தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

'வானொலி அண்ணா' என்.ஜி.ஞானப்பிரகாசம் காலமானார்!

07:00 PM Jan 25, 2024 IST | admin
Advertisement

சொல்லிலே கலை வண்ணம் காட்டும் பல்கலை வித்தகர் என்.சி.ஞானப்பிரகாசம் அவர்கள், சினிமா நேரம் நிகழ்ச்சி தயாரிப்பாளர். நாடறிந்த எழுத்தாளர்.வானொலி அண்ணாவாக பிஞ்சு நெஞ்சங்களில் அறிவு தீபம் ஏற்றியவர். பாடகர். நகைச்சுவை கலைஞர். எல்லாப் பின்னணிப் பாடகர்களின் குரலையும் தன் குரலில் வைத்திருந்தவர். திருப்புமுனை படத்தின் முலம் நல்ல நடிகராகவும் தம்மை இனங்காட்டியவர்.பத்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளவர்.

Advertisement

நுகர்வோர் இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவர். நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திற்குச் சென்று அங்கு நடைபெற்ற வழக்குகளைக் கேட்டறிந்து.... அந்த வழக்கின் விபரங்களை சிறந்த நாடகமாக்கி ஒலிபரப்பி... வானொலி மூலம் நுகர்வோர் விழிப்புணர்வை வளர்த்தவர்.நுகர்வோர் உரிமைகள்உண்மைச் சம்பவங்கள் என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய குழந்தைகள் நூலுக்கும், நுகர்வோர் நூலுக்கும் அரசு பரிசு கொடுத்துப் பாராட்டியதுடன், பள்ளிக்கூட மாணவர்களுக்கான துணைப்பாடத்தில் தந்தை பெரியார் பற்றிய இவரின் சிறப்புக் கதை இடம் பெற்றுள்ளது. எம்மதமும் சம்மதம் என்ற கருத்து கொண்ட ஞானபிரகாசத்துக்குப் பிடித்தது மனிதர்களை நேசிப்பது. திறமை எங்கிருந்தாலும் தேடிச்சென்று தட்டிக் கொடுத்து வளர்க்கும்தாயுள்ளம் கொண்டவர்.

Advertisement

நம் சென்னை வானொலியில் ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஒலிபரப்பாகிறது என்று வைத்துக் கொள்வோம். அது ஒலிபரப்பாக ஆரம்பித்து 6 மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் அந்த நிகழ்ச்சியில் மாற்றங்கள் செய்யப்படலாம். அல்லது அந்த நிகழ்ச்சிக்கு கட்டாய ஓய்வு கொடுத்து விடுவர். ஆனால்.. ஒரு காலக் கட்டத்தில். ‘ இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி அதற்கெல்லாம் விதிவிலக்காக திகழ்ந்து சரித்திரத்தையே மாற்றி அமைத்தது. வானொலி உலகில் தமிழகம் முழுவதும் தனக்கென்று தனி இடத்தைப் பெற்று தக்க வைத்துக் கொண்டிருந்தவர் தென்கச்சி. கோ. சுவாமிநாதன் அவர்கள். அவர்தான் வானொலியின் சூப்பர் ஸ்டார்.(ஒரு சூப்பர் ஸ்டார் என்பவர் இருந்தால் ஒரு சுப்ரீம் ஸ்டார் என்றும் ஒருவர் இருப்பார் அல்லவா?... அது தான் ‘சினிமா நேரம்’ நிகழ்ச்சி அமைப்பாளர் என். சி. ஞானப்பிரகாசம் அவர்கள் )

அவரிடம் ஒரு முறை சென்னை மாநகர பண்பலை வரிசையில் ‘சினிமா நேரம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூழ்நிலை எப்படி உருவானது ? என்ரு கேட்ட போது``2000ஆண்டில் ஜீன் மாதம் வானொலி இயக்குநர் திரு. பி. ஆர். குமார் அவர்கள் என்னை அழைத்து "பண்பலை வரிசையில் காலை ஒரு மணி நேர; சினிமா சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை செய்யும்படி சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டதும் ஒரு பக்கம் மகிழ்ச்சி. மறுபக்கம் மருட்சி! ஏனென்றால், சினிமாவில் நடித்து... பாடி... புகழ் பெற வேண்டும் என்ற ஆதங்கத்தால்தான் நான் சென்னைக்கு வந்தேன். ஆனால் அது எட்டாத வானத்தில் கிட்டாத நிலவாக இருந்தது. எப்படியாவது கிட்டாத நிலவை பிடித்துக் கிள்ளுவது இயலாத காரியம் என்பதை புரிந்து கொண்ட நான் வானொலி உலகில் நுழைந்தேன்.

