வானும் மண்ணும்-2024 வேளாண் அறிவியல் மாநாடு!
அக்ரிசக்தி ஒருங்கிணைத்து நடத்திய வானும் மண்ணும் - 2024 வேளாண் அறிவியல் மாநாடு ஜீலை 27ம் தேதி (நேற்று) கிருஷ்ணகிரியில் உள்ள நாளந்தா சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இம்மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFPRI) திறன் மேம்படுத்துதல் பிரிவின் தலைவர் மற்றும் மூத்த விஞ்ஞானி முனைவர் சுரேஷ் பாபு அவர்கள், தமிழக விவசாயிகள் காலநிலை மாற்றத்தை எவ்வாறு கையாள வேண்டும், வேளாண்மையில் என்னென்ன உத்திகளை பின்பற்றி கார்பன் உமிழ்வைக் குறைக்கலாம் என்று எடுத்துரைத்தார்.
அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் சுரேஷ் குமார் அவர்கள், தமிழ்நாட்டில் கார்பன் வரவு சந்தைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றினார்.
ஸ்டார்ட்அப் தமிழ்நாடு நிறுவனத்தின் செந்தமிழ் அரசன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் ஸ்டார்டப் தமிழ்நாடு நிறுவனம் தொழில்முனைவோருக்கு வழங்கும் திட்டங்கள், பயிற்சிகள் மற்றும் சந்தைப்படுத்தும் உத்திகள் குறித்து விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்களிடம் கலந்துரையாடினார்கள்.
அடுத்தாக நடைபெற்ற குழு விவாதத்தில் முனைவர்கள் சுரேஷ் பாபு, சுரேஷ் குமார், சரவணக்குமார், ஆனந்த ராஜா மற்றும் அக்ரிசக்தியின் ஆசிரியர் மு. ஜெயராஜ் ஆகியோர் பங்கேற்று கார்பன் வரவு நுட்பத்தால் விவசாயிகளுக்கு என்ன பயன், கார்பன் கணக்கிடும் முறை, மரப்பயிர்கள் வளர்ப்பில் உள்ள சவால்கள் குறித்து உரையாடினார்கள்.
அடுத்ததாக பெங்களுரில் உள்ள இந்தியத் தர நிர்ணய ஆணையத்தின் அதிகாரிகள் வேளாண் பயிர்களுக்கான தரக்கட்டுப்பாடு குறித்து உரையாடினர். வெட்டிவேர் சாகுபடி குறித்து இந்தியா வெட்டிவேர் பவுண்டேசன் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் உரையாற்றினார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பத்திரிக்கையாளர் நன்மாறன் அவர்கள் உரையாற்றினார்.
இறுதியாக மாநாட்டின் நிறைவு உரை ஆற்றிய செல்வமுரளி, விவசாயிகளுக்குத் தேவையான எல்லா ஒத்துழைப்பையும் அக்ரிசக்தி வழங்கும், அக்ரிசக்தி துவங்க இருக்கும் இணையச் சந்தைக்கு அனைவரும் தர வேண்டும் என்றும் உரையாற்றினார்.
இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழில் முனைவோர், வேளாண் துறை வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 22 கண்காட்சி அரங்கங்களை அனைவரும் பார்வையிட்டு பயன்பெற்றனர். இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அக்ரிசக்தி நிறுவனர் செல்வமுரளி, நாளந்தா சிபிஎஸ்இ பள்ளியின் மேலாண்மை இயக்குநர் புவியரசன், அக்ரிசக்தி ஆசிரியர் குழுவின் ஜெயராஜ், வினோத் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.