய ஜனதா அரசு வன்மத்தோடு அணுகி இருக்குமேயானால் இங்கிருந்து தேர்வு செய்யப்படும் போதே தங்கள் வழக்கமான உத்திகளைப் பயன்படுத்தி அவரைப் பங்கேற்காமல் செய்திருக்க இந்த அரசால் முடிந்திருக்கும். ஆகவே திட்டமிட்டு வினேஷ் போகத் பழி வாங்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு ஆதாரங்களற்றது.
குத்துச்சண்டை, மல்யுத்தம் மற்றும் பளு தூக்குதல் போன்ற போட்டிகளில் மட்டுமே இந்த எடை குறித்தான தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. எனவே தொழில் நுட்ப ரீதியாக நமது ஒலிம்பிக் நிர்வாகிகள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்ற அளவிலேயே நாம் இந்த விவகாரத்தை அணுக வேண்டும். உடனடியாக வலுவான எதிர்ப்பையும், மறுபரிசீலனை வாய்ப்புகளையும் நோக்கி இந்திய ஒலிம்பிக் நிர்வாகம் சென்றிருக்க வேண்டும். அவர்கள் அதற்கான முயற்சிகளில் உளப்பூர்வமாக ஈடுபட்டார்களா என்பதை விசாரிக்க வேண்டும். மேலும் வினேஷ் இதுகுறித்து என்ன சொல்கிறார் என்பதும் மிக முக்கியமானது. அவர் ஒரு அரசியல் போராளியும் கூட. எனவே அவரை ஏமாற்றி தவறாக வழிநடத்தி இந்தத் தகுதி இழப்பை நிகழ்த்தி இருப்பார்கள் என்பது கேள்விக்குறி.
எல்லாவற்றையும் தாண்டி, உலக அரங்கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை வெல்லவே முடியாத சக வீராங்கணையை வீழ்த்தி தங்கப் பதக்கத்துக்கு மிக நெருக்கத்தில் சென்று இந்தப் பின்னடைவை சந்தித்திருக்கும் வினேஷ் போகத் இந்திய மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்றிருக்கிறார்.இந்தப் பின்னடைவில் இருந்து எல்லாத் தரப்பும் பாடம் கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் இந்தத் தவறுகள் நிகழாமல் இருக்கத் தயாராக வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும்.பொதுவாக இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் உயர்சாதி ஆதிக்கத்தில் இருந்து இந்திய நாடு விடுதலை பெறுவதற்கு இன்னும் நூற்றாண்டுகள் கூட ஆகலாம். அல்லது நிலைமை இன்னும் மோசமாகப் போகலாம். இந்திய மக்கள் எதிர்காலத்தில் என்ன மாதிரியான அரசியலைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதில் அடங்கி இருக்கிறது அதற்கான முழுமையான தீர்வு.