For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விஜய் கட்சிக் கொள்கைகள் & விஜய் பேச்சு முழு விபரம்!- வீடியோ!

07:44 PM Oct 27, 2024 IST | admin
விஜய் கட்சிக் கொள்கைகள்   விஜய் பேச்சு முழு விபரம்   வீடியோ
Advertisement

மிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்று முடிந்தது. மாலை 3 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4.03க்கு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.பின்னர் 800 மீட்டர் நீளமுள்ள ரேம்பில் நடந்துவந்தார். அப்போது தொண்டர் ஒருவர் அவர்மீது வீசிய கட்சி துண்டை தன் தோளில் முதன் முதலாக அணிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் வீசிய துண்டுகளை தன் தோளில் அணிந்து கொண்டார். தவறிய துண்டுகளை அவருடன் வந்த பவுன்சர்கள் சேகரித்தனர். பின்னர் மீண்டும் மேடைக்கு திரும்பிய விஜய் தன் தோளில் இருந்த கட்சி துண்டுகளை அங்கிருந்த டீபாயில் கவனமாக வைத்தார். ஒரே ஒரு துண்டை மட்டும் அணிந்துகொண்டார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து மேடையின் பின்னால் அமைக்கப்பட்ட திருப்பூர் குமரன், காமராசர், பெரியார், தமிழ் மன்னர்கள், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இதன்பின் மாலை 4.24க்கு ரிமோட் மூலம் கட்சி பாடலான ''தமிழன் கொடி பறக்குது'' ஒலிக்க ரிமோட் மூலம் 100 அடி உயரமான கட்சி கொடியை ஏற்றினார்.இதனை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது. முதலில் உறுதி மொழியை பொருளாளர் வெங்கட்ராமன் வலது கையை இடது மார்பில் வைத்து வாசித்தார். பின்னர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரையாற்றினார். கொள்கைப் பரப்பு செயலாளர் தாகிரா, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து கட்சியின் கொள்கைப் பாடல் ஒலித்தது.

Advertisement

மேலும் `வெற்றிக் கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கிய அம்சமே கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை பிரகடனப்படுத்துவதுதான்.அந்த வகையில் கட்சித் தலைவர் விஜய் வழங்க கொள்கைகளை பெற்று வாசித்தார் பேராசிரியர் சம்பத் குமார். அவரைத் தொடர்ந்து செயல்திட்டங்களை தலைவர் விஜயிடம் இருந்து பெற்று வாசித்தார் கேத்தரின் பாண்டியன்.

செயல்திட்டங்கள்:

நிர்வாக சீர்திருத்தம்

அரசு தனியார் துறை எதுவாகினும் அதில் எவ்வகையிலும் எவ்வடிவிலும் அரசியல் தலையீடு இருக்கவே கூடாது'. இந்த நிலைப்பாட்டை உறுதிபடுத்தி லஞ்சலாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்துக்கு வழி வகுக்கப்படும்.

சாதி, மத மற்றும் பாலியல் சார்பின்மை அரசு நிர்வாகத்தின் வழிகாட்டு வழிமுறைகளாக கடைபிடிக்கப்படும்.

அரசு நிர்வாகம் எப்போதும் அரசியல் சார்ந்ததாகவும் முற்போக்கு சிந்தனையுடனும் பன்முகத்தன்மையுடனும் இயங்கும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறைபடுத்தப்படும்.

அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிக்காக உயர் நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது போல, மதுரையில் தலைமைச் செயலக கிளை அமைக்கப்படும்.

சமூகநீதி

சமூகநீதி, மதச்சார்பின்மை கோட்பாடுகள் செயல்படுத்தப்படும்.

சமதர்ம சமத்துவ கோட்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரான வர்ணாசிரம கோட்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் அவற்றிற்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் சமமான விகிதாச்சார இடப்பங்கீடு அளிக்கப்படும்.

சாதி, மதம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவச் சூழல் வழங்கப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்துடன் இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களின் முன்னேற்றத்திலும் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

மொழிக் கொள்கை

தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டிற்கு எப்போதும் ஏற்றக் கொள்கை. தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி, வழிபாட்டு மொழி, வழக்காடு மொழி என்பது உறுதி செய்யப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சி கல்வி வரை கற்கலாம் என்பதும் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும்.

கீழடி, கொந்தகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பழந்தமிழரின் வைகை நதி நாகரீகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை அளிக்கப்படும்.

மாநில உரிமை

மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கை நடைமுறைபடுத்தப்படும். எப்படி மருத்துவம் மாநில பட்டியலில் உள்ளதோ அதேப்போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக இருப்பதால் ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்வி எழும்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்.

