For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்!

07:39 PM Dec 29, 2023 IST | admin
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்
Advertisement

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71), உடல்நலக் குறைவால் சென்னை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6.10 மணிக்கு காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திலும், பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலும் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரைசென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, மு.பெ.சாமிநாதன், ரகுபதி, உதயநிதி ஸ்டாலின்,மா.சுப்பிரமணியன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினி, கமல், பாக்யராஜ், குஷ்பு உள்ளிட்ட திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டு வந்திருந்த தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் நீண்ட வரிசையில் வந்து விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 2.45 மணி அளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு, கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. முத்துசாமி பாலம் வழியாக சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இறுதி ஊர்வலம் சென்றது. தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் கட்சிக் கொடியைஏந்தியபடி ஊர்வலத்தில் கண்ணீருடன் பங்கேற்றனர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் நின்று, மலர்களை தூவி விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். ‘கேப்டன்.. கேப்டன்’ என்றும், ‘கேப்டனுக்கு வீர வணக்கம்’ என்றும் கோஷமிட்டனர். இளைஞர்கள் மட்டுமின்றி, வயதான ஆண்கள், பெண்களும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். குடும்பம் குடும்பமாகவும், குழந்தைகளுடனும் பலர் வந்திருந்தனர். சாலை ஓரம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகளின் மாடி, உயரமான கட்டிடங்களின் மேல்தளம் என திரும்பிய பக்கமெல்லாம் கைகூப்பியபடி நின்று மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

வாகனத்தில் விஜயகாந்த் உடல் அருகே நின்றிருந்த அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் கைகளை கூப்பி கண்ணீர் மல்க, அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தபடி வந்தனர். தீவுத்திடலில் இருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகம் வரை மக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் வெள்ளத்தின் நடுவே, விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் ஊர்ந்து சென்றது. 3 மணி நேரம் நீடித்த இறுதி ஊர்வலம், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தை மாலை 5.45 மணிக்கு வந்தடைந்தது.

மாலை 6 மணி அளவில் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி, அதிமுக முன்னாள்அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வுகளை எல்இடி திரையில் பார்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள்உணர்ச்சி பொங்க, ‘கேப்டன், எங்கள் கேப்டன்’ என கோஷமிட்டனர். செல்போன்களை ஒளிரவிட்டு தங்கள் பாசமிகு கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

இதன்பிறகு, குடும்பத்தினர், உறவினர்கள் சார்பில் இறுதிச் சடங்குகள் நடந்தன. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரும், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தேமுதிக தொண்டர் அணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இரவு7 மணி அளவில் தேமுதிக தலைமை அலுவலகவளாகத்தில் சந்தன பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, ‘கேப்டன் புகழ் வாழ்கவே. கேப்டனுக்கு வீரவணக்கம்’ என்று கட்சியினர் முழக்கமிட்டனர்.

‘எங்கள் இதயங்களில்நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே’: விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய புகைப்படங்களை எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ‘எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அஞ்சலி: தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சாலைகள், தெருக்களில் பொதுமக்கள் தாமாக முன்வந்து, விஜயகாந்த் படத்தை வைத்து மாலை போட்டு மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி பேனர்கள், போஸ்டர்களும் அதிக அளவில் இருந்தன. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று வாகனங்களில் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் சென்னையில் குவிந்தனர். உடல் அடக்கம் முடிந்து பல மணி நேரம் வரை பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.

கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இறுதி சடங்கில் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் என மொத்தம் 250 பேர் மட்டுமே பங்கேற்றனர். தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை. வெளியே வெள்ளமென திரண்டுநிற்கும் மக்கள், இறுதி அஞ்சலி நிகழ்வுகளைபார்க்க, அலுவலக நுழைவுவாயிலில் 4 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

சந்தனப் பேழை:

விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்வதற்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் குழி தோண்டும் பணிகள் ஆரம்பித்து பிற்பகலில் முடிக்கப்பட்டது. இதற்கிடையே அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சந்தனத்தினால் ஆன பேழை, மதியம் 2.50 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பேழையின் மேற்பகுதியில் ‘தேமுதிக நிறுவனத் தலைவர் - புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்றும், அவரது பிறப்பும் - இறப்பும் பொறிக்கப்பட்டிருந்தது.

தேவாரம், பாசுரங்கள் பாடப்பட்டன:

விஜயகாந்த் குடும்பத்தில் தெலுங்கு முறையில்தான் இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும். ஆனால் அவர் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவர் என்பதால் தமிழ் மொழியில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. ஆண்டாள் திருப்பாவை, திருவாசகம், தேவாரம், பட்டினத்தார் பாடல்கள் ஆகியவை பாடப்பட்டன.

Tags :
Advertisement