வீர தீர சூரன்-விமர்சனம் !
கோலிவுட்டையும் தாண்டி மேலும் சில வுட்-களின் சீயான் என்றழைக்கப்படும் விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ மூலம் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தார். ஆனால், அந்த ஹிட்டுக்கு அவர் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது - மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பும், பல நட்சத்திரங்களின் கூட்டு முயற்சியும் அதில் பங்கு வகித்தன. இருப்பினும், விக்ரமின் தீவிர ரசிகர்களைப் பொறுத்தவரை, அவரது தனித்துவமான நடிப்பு தான் படத்தின் உயிர்நாடி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒருக் கட்டத்தில்ப், கமர்ஷியல் தனிப்பட்ட ஹிட்டுக்கு ஏங்கிக் கொண்டிருந்த சீயானின் நீண்ட நாள் ஆசையை ‘வீர தீர சூரன்’ நிறைவேற்றி விட்டது என்றால், அது மிகையல்ல. விக்ரம் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தி விட்டதென்னவோ நிஜம்!
கதை என்னவென்றால் கோடம்பாக்க சினிமா பிரிய கதைக்களமான தூங்காநகரம் முன்னொரு சூழலில் பேரெடுத்த மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை காரணமாக வைத்து அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் புருத்விராஜ் மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சர்மூடுவை என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யா திட்டம் போடுகிறார். போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிப்பதற்காக, மளிகை கடை நடத்தி வரும் விக்ரமின் உதவியை புருத்விராஜ் நாடுகிறார். ஆனால் அடி, தடி, போட்டு தள்ளுவது என அனைத்தையும் விட்டுவிட்டு லவ்லியான ஒய்ஃப், பிள்ளைகள் என வாழ்ந்துக் கொண்டிருக்கும் விக்ரம் முதலில் மறுத்தாலும், குடும்பத்தை காரணம் காட்டி மிரட்டுவதால் அவர்களை காப்பாற்ற சம்மதித்து களத்தில் இறங்குகிறார். அண்மை காலம் வரை பெரியவரின் விசுவாசியாக இருந்த நம்ம சீயான் அவரிடம் இருந்து விலகியது ஏன்?, பெரியவர் குடும்பத்துக்கும் போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே இருக்கும் பகை என்ன? இவற்றில் சிக்கிக்கொண்ட விக்ரம் இந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறார்? என்பதை அதிரிபுதிரியான ஆக்ஷன் காட்சிகள் மூலம் சொல்வதே ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படக்கதை.
கதையின் ஆரம்பத்தில், சாதாரண மனிதனாகத் தோன்றும் நாயகன் விக்ரம், சூழ்நிலைகளால் தன் உள்ளிருக்கும் வீரத்தை வெளிப்படுத்துகிறார். பழிவாங்கும் தீயாக மாறி, எதிரிகளை வேட்டையாடும் அவரது பாத்திரம், சீயானின் உடல் மொழியிலும், கண்களிலும் தீப்பொறிகளைப் பறக்க விடுகிறது. கிராமத்து பின்னணியில் தொடங்கி, நகரத்து ஆக்ஷன் வரை பயணிக்கும் கதை, பார்வையாளர்களை ஒரு ரோலர் கோஸ்டர் சவாரியில் அழைத்துச் செல்கிறது. விக்ரமின் மேஜிக். பொதுவாகவே விக்ரம் என்றாலே எதிர்பார்ப்பு எகிறும். இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம், அவரது ரசிகர்களுக்கு தீனி போடுவதோடு, புதிய பார்வையாளர்களையும் கட்டிப்போடுகிறது. ஒரு பக்கம் கம்பீரமான தோற்றம், மறுபக்கம் உணர்ச்சிகரமான நடிப்பு - இவை இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து, திரையில் மிரட்டுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது சுறுசுறுப்பு, வயதை மறந்து ஓட வைக்கிறது. ‘சீயான்’ என்ற பட்டத்துக்கு மீண்டும் ஒருமுறை நியாயம் செய்திருக்கிறார். ஹீரோவின் ஒய்ஃபாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், பயம் கலந்த தனது தவிப்போடு, தப்பிக்க வேண்டும் என்ற தனது முயற்சியை பர்ஃபெக்டான பதற்றத்துடன் வெளிப்படுத்துவது உள்ளிட்ட சீப்களில் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பதோடு, தாக்குதலுக்கு ஆளான கணவரை காப்பாற்ற முயன்று அடிவாங்குவது, கணவருக்காக கையில் கத்தி எடுப்பது என அட்டே சொல்ல வைத்து விடுகிறார்.