பொதுவாக தீபாவளி, பொங்கல், புதுவருடம் போன்ற பண்டிகை நாட்களில் திரைக் கலைஞர்களை நிலையத்துக்கு வரவழைத்து அவர்களுடன் "சிறப்பு விருந்தினர் சந்திப்பு" நடக்கும். நினைவு தெரிந்த நாளாக சென்னை வானொலி நிலையத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருந்தது.தினமும் சினிமாக் கலைஞர்களை நிலையத்திற்கு வரவழைத்து நிகழ்ச்சியை வழங்குமாறு நிலைய இயக்குனர் கட்டளை இட்டதும் மகிழ்ச்சி ஒரு பக்கம், மருட்சி ஒரு பக்கம்.

சினிமாக் கலைஞர்களை பிடிப்பது என்பது குதிரைக்குக் கொம்பு முளைப்பது போன்றது. அத்தைக்கு மீசை முளைப்பது போன்றது. பசியோடு இருந்தாலும் பிசியென்று சொல்லிக் கொள்ளும் பண்புள்ள கலைஞர்கள். இப்படிப் பட்டவர்களை வைத்துக்கொண்டு எப்படி செயலாற்றுவது என்று மூளையை கசக்கத் தொடங்கினேன்.முன்னணிக் கலைஞர்கள் பின்னால் ஓடியோடி அசதி ஏற்பட்டு அலுவலகம் போகாமல் ஆஸ்பத்திரிக்குப் போவதைவிட; திரையுலகின் பின்னணிக்கலைஞர்களின் கனவுகளையும், கலையாத கலை ஆர்வங்களையும், தாகத்தையும், ஏக்கங்களையும் குமுறல்களையும், கொந்தளிப்புகளையும், அனுபவப் பதிவுகளையும், பாடங்களையும் சுவைபடச் சொல்லும் விதத்தில் வித்தியாசமாக நிகழ்ச்சியை அமைத்தால் என்ன என்று ஒரு தீப்பொறி !

எனது எண்ணமும், இலக்கும், உழைப்பும் முழுநிறைவான பலனைத் தந்தது. அதற்குப் பிறகு திரை உலகில் இருக்கும் ஏறக்குறைய 26 பிரிவுகளிலும் உள்ள பல கலைஞர்கள் ‘சினிமா நேரம்’ நிகழ்ச்சிக்கு பெருமையுடன் வந்து கலந்து கொண்டார்கள். கதாநாயகன், கதாநாயகி, கதாசிரியர், வசனகர்த்தா, எடிட்டர், பாடகர், இசையமைப்பாளர்.... என தினமும் ஒரு கலைஞர் வருகை தந்து நேரடி ஒலிபரப்பில் கலந்து கொண்டனர்.

நட்சத்திரங்கள் ஸ்ரீவித்யா, ஸ்ரீப்ரியா, தலைவாசல் விஜய், அஜய்ரத்னம், மதன்பாப், இயக்குனர்கள் - ஏ.சி.திருலோகச்சந்தர், எஸ்.பி. முத்துராமன், பாரதிகண்ணன் மற்றும் பலர் ‘சினிமா நேரம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்

அதே திரைப்படங்களால் வி.ஐ.பிக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ..திரைப்பட ப் பாடல்களால் ஏதேனும் ஒரு நிலையில்... எங்கேனும் ஒரு சம்பவத்தால் அவர்கள் மனது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். அந்த ஊஞ்சலாடிய நினைவுகளை நேயர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று, நாம் வேண்டுகோள் விடுத்தபோது....‘சினிமா நேரம்’ வி.ஐ.பி. நேரமாகவும் மாறியது. அந்த சினிமா நேர நிகழ்ச்சியில்... உங்களால் மறக்க முடியாத சம்பவங்கள்? ஏதுமுண்டா? எனக் கேட்டால் நிறைய உண்டு. 17-1-2001 அன்று எம்.ஜி. ஆர். அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய ‘சினிமா நேரம்’ நிகழ்ச்சியை சிறப்பு நிகழ்ச்சியாக புதுமையாகவும் சிறப்பாகவும் வழங்கினோம்.

அதாவது எம்.ஜி.ஆர். அவர்களைப் பேட்டி காண்பது போல அந்த நிகழ்ச்சியை நாம் அமைத்திருந்தோம். எம்.ஜி.ஆர். ஆற்றிய சொற்பொழிவுகளில் இருந்து முக்கியமான பகுதிகளை பிரித்தெடுத்து... அதற்குப் பொருத்தமான கேள்விகளை உருவாக்கி... அந்த நிகழ்ச்சியை மிகுந்த பிரயாசையுடன் உருவாக்கினோம். உண்மையாகவே எம.ஜி.ஆரை நீங்கள் பேட்டி கண்டது போல் நிகழ்ச்சி யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருந்தது என்று ஆயிரக்கணக்கான நேயர்கள் பாராட்டிய போது மனதுக்கு நிறைவாக இருந்தது என்றார் என்.சி.ஞானப்பிரகாசம் அவர்கள்.

இப்பேர்பட்ட அண்ணா ஞானப்பிரகாசம் இன்று காலமானார்..அவரின் மறைவுக்கு ஆந்தை ரிப்போர்ட்டர்  சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்🙏

Tags :
'Vanoli Anna'All India RedioNG GnanaprakasamPassed Away |rj
Advertisement
Next Article