For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சங்கிகளிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படும் வள்ளுவர்!

12:46 PM Jan 17, 2024 IST | admin
சங்கிகளிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படும் வள்ளுவர்
Advertisement

பாவம், வள்ளுவர்! இன்று சங்கிகளிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறார். நமது ஆளுநருக்கு காவிமேல் அப்படியொரு பிரியம். அந்தப் பிரியத்தில் அவர் காவி கட்டிக் கொண்டு வானப்பிரஸ்தமோ சந்நியாசமோ மேற்கொள்வதில் நமக்கு எந்தப் பிரச்னையுமில்லை. வாழ்த்தி வழியனுப்பவும் தயாராயிருக்கிறோம். ஆனால், அவர் காவியைத் தான் உடுத்தாமல், பிறருக்கு - அதுவும் உலகம் வியக்கும் வள்ளுவனுக்கு உடுத்திவிடுவதில்தான் பிரச்னை; சர்ச்சை எல்லாம். நேற்று சன்நீயூஸ் சேனலில் இதுபற்றித்தான் ஒரு விவாதம். விவாதம் என்றால் சங்கிகள் சும்மா விடுவார்களா?

Advertisement

‘மெய்யெலாம் நீறுபூசி வேணிகள் முடித்துக்கட்டி
கையினில் படைகரந்த புத்தகக் கவளிஏந்தி
மைபொதி விளக்கேஎன்ன மனத்தினுள் கறுப்புவைத்து
பொய்தவ வேடம்கொண்டு புகுந்தனன் முத்தநாதன்’
(தன் உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு, சடைகளை முடித்துக் கட்டிக்கொண்டு, கையிலே படையை மறைத்து வைத்துப் புத்தகம் போற்கட்டிய புத்தகப்பையை எடுத்து ஏந்திக்கொண்டு, மையினை உள்ளே பொதிந்து வைத்து வெளியே ஒளியினைச் சிந்தும் விளக்கே என்று சொல்லும்படி, மனத்தினுள்ளே வஞ்சனையைப் பொதிந்து வைத்துப் பொய்யினை மறைத்த தவவேடங் கொண்டு அந்நகரினுள்ளே முத்தநாதன் என்ற அவ்வரசன் புகுந்தனன்.) என்று பெரியபுராணத்தில் முத்தநாதன் பொய் வேடத்தில் புகுந்ததுபோல், ‘அரசியல் விமர்சகர்கள்’ என்ற போர்வையில் சங்கிகளும் புகுந்துவிடுவார்கள். இதுதான் சன்நியூஸ் விவாதத்திலும் நடந்தது.

Advertisement

திருக்குறள் பற்றிப் பேசுபவர்கள், பொதுவாக பரிமேலழகர், மணக்குடவர், மு. வரதராசனார், கலைஞர், சாலமன் பாப்பையா போன்றோர் எழுதிய உரைகளைத்தான் மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். ஆனால் அந்த விவாதத்தில் ஒருவர், யாருடைய உரையை மேற்கோள் காட்டிப் பேசினார் தெரியுமா? டாக்டர் இரா. நாகசாமி. யார் இவர்? தமிநாடு அரசின் தொல்லியல்துறை இயக்குனராகப் பணியாற்றியவர். கலைமாமணி, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றவர். என்றாலும் கடைசியாக ஊழல் புகாரில் சிக்கி, ஒரு காவி கொடுத்த அழுத்தத்தால் அதிலிருந்து மீண்டவர். அந்த நேரத்தில் அவரை நான் சந்தித்தபோது, ‘சொல்வதற்கு எதுவுமில்லை’ என்று மிகவும் பணிவோடு பேச மறுத்து விட்டவர்.

இப்படி இவரைப் பற்றி நான் சொல்லுவதைவிட, தமிழ் விக்கிபீடியாவில் என்ன போட்டிருக்கிறது என்பதை இங்கே அப்படியே சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இதோ:

‘இவர் (நாகசாமி) பக்கச்சார்பு மிக்கவர் இவர் அனைத்தையும் சமஸ்கிருதக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. இவர் தமிழ்மொழி, தமிழ் வரலாறு, திருக்குறள் போன்றவற்றின் மீது மிகுதியான திரிபுகளை மேற்கொண்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.இதற்கு எடுத்துக்காட்டாக “தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் கண்ணாடி” (The Mirror Tamil and Sanskrit) என்ற பெயரில் இவர் எழுதிய நூலில், தமிழின் எழுத்து முறை பிராமணர்களிடமிருந்து பெறப்பட்டது என்றும் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலியவை சமஸ்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்றும் கூறியுள்ளார். மேலும் செம்மொழிக்கான தகுதிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளவை எதுவும் தமிழுக்கு இல்லை என்றும், தொல்காப்பியம் நூல் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்றும், தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றுத்தான் செம்மொழியாக வளர்ந்தது என்றெல்லாம் கூறியுள்ளார். இவர் செய்த மற்றொரு திரிபானது வேதங்களின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று இவரால் எழுதப்பட்ட ஆங்கில நூலாகும். அதற்கு இவர் எழுதிய விளக்கங்களையும், திரிபு வேலைகளையும் கண்டு தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சியடைந்து, கண்டனங்களை வெளியிட்டனர்.’

நாகசாமியின் ‘குலமுறைகிளத்துப்படலம்’ பற்றி, விக்கிபீடியா இப்படித்தான் சொல்லுகிறது. இவர் உரையைத்தான் ஒருவர் உதாரணம் காட்டிப் பேசுகிறார் என்றால், அவர் எப்படிப் பட்டவராக இருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ஆக, நம் தொன்மத்தை அழிப்பதற்கு, எப்படியெல்லாம் ஒரு கூட்டம் தயார் படுத்தப் படுகிறது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

செ. இளங்கோவன்

Tags :
Advertisement