மகளிர் நலன்

தமிழக வெற்றிக் கழகத்தில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு கட்சி பலன்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மகளிருக்கு வழங்கப்படும்.

படிப்படியாக அது உயர்த்தப்பட்டு 50 விழுக்காடு என்ற நிலை எட்டப்படும்.

அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும்.

பெண்கள் குழந்தைகள் முதியோர் பாதுகாப்பிற்கு தனி துறை உருவாக்கப்படும்.

மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது போல மாவட்டம்தோறும் மகளிருக்கான மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் உருவாக்கப்படும்.

பகுத்தறிவு மற்றும் தீண்டாமை

மனிதகுல அழிவிற்கு வழி வகுக்கிற உடல், மன நலனுக்கு கேடாக அமையும் அறிவியல் சாராத சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும்.

தீண்டாமை என்பது குற்றம்! தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளை கொண்ட காமராஜர் மாதிரி அரசு பள்ளி ஒன்று உருவாக்கப்படும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கான தரம் உயர்த்தப்படும்.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கென தனியாக அரசு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

மருத்துவம்

மாவட்ட அளவில் அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தரம் உயர்த்தப்பட்டு அங்கேயே போதுமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வசதிகள் உருவாக்கப்படும்.

புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

விவசாயம்

விவசாயிகளின் விற்பனை விலை மற்றும் நுகர்வோர் வாங்கும் விலை இவற்றிற்கு இடையேயான இடைவெளியை குறைக்க அறிவியல் பூர்வமான முறைகள் நடைமுறைபடுத்தப்படும்.

நீர்நிலைகளில் உள்ளா ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதேபோல ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் மீட்டெடுக்கப்படும்.

அதிக கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்கள் தமிழ்நாடு முழுவது அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழர்களின் மரபுவழி தொழிலான பணை தொழில் மேம்படுத்தப்படும். ஆவின் பாலகங்களில் கருப்பட்டி பாலும் வழங்கப்படும். பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்.

நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பள்ளி மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களின் சீருடைகள் நெசவாளர்களிடமிருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதார மேம்பட அவர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை அரசு உணவகங்கள் மற்றும் விடுதிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை, கனிம வளங்கள் கொள்ளை போன்றவற்றைத் தடுக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்.

நகர கிராம பேதம் களைய மாநகரங்களில் மக்கள் தொகையைக் குறைக்க மற்ற பகுதிகள் வளர்ச்சி அடைய மண்டலவாரியான பகுதிசார் வளர்ச்சியைப் பரவலாக்கும்படி, மண்டலவாரியான துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

தொழிற்சாலைகள் உரிய விதிகளைப் பின்பற்றுவதையும், அவற்றின் கழிவுகள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறாமல் இருப்பதையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயலிழந்து இருப்பதால் அந்த அமைப்பு இனி சீரமைக்கப்படும்.

வனவிலங்குகள் பறவைகள் மற்றும் அழியக்கூடிய அபாய நிலையில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பளவு அதிகரிக்கப்படும்.

போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும்.

இதன் பின்னர் தன் பெற்றோரிடம் ஆசி பெற்ற பிறகு விஜய் பேசிய விபரம் இதோ :

"ஒரு குழந்தை முதன் முதலாக அம்மானு சொல்லும்போது அவங்களுக்கு ஒரு சிலிர்ப்பு வரும். அந்த சிலிரிப்பு பத்தி அவங்களாக தெளிவாக சொல்ல முடியும். அந்த உணர்வு எப்படி இருந்ததுனு கேட்டால் அந்த குழந்தைக்கு எப்படி சொல்லும்? குழந்தைகிட்ட எதை கேட்டாலும் பால் வாசத்துடன் மழலையுடன் சிரிக்க மட்டும்தான் தெரியும்.அந்த உணர்வை சிலாகிச்சு அந்த குழந்தையால சொல்ல முடியாதுல. அப்படி ஒரு உணர்வோடதான் உங்க முன்னாடி நான் நிற்கிறேன். அம்மாகிட்டகூட தன்னுடைய உணர்வை சொல்ல தெரியாமல் இருக்கிற அந்த குழந்தைக்கு முன்னால் ஒரு பாம்பு வந்து படமெடுக்குதுனு வைங்க....எல்லோரும் பாம்பை கண்டதும் ஓடிடுவாங்க. `பாம்பை கண்டால் படையே நடுங்கும்'னு ஒரு பழமொழியே இருக்கு. தன்னோட அம்மாவை பார்த்து சிரிச்ச அதே சிரிப்போட அந்த பாம்பையும் கொஞ்சம்கூட அலட்டிக்காமல் கையில பிடிச்சு விளையாடும்.அப்போ அந்த குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் இல்லையானு ஒரு கேள்வி வரும். பாச உணர்வையே என்னனு சொல்ல தெரியாத குழந்தைக்கு பயம்னா மட்டும் என்னனு சொல்ல தெரியும். இங்க அந்த பாம்புதான் அரசியல். அதை கையில பிடிச்சு விளையாட ஆரம்பிக்கிறதுதான் உங்கள்....! அரசியலுக்கு நாம குழந்தைதான் .

