விஜய்யின் த.வெ.க. மாநாடு, ஏன் வெற்றி பெற வேண்டும்?
தமிழ்நாட்டில் எஸ் எஸ் ஆர், எம் ஜி ஆர், சிவாஜி ..இது போன்றோரைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அரசியலுக்கு வந்த மற்ற தலைவர்களுக்கும் விஜய்க்கும் பெரும் வேறுபாடு உண்டு .
1) சினிமா மார்க்கெட் போன நிலையிலோ , அதில் தொய்வு விழுந்த நிலையிலோ , சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்ளவோ வேறு வழி இல்லாமலோ அவர் அரசியலுக்கு வரவில்லை. அவரது வருமானம் எங்கே எப்படி இன்வெஸ்ட் ஆகிறது என்பது கூட பலருக்கும் தெரியாது இன்னைக்கும் விஜய் சம்பளம் 250 கோடி . விஜய் கால்ஷீட் கிடைத்து விட்டால் வாரிசு போன்ற மொக்கைத் திரைக்கதைகள் கூட கோடி கோடியாகக் கொட்டும் . அப்படிப்பட்ட சூழலில் அவர் அரசியலுக்கு வருகிறார்.
2) அரசியலுக்கு வந்து விட்டால் நிறைய பேச வேண்டும் என்பது உண்மைதான் . அதற்காக, பேசத் தெரியாமல் உளறிக் கொட்டி மாட்டிக் கொண்டு மானம் கெட்டவர்கள் பலர் . ஆனால் விஜய் இதுவரை பெரிதாகப் பேசவே இல்லை என்பதே ஒரு பலம் . காரணம் அவர் வாய்க்கு வந்ததைப் பேசாமல் பேசுவதற்கு முன்பு என்ன பேச வேண்டும் என்று யோசிக்கிறார் ."உங்க கொள்கை என்னன்னு கேட்டாங்க தலை சுத்திப் போச்சு" என்பது போன்ற பேச்சுகள் அவரிடம் இல்லை. முப்பது வருடமாக, " அரசியலுக்கு வந்தால் போய் பேசணும் எனக்கு அது ஒத்து வராது" என்று பந்தா பண்ணி விட்டு அப்புறம் ஹி ஹி ஹி என்று இளித்துக் கொண்டு அவர் அரசியலுக்கு வரவில்லை . அமைதியாக இருந்தாலும் விஜய் தெளிவாக இருக்கிறார் .
3) கட்சி என்றால் திராவிட என்ற பெயர் இருக்க வேண்டும் .. இல்லாவிட்டால் அது தெய்வக் குத்தம் ஆகி விடும் என்று பலரும் எண்ணிக் கொண்டு இருந்த நிலையில் , அல்லது திராவிடமும் வேண்டாம் தமிழும் வேண்டாம் என்று பலர் யோசித்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார் .
4) நிர்வாகம், நேர்மை, தொண்டு என்று எல்லாவகையிலும் சிறந்த தமிழக முதல்வர் என்றால் அது காமராஜர்தான். ஆனால் திராவிடக் கட்சிகள் வளர்ந்த பிறகு காமராஜர் திட்டமிட்டு மறைக்கடிக்கப்பட்டார் . முட்டு சந்துகளில் முக்கால் அடி மேடை போட்டு காங்கிரஸ் நடத்தும் கூட்டங்களில் மட்டும் சன்னமாக அவரது புகைப்படம் இருந்தது . பெயர் உச்சரிக்கப்பட்டது. அதை மாற்றி இன்று விக்கிரவாண்டியில் உயர்ந்து நிற்கும் காமராஜரின் கட் அவுட் நெகிழ வைக்கிறது . அதே நேரம் பெரியாரும் இருக்கிறார் . அம்பேத்காரும் இருக்கிறார். இந்த பேலன்ஸ் கவனிக்க வைக்கிறது .
5) உலகில் எந்த இனத்துக்கும் இல்லாத பழம் பெருமை தமிழ் இனத்துக்கு உண்டு .பழம் பெருமை பேசி சோம்பித் திரிவது மடமைதான் . அதே நேரம் சொந்த வரலாற்றின் மீதான பெருமிதம் ஆக்கப்பூர்வமாக மாறும்போது அது மேலும் சாதிப்பதற்கான உத்வேகம் தரும் .ஆனால் திராவிட இயக்கம் "பழம் பெருமை பேசி வீணாப் போகாதே என்று சொல்கிறேன் என்ற பெயரில் "பழம்பெருமையே பேசாதே . உன் வரலாற்றையே மறந்து விடு " என்று தமிழனிடம் சொல்வதிலேயே குறியாக இருந்தது. கெட்ட விசயங்களை எல்லாம் அய்யகோ தமிழா என்று அடையாளப்படுத்தி விட்டு , தமிழ் இனத்தின் நல்ல விசயங்களை பெருமைகளைப் பேசும்போது எல்லாம் திராவிட இனத்தின் பெருமை பாரீர் என்று லேபிள் மாற்றியது .ஆனால் ஜான்சி ராணி எல்லாம் இவரின் கால் தூசு என்று சொல்லத்தக்க - சம காலத்தில் அவர் அளவுக்கு உலக அளவில் எந்த பெண்ணும் இருந்தது இல்லை என்று சொல்லத்தக்க - வேலு நாச்சியாரை தமிழக வெற்றிக் கழகம் தூக்கிப் பிடித்து இருப்பது ... அதற்கு இணையாக அஞ்சலையம்மாளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருப்பது (இருவரும் சுதந்திரப் போராட்டத்தின் வேறு வேறு கால வடிவங்கள் ) ... இவை எல்லாம் விஜய்க்குள் இயல்பாக இருக்கும் தமிழ் மொழி இன உணர்வின் அடையாளங்கள் .
6) அதோடு விஜய் இந்த மண்ணின் மைந்தன் .
இந்தக் காரணங்களால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வெற்றி மாநாடாக ஆக மனப் பூர்வமாக வாழ்த்துகிறேன்
- அன்புடன்
சு.செந்தில் குமரன்