வாழ்க வையகம்...வாழ்க வளமுடன் என்றுரைத்த வேதாத்திரி மகரிஷி!
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் (1911) நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் வேதாத்திரி மகரிஷி. . தாயிடம் பக்திக் கதைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். வறுமையால் 3-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, தறி நெய்யத் தொடங்கினார். 18 வயதில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அப்போது அறிமுகமான ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணா ராவிடம் தியானம், யோகா கற்றார். சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். 2-ம் உலகப் போரின்போது, முதலுதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறினார். இந்தக் கட்டத்தில் அவருக்குள் பல ஆன்மிகச் சிந்தனைகள் உருவாயின. கடவுள், மனிதப் பிறவியின் நோக்கம் தொடர்பாக பல கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கு விடை காணும் உந்துதலும், ஆன்மிகத் தேடல்களும் எழுந்தன. சித்தர்களின் நூல்களைக் கற்றார். ஆழ்ந்த ஆன்மிகத் தேடலின் பலனாக 35 வயதில் ஞானம் அடைந்தார். பிரபஞ்சம், மனித வாழ்க்கை பற்றி கவிதைகள், கட்டுரைகளாக இவர் எழுதியவை நூல்களாக வெளிவந்தன. விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.
பாரம்பரிய தியான, யோக முறைகளை பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைவருக்கும் ஏற்ற பயிற்சி முறைகளை வகுத்தார். குண்டலினி யோகம், எளிய உடற்பயிற்சிகள், மனத்தூய்மை அளிக்கும் சுய பரிசோதனை, முதுமையை தள்ளிப்போடும் காயகல்ப பயிற்சி இவை நான்கும் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையை வகுத்தார். இவற்றை மக்களுக்கு கற்றுத்தர பல இடங்களிலும் மனவளக் கலை மன்றங்கள், அறிவுத் திருக்கோயில்களை ஏற்படுத்தினார். எல்லா மதங்களின் சாரமும் ஒன்றே என்று வலியுறுத்தினார். ‘உலக சமாதானம்’ என்ற நூலை 1957-ல் வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
இவர் அமைத்துக் கொடுத்த ‘மனவளக்கலை’ எனும் பயிற்சி இன்றைய உலகின் மன அழுத்தத்தில் இருந்தும் டென்ஷன் முதலானவற்றில் இருந்தும் விடுவிக்க வல்லது என்கிறார்கள் மனவளக்கலையைக் கற்றுத் தரும் பேராசிரியர்கள்.’மனவளக்கலை என்பது மிக எளிமையான பயிற்சி. கிட்டத்தட்ட, இலகுவான முறையில் நாம் செய்கின்ற தவம். இந்தத் தவத்தின் பலன்கள் எண்ணிலடங்காதவை
மனிதகுலம் அமைதியுடன் வாழும் முறைகளை எடுத்துரைக்க 1958-ல் உலக சமுதாய சேவா சங்கத்தை தொடங்கினார். இது இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளிலும் இயங்கிவருகிறது. இவர் வகுத்த தியான முறைகள், கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன. பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் உட்பட பல கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தில் இவரது நூல்கள் இடம்பெற்றுள்ளன. ‘வேதாத்ரியத்தின் இறைநிலை விளக்கம்’, ‘பிரம்மஞான சாரம்’, ‘நான் யார்?’ என்பது உட்பட தமிழிலும் ஆங்கிலத்திலும் 80 நூல்களை எழுதியுள்ளார். பொள்ளாச்சி அருகே ஆழியாறில் அருட்பெருஞ்ஜோதி நகரை 1984-ல் நிர்மாணித்தார். ‘அன்பொளி’ என்ற ஆன்மிக இதழை வெளியிட்டார். ஆன்மிக நெறிகளோடு, இல்லற வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களையும் உபதேசித்தார். ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்ற போதனையுடன் பல லட்சம் மக்களுக்கு அருளுரைகளை வழங்கிய மகான் வேதாத்ரி மகரிஷி 95 வயதில் (2006) மறைந்தார்.
மகரிஷி கூறிய தத்துவங்கள் மிகவும் சிறப்பு மிக்கவை.
எண்ணங்களின் பிறப்பிடம் மனம். மனதின் இயக்கத்தை "எண்ணம்' என்ற சொல்லால் குறிக்கிறோம். எண்ண ஓட்டத்தை உணர்ந்து, விழிப்புடன் இருந்தால் வாழ்வு உயரும். அறியாமல் அதன் போக்கிற்கு விட்டு விட்டால் வாழ்க்கை தாழ்வடையும். எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும். தவறான எண்ணங்களில் இருந்து தப்பிக்கும் வழி எப்போதும் மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவதைத் தவிர வேறில்லை. விருப்பமே இல்லாவிட்டாலும் கூட, நல்லவர்களோடு தான் நாம் பொழுதைக் கழிக்க வேண்டும். எண்ணங்களை கையாளத் தொடங்கி விட்டால் எல்லாமே இன்பமயம் தான். பூரணமான அமைதி நிலை பெற்ற மனதில் ஆனந்தம் நிலைத்து நிற்கும். எண்ணமே நம் வாழ்வைச் செதுக்கும் சிற்பி என்றால் அது மிகையில்லை. எண்ணங்களைப் பொறுத்தே நம் சொற்கள் அமைகின்றன. எண்ணமும், சொல்லும் ஒன்றுபடும்போது செயல்களும் உயர்ந்தவையாக அமைந்து விடும். எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் எப்போதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
🧘♂️. பேச்சிலும் நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையற்ற மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
🧘♂️. பிரச்னைகள் ஏற்படும்போது மற்றவர்கள் முதலில் இறங்கி வர வேண்டும் என காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள்.
. எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
🧘♂️4- புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை கூறவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
🧘♂️. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
🧘♂️ . அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
🧘♂️. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
🧘♂️ மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். தயக்கத்துடனும் பயத்துடனும் பேசாமலும் இருக்காதீர்கள்.
🧘♂️மற்றவர் கருத்துகளை, செயல்களை, நிகழ்ச்சிகளையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
🧘♂️. உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கு கேட்டதை அங்கு சொல்வதையும் அங்கு கேட்டதை இங்கு சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி அது ஒருநாள் திரும்பும்.
🧘♂️. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதிடாதீர்கள். நீங்கள் முடியவே முடியாது என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்.
🧘♂️ உங்கள் கருத்துகளில் உடும் பு பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். பிடிவாதத்தை கைவிடுங்கள்.
🧘♂️அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது எல்லாவற்றிலும் மிக முக்கியம்.
🧘♂️அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.
🧘♂️ . எந்த விஷயத்தையும் பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.
🧘♂️. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை மனதார உணருங்கள்.
🧘♂️நானே பெரியவன் நானே சிறந்தவன்' என்ற அகந்தையை விடுங்கள். வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.
🧘♂️ மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் என்கிறார் மகரிஷி.
🧘♂️வாழ்க வளமுடன் என ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது என்கிறார் மகரிஷி.
தத்துவஞானி மகரிஷி பிறந்த நாள் பகிர்வு