இது மற்றவர்களுடைய கருத்து. ஆனா, பாம்பாக இருந்தாலும் பயம் இல்லைங்கிறதுதான் நம்முடைய நம்பிக்கை. அரசியல் சினிமா கிடையாது. அரசியல் போர்களம் ஆச்சே! பாம்பாக இருந்தாலும் பாலிடிக்ஸாக இருந்தாலும் கையில எடுக்கணும்னு முடிவு பண்ணினதுக்குப் பிறகு சீரியஸ்னெஸுடன் சிரிப்பையும் கலந்து செயல்படுறதுதான் நம்ம ஸ்டைல். அப்படி இருந்தால்தான் இந்த களத்துல எதிர்ல நிற்கிறவர்களை சமாளிக்க முடியும். அரசியலில் கவனமாக தான் களமாட வேண்டும்.

அனைவருக்கும் எனது உயிர் வணக்கங்கள். நாம் அனைவரும் ஒன்று. நான் மற்ற கட்சி தலைவர்களை குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பமும் தான் மாற்றம் காண வேண்டுமா? அரசியலிலும் மாற்ற வேண்டும்.இந்த மண்ணுக்காக வாழ்ந்தவர்கள் தான் நமது கொள்கை தலைவர்கள். அந்த வகையில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர் தவெக-வின் கொள்கை தலைவர்கள். பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்பதால் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

நம்மை பார்த்து யாரும் விசிலடிக்கும் கூட்டம் என சொல்லக்கூடாது. நாம் விவேகமாக செயல்பட வேண்டும். நமது வலிமையை அதில் காட்ட வேண்டும். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையில் எடுக்க மாட்டோம். சொல் முக்கியமில்லை செயல் தான் முக்கியம். அரசியலில் சமரசத்தத்துக்கோ, சண்டை நிறுத்தத்துக்கோ இடமில்லை. நமது அரசியல் நிலைப்பாடு தான் நமது எதிரி யார் என்பதை காட்டும். பிளவுவாத சக்திகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியலை எதிர்ப்பதும் தான் நமது கொள்கை.இந்த ஊழல்வாதிகள் கபடதாரிகள். கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடுவார்கள். தமிழகத்தில் சாதி இருக்கும். ஆனால் அது அமைதியாகவே இருக்கும். மக்களுக்காக நிற்பது தான் எங்கள் கொள்கை. நாங்கள் மாற்று அரசியல் என சொல்லி ஏமாற்றப் போவதில்லை. நான் எக்ஸ்ட்ரா லக்கேஜாக இங்கு வரவில்லை. தமிழகத்தை முதன்மையாக மாற்றுவதே நம் நோக்கம். இதிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை.

நாங்கள் சமூக வலைதளத்தில் கம்பு சுத்த வந்தவர்கள் அல்ல; மக்கள் நலனுக்காக வாள் ஏந்த வந்தவர்கள். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பிறரை அடி பணிய வைக்க மாட்டேன். தமிழகத்தின் வளர்ச்சியை எதிர்பார்த்து இருக்கும் மக்களுக்காக உங்களில் ஒருவனாக அரசியலில் களம் கண்டுள்ளேன்.எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள தவெக-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?

திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள். தகுதி இருந்தும் நீட் தேர்வு தடையாக உள்ளது. எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை சகோதரி அனிதாவை உயிரிழந்த போதும் நான் பெற்றேன்.எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். நான் கூத்தாடி தான். அரசியலுக்கு எம்ஜிஆர், என்டிஆர் வந்த போதும் கூத்தாடிகள் என்று தான சொன்னார்கள். கூத்து என்பது இந்த மண்ணோடும் மக்களுடன் கலந்து. நான் உங்களில் ஒருவன். கூட்டணியில் இடம்பெறுவோருக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிங்கப்படும்” என அவர் பேசினார். 45 நிமிடங்களுக்கும் மேல் விஜய் உரையாற்றினார்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement