தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வீராயி மக்கள் விமர்சனம்!

01:25 PM Aug 09, 2024 IST | admin
Advertisement

முன்னொரு காலத்தில் பெற்றோர்கள் திருமணம் நடக்கும் முன்பு மணப்பெண்ணிடம்‘திருமணத்துக்குப் பிறகு ஒற்றுமையாக இருக்க வேண்டும், கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும், இப்படி இருந்தால்தான் உனக்கு நல்லது’ என்று சொல்லி சொல்லி வளர்த்தார்கள். ஆனால், இப்பொழுது அப்படி அல்ல… பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு போடும் முதல் கண்டிஷனே திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனம் வர வேண்டும் என்பதுதான். தனிக் குடித்தனமாக இருந்தால்தான் நல்லது என ஒரு தவறான கண்ணோட்டத்தை பெற்றோர்கள் வளர்த்ததும் இன்றைய தலைமுறையினர் அதைப் புரிந்து கொண்டதும்தான் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு அற்புதமான குருவிக்கூடு கலைவதற்கான காரணம். இச்சூழலில் வீராயி மக்கள் என்ற பெயரில் பிரிந்த உறவுகளை நினைத்து பார்க்க வைத்திருக்கிறார்கள். குடும்பங்கள் என்றால் பிரச்சனைகளும், பிரிவுகளும் இருப்பது சகஜம் என்றாலும், உறவுகளின் பிரிவும் அதனால் ஏற்படும் வலியும் எத்தகையது, என்பதை மக்கள் மனங்களுக்கு புரியவும் வைக்க முயன்று இருக்கிறார்கள்.

Advertisement

அதாவது ஒரு கிராமத்தில் அண்ணன், இரண்டு தம்பிகள் மற்றும் தங்கை சிறுவயதில் தாயுடன் சென்று சுள்ளி பொறுக்கி ஏழ்மையை தழுவி ஆனால் பாசம் பொங்கிட வளர்கின்றனர். காலம் செல்லும் வேகத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் ஆகின்றனர். அண்ணன் குடும்பம், தம்பி குடும்பம், தங்கை குடும்பம் என்று ஆகிறது. அதை அடுத்து மூத்த மருமகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று இளைய மருமகள் கோபம் கொண்டு எந்நேரமும் மாமியார் வீராயியுடன் சண்டைக்கு செல்கிறார். ஒரு கட்டத்தில் இது உச்சத்தை அடைகிறது. குடும்பம், சொத்துக்கள் பிரிந்த நிலையில் வீராயி மரணம் அடைகிறார் அன்று முதல் அண்ணன் குடும்பத்திற்கும், தம்பி குடும்பத்துக்கும் பகை தொடர்கிறது. இதனால் அவர்களின் பிள்ளைகள் கூட மோதிக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. வெளியூரில் இருக்கும் மூத்த அண்ணனின் மகன் அய்யனார் ( சுரேஷ் நந்தா) ஊர் திரும்புகிறான். எந்நேரமும் வீட்டில் உறவினர்களுடன் சண்டை நடப்பதை கண்டு மனம் நொந்து இவர்களை ஒற்றுமையுடன் இருக்க செய்ய முயல்கிறான். இதற்கிடையில் அத்தை மகள் மீது அய்யனாருக்கு காதல் மலர்கிறது. ஏற்கனவே தன் தங்கையை வீட்டை விட்டு துரத்தியடித்த அண்ணனுக்கு மீண்டும் அவரை தங்கையாக ஏற்க மனம் இல்லாத நிலையில் அவரது மகளை அய்யனார் எப்படி மணக்க போகிறார்? பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையுமா? என்ற உணர்வுபூர்வமான கேள்வி களுக்குஉருக்கமான பதில் அளிப்பதுதான் வீராயி மக்கள் படக் கதை.

Advertisement

மெயின் ரோலில் வரும் வேல ராமமூர்த்தி வழக்கம் போல் மிடுக்கான தோற்றத்தோடும், கோபமான பார்வையோடும் நடித்திருந்தாலும், உடன் பிறந்தவர்களுக்காக வாழும் பாசக்கார அண்ணன் என்ற மற்றொரு பரிணாமத்தில் ரசிகர்களின் மனங்களை வென்றுவிடுகிறார்.வேல ராமமூர்த்தியின் தம்பியாக நடித்திருக்கும் மாரிமுத்து, இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். கோபத்தை வெளிக்காட்டுவதாக இருந்தாலும் சரி, சொந்தங்களை உதறும் காட்சிகளாக இருந்தாலும் சரி, அத்தனை இடங்களையும் தனது இயல்பான நடிப்பு மூலம் சர்வசாதாரணமாக கடந்து செல்லும் இவரது இடத்தை நிரப்ப போவது யார்? என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறார்.

நாயகனாக வரும் சுரேஷ் நந்தா, எது தேவையோ அதை அளவாக வெளிப்படுத்தி கவர்கிறார். படத்தை அவரே தயாரித்திருந்தாலும், எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்தாமல் இயல்பாக நடித்திருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அத்தை மகளை பார்த்ததும் அவர் மீது காதல் கொண்டு காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்பவர், அண்ணனை காப்பாற்றுவதற்காக அடிதடியில் இறங்கி ஆக்‌ஷனிலும் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் நந்தனா, கிராமத்து கதைக்கு ஏற்ற முகம். காதல் காட்சிகளில் நாயகனுக்கு இணையாக நடிப்பில் அசத்துபவர், பாடல் காட்சிகளில் ஜொலிக்கவும் செய்திருக்கிறார்.

அண்ணன்களின் பாசத்திற்காக ஏங்கும் தங்கையாக நடித்திருக்கும் தீபா சங்கர் வழக்கம் போல் ரொம்பவே ஓவராக நடித்திருக்கிறார். மாரிமுத்துவின் மனைவியாக நடித்திருக்கும் செந்தி குமாரி, கணவரின் உடன்பிறப்புகள் ஒற்றுமையாக இருக்கவே கூடாது, என்று சபதம் ஏற்ற பெண்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ரமாவின் நடிப்பு அளவாக இருந்தாலும், மேக்கப் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள், ஊர் மக்களாக வருபவர்களும் மண்ணின் மனிதர்களாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.

காட்சிகளிலும் பாடல்களிலும் கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் மென்மையாக இசையமைத்து யார் இந்த இசையமைப்பாளர் என திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் தீபன் சக்கரவர்த்தி. எம் சீனிவாசன் ஒளிப்பதிவு அப்பட்டமாக வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது.

உடன்பிறபுகளின் சோகத்தை வெளிப்படுத்துவது திரைக்கதைக்கு பலமாக இருந்தாலும், அதை காரணம் காட்டி கொஞ்சம் அதிகமாக சோகம் பொழிந்திருப்பது ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. ஆனாலும் பேமிலி சப்ஜெக்ட் என்பதால் சகித்துக் கொள்ள முடிகிறது

மொத்தத்தில் வீராயி மக்கள் - வெள்ளித் திரை சீரியல்

Tags :
marimuthumovie . reviewNagaraj KaruppaiahSuresh NandhaVeerayi MakkalVela Ramamoorthyவிமர்சனம்வீராயி மக்கள்
Advertisement
Next Article