தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பல கேள்விகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தப் போகும் `வெப்பம் குளிர் மழை`!

08:38 PM Mar 21, 2024 IST | admin
Advertisement

தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் உதவி இயக்குநராகவும், மகளிர் மட்டும் மற்றும் சுழல் இணையத்தொடரில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய பாஸ்கல் வேதமுத்து டைரக்‌ஷனில் உருவாகி இருக்கும் புதிய் படம் `வெப்பம் குளிர் மழை`. தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருவதோடு, சமூகத்தின் முக்கியமான பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இதை திரைப்படங்களில் மிக சாதாரணமாக கடந்து செல்லும் நிலையில், இதையே கருவாக எடுத்துக்கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் பல விவாதங்களை ஏற்படுத்தும் வகையில், இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் திரவ். கதாநாயகியாக இஸ்மத் பானு நடித்திருக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

எதிர் வரும் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் சூழலில் , இப்படம் குறித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக்கொண்ட தகவல்களின் சாராம்சம்:

Advertisement

டைரக்டர் பாஸ்கல் வேதமுத்து சொன்னது,

“இன்றைய சூழலில் குழந்தையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அது ஒரு பிரச்சனையே இல்லை, அது ஒரு விளைவு. ஆணும், பெண்ணும் இணைவதால் ஏற்படக்கூடிய விளைவு, அது நடப்பது நம் கையில் இல்லை என்ற போதிலும் அதை மிகப்பெரிய பிரச்சனையாக இந்த சமூகம் பார்க்கிறது, அது ஏன்? என்ற கேள்வி தான் இந்த படத்தின் கதை. டிரைலரில் இடம் பெறும் கணவன் - மனைவி இடையிலான பிரச்சனை எப்படி உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியதோ, அதுபோல் திரைப்படமும் பல கேள்விகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தும்.” என்றார்.

நாயகனும், தயாரிப்பாளருமான திரவ் சொன்னது,

“நான் ஏற்கனவே கிஷோர் சாரை வைத்து ‘மெல்லிசை’ என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். அந்த படத்தின் வெளியீட்டுக்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தான், இந்த கதை என்னிடம் வந்தது. கதை நன்றாக இருந்ததோடு, நான் பார்த்த மனிதர்களின் வாழ்க்கையை நினைவுப்படுத்தியது. குறிப்பாக என் உறவினர்களில் சிலர் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொண்டார்கள். அதனால் இந்த படத்திற்கு உதவி செய்ய முன்வந்தேன். அதன்படி படத்திற்காக இரண்டு ஹீரோக்களை நான் சிபாரிசு செய்து, அவர்களிடம் கதை சொல்ல வைத்தேன். அவர்களுக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், அவர்களுடைய தேதி சரியாக அமையாததால் அவர்களால் பண்ண முடியவில்லை. பிறகு படத்தை தயாரிக்க முடிவு செய்து, அப்போதும் ஹீரோக்களை தேடிக்கொண்டிருந்த போது அமையவில்லை. அப்போது தான் இயக்குநரிடம் நான் நடிக்கட்டுமா? என்று கேட்டேன். ஆனால், அவர் தயங்கினார். உடனே படம் தொடர்பான இரண்டு காட்சிகளை நடித்து குறும்படமாக எடுத்து அவருக்கு அனுப்பினேன். அதை பார்த்து தான் அவர் சம்மதம் தெரிவித்தார்.

நான் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரிக்கவில்லை, படத்தின் கதை தற்போதைய சூழலில் சொல்லப்பட வேண்டிய ஒன்று என்பதால் தான் தயாரிக்க முன் வந்தேன். குழந்தையின்மை என்பது தனிமனித பிரச்சனை இல்லை, சமூகம் சார்ந்த பிரச்சனை, ஆனால் நம்மை சுற்றியிருப்பவர்கள் அதைப்பற்றி பேசி பேசியே அதை தனிமனித பிரச்சனையாக உருமாற்றி, சம்மந்தப்பட்டவர்கள் மனதளவில் உடைந்துபோக செய்துவிடுகிறார்கள். அப்படி ஒரு சூழலை எதிர்கொள்ளும் நாயகன், நாயகி வாழ்க்கையை மையமாக வைத்துக்கொண்டு, குழந்தையின்மை பிரச்சனையையும் அதைச் சார்ந்த சில சம்பவங்களையும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் மக்களிடம் விவாதத்தை ஏற்படுத்தும்.” என்றார்.

ஹீரோயின் இஸ்மத் பானு சொன்னது,

“நான் மீடியா தொடர்பாக படித்துவிட்டு, மீடியாவில் தான் பணிபுரிந்தேன். பிறகு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினேன். இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தாலும் பாண்டி என்ற கதாபாத்திரமாக தான் நடித்திருக்கிறேன். என்னை ஒப்பந்தம் செய்யும் போதே, கணவன் - மனைவி இடையே இருக்கும் நெருக்கமான காட்சிகள் இருக்கும் சம்மதமா? என்று கேட்டார்கள். நெருக்கம் என்றதும் வேறு விதமாக நினைக்க வேண்டாம், தம்பதிக்குள் இருக்கும் அந்நியோன்யம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் முதலிலேயே அதை சொல்லிவிட்டார்கள். அதன்படி, நானும் பாண்டி என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நீங்கள் தான் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும். தொடர்ந்து இப்படி நாயகியாக தான் நடிப்பேன் என்று இல்லை, நல்ல நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.” என்றார்.

’குற்றம் கடிதல்’ படத்திற்கு இசையமைத்த சங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையுமே கிராமத்து வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் சங்கர், இசை படத்தின் கதாபாத்திரமாக பயணிக்கும் என்று தெரிவித்தார்.

Tags :
DhiravIsmath banuPascal VedamuthuShankar RangarajanVeppamKulirMazhai
Advertisement
Next Article