For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சென்னை சென்டிரல்–அரக்கோணம், கடற்கரை–செங்கல்பட்டு இடையே வந்தே மெட்ரோ ரயில் சேவை ஜூலையில் சோதனை ஓட்டம்!.

06:57 PM May 01, 2024 IST | admin
சென்னை சென்டிரல்–அரக்கோணம்  கடற்கரை–செங்கல்பட்டு இடையே வந்தே மெட்ரோ ரயில் சேவை ஜூலையில் சோதனை ஓட்டம்
Advertisement

சென்னையில் பெரும்பாலான மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக இருப்பது மின்சார ரயில் சேவை. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருப்பதி வரையும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருமால்பூர் ஆகிய இடங்களுக்கும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இனி இந்த பாதையில் சொகுசு ரயில்களை இயக்க இந்திய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அதன்படி வந்தே மெட்ரோ ரயிலை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க இந்திய ரெயில்வே வாரியம் முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி விரைவில் சென்னை கடற்கரை–தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து அரக்கோணத்திற்கும் வந்தே பாரத் ரயிலில் செல்லும் வாய்ப்பு பயணிகளுக்கு கிடைக்கும்.

Advertisement

இது குறித்து இந்திய ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘வந்தே பாரத் ரயில்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, மாநகருக்குள் போக்குவரத்து முறையை மாற்றியமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு உள்ளது. அதன்படி, முக்கிய பாதைகளில் இயக்கப்படும் மின்சார பயணிகள் ரயில்களுக்கு பதிலாக, நாட்டில் முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நகரவாசிகளின் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வந்தே மெட்ரோ பல புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும்.

Advertisement

குறிப்பாக, இந்த ரெயிலுக்கான பெட்டிகள் ஒரு தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அதில் 4 பெட்டிகள் ஒரு யூனிட்டைக் கொண்டிருக்கும். குறைந்தபட்சம் 12 பெட்டிகள் கொண்ட ஒரு வந்தே மெட்ரோ ரயில் உருவாக்கப்படுகிறது. மாநகரின் தேவையை பொறுத்து 16 பெட்டிகள் வரை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த மெட்ரோ ரயிலில் தானியங்கி கதவுகள் மற்றும் அதிக வசதியுடன் தற்போது இயங்கும் மெட்ரோ ரயில்களில் இல்லாத பல அம்சங்கள் இடம் பெறும். வந்தே மெட்ரோ ரயிலின் வேகத்தை குறைப்பதற்கான சமீபத்திய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், குறைந்த நேரத்தில் அதிக நிறுத்தங்களில் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டே இதனுடைய சேவையை கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் நாடு முழுவதும் முதல் கட்டமாக 124 நகரங்களை இணைக்கும். 100 முதல் 250 கி.மீ. தூரத்திற்கு அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. குறிப்பாக, லக்னோ–-கான்பூர், ஆக்ரா-–மதுரா மற்றும் திருப்பதி-–சென்னை உள்ளிட்டவை அடங்கும். ரயில்கள் பெரிய நகர்ப்புற மையங்கள் மற்றும் செயற்கைகோள் நகரங்களுக்கு இடையே பயணிகளை ஏற்றிச்செல்வதில் கவனம் செலுத்தும். இந்திய ரயில்வேயின் தற்போதைய தடங்களில் இயங்கும். பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. வருகிற ஜூலை மாதம் அதனுடைய சோதனை ஓட்டத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அதற்கு பிறகு இந்த தரமான சேவைகள் நாட்டு மக்களுக்கு விரைவில் கிடைக்க உள்ளது. இந்த ரயிலில் உள்ள கூடுதல் அம்சங்களின் விவரங்கள், படங்களுடன் கூடிய தகவல்கள் விரைவில் பொதுமக்களுக்காக அதிகாரப்பூர்வமாக இந்தியன் ரயில்வே வெளியிடும்’ என்றனர்.

இதுகுறித்து பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை அதிகாரிகள் கூறும்போது, ‘வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வரும் நிலையில், இந்திய ரெயில்வே வாரியம் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் குறுகிய தூரத்தில் இயக்குவதற்கான வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகள் பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் எப்போது சேவைக்கு வரும், சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடங்கிய முறையான அறிவிப்பை இந்திய ரயில்வே வாரியம் அறிவிக்கும்’ என்றனர்.

Tags :
Advertisement