வழக்கம் போல போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கும் முதிர்கண்ணன் எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் புது பாணியில் பட்டையை கிளப்பியிருக்கிறார். பகை மற்றும் சூழ்ச்சியை மையமாக கொண்டு ட்ராவல் செய்யும் ரோலில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நிலை நிறுத்தியிருக்கிறார்.பெற்ற மகனை காப்பாற்றுவதற்காக போராடும் புருத்விராஜ், போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, இவர்களது குடும்ப பெண்கள் என அனைவரும் மிகச் சரியாக தங்கள் பங்களிப்பை வழங்கி பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்கள். அதிலும் டயலாக்கில் மலையாள வாடை அடித்தாலும்,சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. வியர்த்து நடுங்குவது, போலீஸில் மாட்டியதும் முழிப்பது, சந்தேகத்தில் பதறுவது என எல்லாத்திலும் சிக்சர் வெளுக்கிறார். பிருத்விக்கு இது, அவர் ஏற்கனவே புதுப்பேட்டை கதாப்பாத்திரத்தை ரிமைண்டர் பண்ணுகிறது என்றாலும், இதில் வேறொரு கோணத்தைக் காட்டியிருக்கிறார்.
நம்ம மதுரை பையன் கேமராமேன் தேனி ஈஸ்வர் தான் ரொம்ப உசரத்துக்கு போய்க் கொண்டே இருக்கிறார். முக்கால்வாசி படம் இரவிலேயே நடக்கிறது. எந்த செயற்கைத்தனமும் இல்லாமல் நிஜமாகவே ஒரு இரவில் நாம் இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கிறோம் என்ற அளவுக்கான நெருக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அதிலும் சிங்கிள் ஷாட் காட்சி ... வாவ் சொல்ல வைத்து விடுகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபுவின் சண்டைக்காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக இருப்பதோடு ரியலாக இருக்கிறது. அதிலும், இறுதிக் காட்சியில் நடக்கும் பயங்கரமான சம்பவத்தை வெறும் சண்டைக்காட்சியாக மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் கோபம் மற்றும் வெறுப்பையும் வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார்.
மியூசிக் டைரக்டர் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை அளவுக்கு பாடல் எடுபடவில்லை.. !
முதல் காட்சியில் இருந்தே கதைக்குள் சென்றுவிட வேண்டும் என கச்சிதமாக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ் யு அருண்குமார். ஒரே இரவில் நிகழும் கதை என்பதால், காட்சிகள் ஒவ்வொன்றையும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். முதல் அரைமணி நேரம் கதையில் களத்தையும், அதில் உள்ள சிக்கல்களையும் அழுத்தமாக பதிவு செய்துவிட்டு அதன் பின்னர் ஹீரோவை அறிமுகம் செய்து சட்டென கதைக்குள் கொண்டு வந்த விதமும் சிறப்பு.ஆனால் , கதையில் சில இடங்களில் லாஜிக் தடுமாறுகிறது. இரண்டாம் பாதியில் சற்று நீளமாகத் தோன்றும் திரைக்கதை, சிறு சறுக்கலை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, பக்கத்துணை கதாபாத்திரங்களுக்கு போதுமான ஆழம் கொடுக்கப்படவில்லை என்பது ஒரு குறை.
மொத்தத்தில் ‘வீர தீர சூரன்’ விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு விருந்து. கமர்ஷியல் சினிமாவின் அத்தனை அம்சங்களையும் தாங்கி, திரையரங்கில் கைதட்டல்களை அள்ளுகிறது. சில குறைகள் இருந்தாலும், விக்ரமின் ஆளுமையும், படத்தின் வேகமும் அதை மறக்கடிக்கின்றன. தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வெற்றி வீரனாக உலா வருகிறார் சீயான்!
மார்க்: 3.5/5